குழந்தைகள் நாடகம் | |||
|
கதாபாத்திரங்கள்: அண்ணன் -_ அறிவழகன், தேவையான பொருள்கள்: முறுக்கு டப்பா (அ) கைப்பிடி உள்ள சில்வர் தூக்குச்சட்டி இடம்: பூங்கா அண்ணன் : வாம்மா மல்லிகா! எங்க ஆளையே காணோம்? மல்லிகா : அண்ணே! லீவுல மாமா வீட்டுக்குப் போயிருந்தேன்! நாளைக்கு பள்ளிக்கூடம் திறக்குறாங்க, அதான் வந்துட்டேன். அண்ணன் : அப்படியா! பரிட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கியா? மல்லிகா : நல்லா எழுதியிருக்கேன்! எல்லா பாடத்துலயும் நல்ல மார்க்கு வாங்குவேன். கணக்குல கட்டாயம் நூத்துக்கு நூறு வாங்குவேண்ணே. அண்ணன் : அடடா! கேக்கவே மகிழ்ச்சியா இருக்குமா; வாழ்த்துக்கள். மல்லிகா : ரொம்ப நன்றி அண்ணே! சிங்காரம் : முறுக்கு, முறுக்கே! மொரு மொருப்பான கைமுறுக்கே. அண்ணே! முறுக்கு வேணுங்களா? அண்ணன் : வேணாம்ப்பா... மல்லிகா : பாவம் சின்னப் பையன் விக்கிறான்... வாங்கிக்கலாம் அண்ணே! சிங்காரம் : ஆமாண்ணே! வாங்கிக்கிங்க! நீங்க வாங்குனாதான் எனக்கு ஒருவேளை சோறு. மல்லிகா : பாவம் அண்ணே! வாங்கிக்கலாம்! அண்ணன் : தம்பி! இங்கே வா! நீ ஏன் முறுக்கு விக்கிறே? சிங்காரம் : அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? முறுக்கு வேணுன்னா வாங்கிக்கிங்க! இல்லேன்னா ஆளை விடுங்க! அண்ணன் : வாங்கிக்கிறேன். அதுக்கு முன்னாடி நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு! சிங்காரம் : தயவுசெய்து எதுவும் கேக்காதிங்க... முறுக்கு மட்டும் வாங்கிக்கிங்க. எத்தனை முறுக்கு வேணும்? மல்லிகா : அண்ணே! எதுக்கு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கிங்க? முறுக்கு வாங்குங்க... சாப்பிடலாம்! அண்ணன் : வாங்குறேன்! அதுக்கு முன்னாடி நான் கேட்டதுக்கு அந்த தம்பி பதில் சொல்லட்டும்; தம்பி உன் பேரென்ன? மல்லிகா : பேர் சொல்லு தம்பி! சிங்காரம் : என் பேரு சிங்காரம்! அண்ணன் : தம்பி சிங்காரம், நீ எந்த பள்ளிக்கூடத்துலெ படிக்கிறே! சிங்காரம் : படிக்கலெ.. முறுக்குதான் விக்கிறேன்... அண்ணன் : எதுவரைக்கும் படிச்சே... மல்லிகா : அண்ணே முறுக்கு விக்கிறதுக்கு எம்.ஏ., பி.ஏ.ன்னு எதாவது படிக்கணுமா என்ன? சிங்காரம் : நான் ஆறாவது வரைக்கும் படிச்சிருக்கேன்... அண்ணன் : மேற்கொண்டு படிக்க வேண்டியதுதானே.... சிங்காரம் : அதெல்லாம் கேக்காதிங்க... அலங்காரம் : ஏய்! வியாபாரத்தை பாருடான்னா அங்க என்னடா நின்னு பேசிக்கிட்டிருக்கே... போ போ... போய் சீக்கிரம் முறுக்கை வித்து காசை கொண்டுவாடா! அண்ணன் : அய்யா! சின்னப் பையனை எதுக்கு