Home 2016 ஏப்ரல் சும்மா மொக்க போடாதீங்க
சனி, 10 ஜூன் 2023
சும்மா மொக்க போடாதீங்க
Print E-mail

செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலுள்ள பெரியார் நகரில், அய்ந்தாம் வகுப்பில் பயிலும் கோகிலாவின் பக்கத்து வீட்டிற்கு புதிதாக ஒருகுடும்பம் வாடகைக்கு வந்தது. கோகிலா வெகு சீக்கிரத்தில் அந்த வீட்டிலிருந்த “என்சோட்டு வாண்டுகளா...” என்ற வகையில் நட்புகொண்டு விட்டாள்.

அடிக்கடி ஒரு பெரிய டெலஸ்கோப் மூலம் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுத் தாத்தாவுடனும் உடனே நட்புக்கொண்டு விட்டாள். இப்பொழுது கோகிலா கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரமுள்ள செவ்வாய் கிரகத்தையே பார்த்துவிட்டாள். விண்வெளியில் பறந்த  டெலஸ்கோப்பான கெப்ளரைப் பற்றியும், அது கண்டுபிடித்துக்கொடுத்த அண்டவெளியைப் பற்றிய ஏராளமான அரிய தகவல்களையும் தெரிந்து கொண்டாள்.

2016 பிப்ரவரி முதல் வார நிலவரப்படி 2,056 கோள்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாம். இவை  சூரியக் குடும்பத்தைப் போன்று வெவ்வேறு விண்மீன்(நட்சத்திரங்)களை சுற்றி வருபவையாம். இவை தவிர சுமார் 4,700 உத்தேசமான கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாம். அந்தக் கெப்ளர் தொலைநோக்கி மிகப்பெரிய கில்லாடியாம்.

அது ஒரு வெறுமனே படம் மட்டும் எடுத்து அனுப்புவதில்லை, ஒரு குறிப்பிட்ட கிரகம் சுற்றி வருகின்ற விண்மீனிலிருந்து எவ்வளவு  தொலையில் உள்ளது, அந்த கோளின் சுற்றுப்பாதை, அந்த விண்மீனை ஒரு தடவை சுற்றி முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகின்றன. கோளின் நிறை, அதன் குறுக்களவு, அதன் அடர்த்தி, விண்மீனின் நிறை, அதன் வெளிப்புற வெப்பம் இப்படியாக பலப்பலத் தகவல்களை சேகரித்து வந்துள்ளதாம். கோகிலா மெய்மறந்துபோய் இந்தத் தகவல்களை கேட்டுக்கொண்டே...யிருந்தாள். அவளைப் பொறுத்தவரையில் கெப்ளர் தொலைநோக்கியை தனக்குப்பிடித்த ஒரு கதாநாயகியாகவே கற்பனை செய்துகொண்டு விட்டாள்.

அப்படியொருமுறை டெலஸ்கோப்பில் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் கோகிலா ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டாள். அதாவது, “ஏன் தாத்தா இங்கிருந்து பார்க்கும் போது நட்சத்திரம் பிரகாசமா தெரியுதே, இதனால பக்கத்தில் இருக்கிறது எதுவும் தெரியாதே. அதாவது, ஒரு பெட்ரோமேக்ஸ் விளக்குக்கு அருகே நின்றால் அந்த விளக்கின் வெளிச்சம் காரணமாக, பக்கத்தில் நிற்பவரின் முகம் தெளிவாகத் தெரியாதல்லவா?

பெட்ரோமேக்ஸ் வெளிச்சத்தை ஒரு கையால் மறைத்துக்கொண்டு பார்த்தால்தானே பக்கத்திலிருக்கும் மனிதர்கள் தெரிவார்கள். அதே மாதிரிதானே இந்த டெலஸ்கோப் மூலம் விண்வெளியிலுள்ள நட்சத்திரத்தை பார்த்தால், அந்த நட்சத்திரத்தின் வெளிச்சம் காரணமாக பக்கத்திலிருக்கும் கோள்கள்கூட சரியாகத் தெரியாதுதானே?” என்று  கேட்டுவிட்டாள். தாத்தாவும் ஆடிப்போய்விட்டார்.