மிரட்டுறிங்க? அலங்காரம் : சின்னப் பையனை மிரட்டாம உன்னை மாதிரி பெரிய பையனையா மிரட்டுவாங்க. அண்ணன் : என்னை மாதிரி பெரியவங்களை மிரட்ட முடியாமத்தான் சின்னப் பையனை மிரட்டுறிங்களா? அலங்காரம் : யோவ்! உன் வேலையப் பாத்துக்கிட்டு போய்யா... அவன் என் மவன். நான் மிரட்டுவேன், உருட்டுவேன் உனக்கென்ன வந்தது? அண்ணன் : ஓகோ! உங்க பையனா அப்ப நீங்கதான் அவனுக்கு அப்பாவா? அலங்காரம் : நான் அவனோட அப்பா ஆனதாலேதான் அவன் என்னோட மவனானான்... அண்ணன் : அதுசரி! அதுசரி! நீங்க இந்தப் பையனோட அப்பா... இந்தப் பையன் உங்க மகன்... அலங்காரம் : ஆமா! அதனால நான் அவனை மிரட்டுறேன்! உனக்கு முறுக்கு வேணும்னா வாங்கு; இல்லேன்னா பையனை விடுய்யா! அண்ணன் : நானா பையனை புடிச்சு வைச்சுக்கிட்டிருக்கேன். கூட்டிக்கிட்டு போங்க. அதுக்கு முன்னாடி உங்க கிட்டே ஒரு கேள்வி. மல்லிகா : பையன்கிட்ட கேள்வி கேட்டது போதாதின்னு அவங்க அப்பா கிட்டேயுமா? அண்ணன் : ஆமா மல்லிகா! அய்யா உங்க மகன் ஏன் முறுக்கு விக்கிறான். அலங்காரம் : ம்.. கிறுக்கு வித்தா யாரும் வாங்க மாட்டாங்க... அதான் முறுக்கு விக்கிறான். அண்ணன் : அய்யா... ஏன் கோபப்படுறீங்க... இந்த சின்ன வயசிலே... பள்ளிக் கூடத்துக்குத்தானே அனுப்பணும் குழந்தையை... அலங்காரம் : அது எங்களுக்குத் தெரியாதா? எங்க குடும்பக் கஷ்டத்துக்காக என் மவன் முறுக்கு விக்கிறான். ஒரு நாளைக்கு ரூ.40, 50ன்னு சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்துறான். அதைப் பாராட்டுவதை வுட்டுப்புட்டு பள்ளிக்கூடம் அனுப்பக் கூடாதான்னு கேக்குறியே... அண்ணன் : குழந்தை சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்துறானேன்னு பாராட்டுணுமா... அய்யா.. புள்ளையப் பெத்த புண்ணியரே! புத்தகப் பை தூக்க வேண்டிய இந்த கையில முறுக்கு டப்பாவை தூக்கிக்கிட்டு தெருத் தெருவா சுத்துறதுக்கு பாராட்டுணுமா? எல்லாரும் வெக்கப்படணும்யா? அவன் வயசிலெ இருக்கிற இந்தப் புள்ளை படிக்குது அதே வயசுள்ள அந்தப் பையன் குடும்ப கஷ்டத்துக்காக முறுக்கு விக்கிறான். இது என்னய்யா அநியாயம். இந்த முறுக்கை நீங்க விக்கலாமில்லெ? அலங்காரம் : நாட்டு நடப்பு தெரிஞ்சுக்காம பேசுறியே.. இந்த மாதிரி சின்னப் பையன் வித்தாதான் சட்டுன்னு பரிதாபப்பட்டு ரெண்டு முறுக்கு வாங்குறவங்க நாலு முறுக்கா வாங்குவாங்க. நான் வித்தா ஒருத்தரும் வாங்க மாட்டேங்குறாங்க. அண்ணன் : அய்யா! சின்ன குழந்தை வேலை செய்து சம்பாதிக்கிற காசுலெ நீங்க வாழுறதே கேவலம்ய்யா... அலங்காரம் : என்னா கேவலம்... புள்ளை சம்பாதிச்சு அப்பனை காப்பாத்தக் கூடாதா? அண்ணன் : ஓ... தாராளமா செய்யலாம். ஆனா அதுக்கும் ஒரு வயசிருக்கு... 18 வயசு வரைக்கும் இவன் குழந்தைன்னு அய்க்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமை சாசனம் சொல்லுது. மல்லிகா : அய்க்கிய நாடுகள் சபைன்னா அய்.நா சபைதானே அண்ணா? அண்ணன் : ஆமா... அய்க்கிய நாடுகள் சபையத்தான் சுருக்கமா அய்.நா சபைன்னு சொல்லுறாங்க... அலங்காரம் : அய்.நா. சபை சொல்லுச்சு... நைனா சபை சொல்லுச்சின்னு யாருக்கிட்ட கதை உடுறே... அண்ணன் : கதை இல்லய்யா... அதுதான் உண்மை. அது மட்டுமில்லே... 14 வயசு வரைக்கும் குழந்தைகளை எந்த தொழில்லையும் ஈடுபடுத்தக் கூடாதுன்னு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லுது. அப்படி குழந்தைகளை வேலைக்கு வச்சுக்கிட்டா அந்த நிறுவனத்துக்கும், அந்த முதலாளிக்கும் கட்டாயம் சட்டப்படி தண்டனை கிடைக்கும். அலங்காரம் : என்னாது... குழந்தையெ வேலை செய்ய வச்சா பெரியவங்களுக்கு தண்டனையா? அண்ணன் : ஆமா! நீ ஜெயிலுக்குப் போகணும். அபராதத் தொகை கட்டணும். அலங்காரம் : என்னப்பா! திடீர்ன்னு குண்டை தூக்கிப்போட்டு முறுக்கு வியாபாரத்தையே நொறுக்கிப்புட்டியே. அண்ணன் : அய்யா உங்க பேர் என்ன? அலங்காரம் : என் பேரு அலங்காரம்... அண்ணன் : அய்யா அலங்காரம் உங்க மகன் சிங்காரம் பலகாரம் விக்காம பள்ளிக்கூடம் போனா உண்மையிலேயே சிங்காரமா வாழலாம். அவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க. மல்லிகா : மாமா! மாமா! சிங்காரத்தை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி நல்லா படிக்கவச்சு முறுக்கு தொழிற்சாலையோட முதலாளியாக்கிடுங்க... அண்ணன் : பாத்திங்களா! ஒரு சின்னக் குழந்தைக்கு தோனுன யோசனை கூட உங்களுக்கு தோனலியே.... சிங்காரம் : அப்பா! அப்பா! நானும் பள்ளிக்கூடம் போறேம்ப்பா. நான் நல்லா படிச்சு பெரிய ஆளாகி உன்னை காப்பத்துறேம்ப்பா அலங்காரம் : இந்த ஒரு வார்த்தைப் போதுண்டா மகனே! நான் என் குடும்ப சூழலை மட்டுமே யோசிச்சுக்கிட்டிருந்தேன். குழந்தையோட சூழலை யோசிக்காம விட்டுட்டேன். அது தப்புதான்! இப்ப நான் என்ன செய்யணும்? அண்ணன் : குடும்பச் சுமையை குழந்தைங்க மேலே சுமத்தாம... எப்படியாவது பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைக்கணும். இதை எல்லாரும் உணர்ந்து செயல்படணும். அலங்காரம் : எல்லாரும்னா? அண்ணன் : குழந்தைகளை வேலைக்கு அனுப்புறவங்க, குழந்தைகளை வேலைக்கு சேத்துக்கிறவங்க எல்லாரும். மல்லிகா : சரியா சொன்னிங்க அண்ணே! அண்ணன் : குழந்தையால கிடைக்கிற வருமானம்... குடும்பத்துக்கே... ஏன் இந்த