அன்றிலிருந்து கோகிலா தாத்தாவின் மதிப்புமிகுந்த நண்பர்களில் ஒருவராக மாறிவிட்டாள். “தென் அமெரிக்காவில் சிலி நாட்டிலுள்ள ஜெமினி சவுத் டெலஸ்கோப்பில் இவ்விதமாக நட்சத்திரத்தை மறைத்துக்கொண்டு அருகே இருக்கின்ற கிரகத்தைப் பார்க்கின்ற வசதி செய்யப்பட்டிருக்கிறது.” என்று பதிலும் சொல்லிவிட்டார்.

அடுத்தவாரம் விண்வெளித் தாத்தாவோடு அந்த வீட்டுக்காரர்கள் எல்லோரும் சுற்றுலா சென்றிருந்தார்கள். கோகிலாவின் தந்தை அவருடைய அலுவலகத்தில் மிகவும் மும்முரமாக பணியிலிருந்த நேரத்தில், அவரது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. வெறுப்புடன் எடுத்துப்பேசினார். “கோகிலாவோட அப்பாவா?” என்றது மறுமுனை. இவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், “ஆமாம்! நீங்க யாரு?” என்றார்.

“ம்... விண்வெளித் தாத்தான்னு சொன்னா கோகிலா புரிஞ்சுப்பாங்க!” என்றது. “சார்... எனக்கு நிறைய வேலையிருக்கு. விசயம் என்னன்னு சட்டுன்னு சொல்லிட்டிங்கன்னா நன்றாக இருக்கும்” என்று ஏறக்குறைய எரிந்துவிழுந்தார். நிலைமையைப் புரிந்துகொண்ட தாத்தா, “சரிசரி, பிரபஞ்சம் பேசிடிச்சுன்னு உங்க பொண்ணுகிட்ட சொல்லிடுங்க.” என்று சொல்ல, பிரபஞ்சமாவது பேசறதாவது என்று தொண்டைவரை வந்துவிட்ட வார்த்தைகளை நிறுத்திக்கொண்டார்.

கைப்பேசி இன்னமும் தொடர்பில்தான் இருந்தது. கோகிலாவின் அப்பா மீண்டும், “சார், யார் நீங்க? எங்கிருந்து பேசறீங்க? சொல்றதைக் கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க?” என்று சலிப்புடன் கேட்க, “நான் உங்க பக்கத்து வீட்டுக்காரன்தான். பேரு விண்வெளித் தாத்தாதான். இந்தப்பேரும் உங்க பொண்ணு வச்சதுதான்.

அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்தியே பார்க்கலையா? நான் நினைக்கிறது சரின்னா, நீங்க சொல்றதுக்கு முன்னாலேயே கோகிலா இதைப்பத்தி தெரிஞ்சுகிட்டிருப்பாங்க! ஆனாலும், இதை நான் சொன்னதாக கோகிலாகிட்ட சொல்லிடுங்க.” என்று கூறிவிட்டு, சட்டென்று தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

கோகிலாவின் அப்பா அடுத்தென்ன பேசுவது என்று நினைத்துக் கொண்டிருக்கையில், மீண்டும் கைப்பேசி சிணுங்கியது. இதென்னடா வம்பு என்பதுபோல எடுத்துப் பார்த்தார். இம்முறை வீட்டு எண். தன்னுடைய மனைவிதான் பேசுகிறார் என்று எண்ணி, “சொல்லும்மா!” என்றார்.

ஆனால், “அப்பா நான் கோகிலா பேசறேன்” என்று மகளின் குரல் கேட்டதும் இன்னமும் ஆச்சர்யப்பட்டு போய், “என்னம்மா இந்த நேரத்திலே?” என்று கேள்வியை முடிப்பதற்குள், “அப்பா, பிரபஞ்சம் பேசிடிச்சாம்பா, நீங்க படிச்சீங்களா?” என்று கேட்க, இம்முறை பேச்சிழந்து போய்விட்டார். எதிர்முனையில் “அப்பா என்னாச்சுப்பா... ஹலோ... அப்பா லைன்ல இருக்கீங்கதானே?” என்ற கோகிலாவின் மெல்லிய குரல் கசிவு துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

(பேசியது என்ன-? அடுத்த இதழில்)

Share