நாட்டுக்கே அவமானம்னு நினைக்கணும். அலங்காரம் : சரி; நான் இப்ப என்ன செய்யணும்? அண்ணன் : சிங்காரத்தை உடனே பள்ளிக்கூடம் அனுப்பணும். இனிமே முறுக்கு வியாபாரத்தை நீங்க பாருங்க... சிங்காரம் பள்ளிக்கூடம் போகட்டும். அலங்காரம் : தம்பி!... ஒரு சின்ன சந்தேகம்? அண்ணன் : முறுக்கெ எப்படி விக்கிறதுன்னா? சிங்காரம் : அதெல்லாம் எங்க அப்பா ஜோரா விப்பாரு. அண்ணன் : அப்புறம் என்ன சந்தேகம்? அலங்காரம் : கொஞ்ச நாளா பள்ளிக்கூடம் போகாம இருக்கானே என் மவன், அவன் மண்டையில படிப்பு ஏறுமா? மல்லிகா : சிங்காரம் மண்டை என்ன எவரெஸ்டு மலையா? அண்ணன் : யாரும் ஏற முடியாதுன்னு நினைச்ச எவரெஸ்டு மலையிலேயே ஏறி சாதனைப் படைச்சு இருக்காங்க. அதனால சிங்காரம் மண்டையில கட்டாயம் படிப்பு ஏறும்! சிங்காரம் : அப்பா நான் கஷ்டப்பட்டாவது படிக்கிறம்பா... அண்ணன் : கஷ்டப்பட்டுப் படிக்கிறதைவிட இஷ்டப்பட்டு படிச்சா நல்லா படிக்க முடியும்... சிங்காரம் : நான் நல்லா படிப்பண்ணே... கணக்கெல்லாம் எனக்கு சுலபமா வரும். அலங்காரம் : முறுக்குக் கணக்கு வழக்கெல்லாம் அவன்தாங்க கவனிச்சுக்குவான்... அண்ணன் : இவனுக்கா படிப்பு ஏறாதுன்னு சொன்னிங்க... சின்ன வியாபாரத்தையே சிறப்பா கவனிச்ச இவன் பெரிய படிப்பு படிச்சு பெரிய ஆளா வருவாங்க... தம்பி! சிங்காரம் நாளையிலயிருந்து எங்கே போவே? சிங்காரம் : பள்ளிக்கூடத்துக்குத்தான்! அண்ணன் : 14 வயசுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடத்துலதான் இருக்கணும்னு சட்டம் சொல்லுது. அதனால வேலைக்கு விடை கொடுத்துட்டு.... மல்லிகா : பள்ளிக்கு படையெடுத்துடு. அலங்காரம் : இப்பவே! இன்னைக்கே! என் மகன் பள்ளிக்கூடம் போகட்டும். மல்லிகா : இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாது. அலங்காரம் : ஏன் இன்னைக்கு நாளு நல்லா இல்லியா...? அண்ணன் : எல்லா நாளும் நல்ல நாளுதான்... இன்னைக்கு லீவு நாளு, அதாவது ஞாயிற்றுக்கிழமை... பள்ளிக்கூடம் இன்னைக்கு இருக்காது... அதனால நாளைக்கு கூட்டிக்கிட்டுப்போயி பள்ளிக்கூடத்துல சேத்துருங்க.... அலங்காரம் : கட்டாயம் பள்ளிக்கூடத்துல சேத்துடுறேன்... மல்லிகா : ரொம்ப நன்றி மாமா! அண்ணன் : குழந்தைகளை வேலைக்கு அனுப்புறவங்க உங்களை மாதிரி உடனே மனசு மாறுனா எவ்வளவு நல்லா இருக்கும்... மல்லிகா : குழந்தைங்க வாழ்க்கை சிங்காரமா இருக்கும். அண்ணன் : சரியா சொன்ன மல்லிகா... அவங்க பிற்கால வாழ்க்கையும் அலங்காரமா அமையும்... அலங்காரம் : தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி. முற்றும்
|