Home 2016 ஜூன் பிரபஞ்ச ரகசியம் 35
சனி, 10 ஜூன் 2023
பிரபஞ்ச ரகசியம் 35
Print E-mail

உயிரோட்டமுள்ள நமது பூமியில் மட்டும் தான் வளிமண்டலம் உண்டு என்று எண்ண வேண்டாம். இரவு வானில் சிவப்பு வெளிச்சப் புள்ளியாகத் தெரியும் செவ்வாய்க் கோளிலும் வளிமண்டலம் உண்டு.

செவ்வாய்க் கோளைப் பொறுத்தவரை நமது பூமியை ஒட்டிய காலநிலை என்றாலும் அங்கு உள்ள வளிமண்டலத்தில் கரியமிலவாயுதான் அதிகம் உள்ளது. செவ்வாய்க் கோளைப் பொறுத்தவரை நீண்டகாலமாக நமக்கு எந்த ஒரு விபரமும் தெரியாமல் இருந்தது, கலிலியோ காலத்தில் செவ்வாய்க் கோள் பற்றிய ஒரு அறிவியல்சார்புக் கொள்கை உருவாக்கப்பட்டது.

அதாவது செவ்வாய் - வானில் ஒளிரும் விண்மீன் அல்ல, இதுவும் நமது கோள்களில் ஒன்று கோள்களுக்கு உள்ள அனைத்து குணங்களும் இதற்கும் உண்டு. அதாவது சூரியனைச் சுற்றுவது, சூரியனில் இருந்து ஒளியைப் பெறுவது, தன்னைத்தானே சுற்றுவது போன்ற குணங்களாகும்.

நமது பூமியின் மீது எப்படி நீலவண்ணத்தில் மெல்லிய புகைமூட்டம் போர்த்தப்பட்டுள்ளதோ அதேபோல் செவ்வாய்க் கோளில் மஞ்சள் வண்ண மெல்லிய புகைமூட்டம் காணப்படுகிறது, இது செவ்வாயில் வளிமண்டலம் உள்ளது என்பதை உறுதிசெய்கிறது.

செவ்வாய்க் கோளில் கரியமிலவாயு அதிகமாக உள்ளது. செவ்வாயின் தரைப் பகுதியில் உள்ள வளிமண்டல அழுத்தம் நமது பூமியின் வளிமண்டல அழுத்தத்தைவிட சிறிதளவு அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக நாம் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது நமது காதுகள் அடைபடுவது போன்றே செவ்வாய்க் கோளின் தரைப்பகுதியில் இருக்கும். மேலும் கவச உடை அணியாமல் நாம் செவ்வாய்க் கோளின் தரைப்பகுதியில் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும். இதன் வளிமண்டத்தில் 96 விழுக்காடு கரியமிலவாயு, 1.9 விழுக்காடு ஆர்கன்,

1.8 நைட்ரஜனும், மிகவும் குறைந்த அளவு ஆக்சிஜனும் உள்ளது, 2012ஆம் ஆண்டு செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய  அனுப்பிய கிரியோசிட்டி என்னும் ஆய்வுக் களன் 3 ஆண்டுகளாக இக்கோளின் தரைப்பகுதியில் இறங்கி இயந்திர சக்கரங்களின் உதவியுடன் தரைப்பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது, இந்த கிரியோசிட்டி அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. இது 2014ஆம் ஆண்டு இக்கோளின் தரைப்பகுதிக்கு அடியில் உறை நிலையில் நீர் இருக்கலாம் என்பதற்காக அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளது.

முக்கியமாக தரைப்பகுதியின் மேற்புறத்தில் அவ்வப்போது தென்படும் நீராவித்துளிகளை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இருப்பினும் இது நீரால் ஏற்பட்ட நீராவித் துளியா அல்லது மீத்தேனால் ஏற்பட்ட நீராவித் துளியா என்பது ஆய்விற்குப் பிறகே தெரியவரும். இருப்பினும் இங்கு பூமியைப் போன்றே குறிப்பிட்ட இடைவெளியில் பருவ மாற்றம் ஏற்படுவதாக சமீபத்தில் கண்டறியப்-பட்டுள்ளது.

நாம் பகல்நேரத்தில் வானத்தைப் பார்த்தால் அது நீலமாகத் தெரிகிறது அல்லவா? அதேபோன்று செவ்வாய்க்கோளின் தரைப்பகுதியில் நின்று வானத்தைப் பார்த்தால் இளம் மஞ்சள் நிறத்தில் மங்கலாகத் தெரியும். இதற்குக் காரணம் ஆங்காங்கே வறண்ட காலநிலையில் தரைப்பகுதியில் காற்று விரிவடைந்து கடுமையான சூறாவளி தோன்றும். இந்த சூறாவளியின் காரணமாக தூசி மிக்க நீண்ட தூரம் வரை பரவிவிடும்.

இப்படி ஆங்காங்கே எழும் சூறாவளியின் காரணமாக செவ்வாய்க் கோள் முழுவதும் தூசியால் போர்வை போர்த்தப்பட்டது போல் காணப்படும், இக்கோளின் துருவப்பகுதியில் கார்பன் டை ஆக்ஸைடு உறைந்த நிலையில் காணப்படுகிறது, இதை நாம் உலர் பனிக்கட்டி என்று கூறுவோம்.

இப்பகுதி மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான பகுதியாகும். இங்கு செவ்வாயின் மற்ற பகுதிகளைவிட இப்பகுதியில் ஆபத்தான கதிர்கள் நேரடியாக தரைப் பகுதியை தாக்குகிறது. எதிர்காலத்தில் செவ்வாயில் மனிதர்கள் சென்றால் துருவப் பகுதியை ஆய்வு செய்ய அதற்கென்ற சிறப்பாக தயாரிக்கப்பட்ட கவச உடையுடன்தான் செல்லவேண்டும்.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி கிரியோசிட்டி, செவ்வாயில் உயிர்கள் இருக்கக் கூடும் என்பதற்கான ஓர் உறுதியான சான்றை ஆய்வின் மூலம் நாசா வானியல் ஆய்வாளர்களுக்குத் தெரிவித்தது, அதாவது தரைப்பகுதியில் சில இடங்களில் மீத்தேனின் அளவு அதிகரித்து குறைகிறது. நமது பூமியில் இதே போன்று மீத்தேன் அளவு அதிகரித்து குறைந்தால் அப்பகுதியில் நுண்ணுயிரிகள் அதிகம் வாழ்கிறது என்று பொருள்.

எடுத்துக்காட்டாக நாம் அதிகம் கேள்விப்பட்ட சாணியிலிருந்து எரிவாயு பெறப்பட்டு வீட்டு பயன்பாட்டிற்கு எப்படி வருகிறது. மாட்டுச் சாணியில் மிகவும் அதிக அளவு உள்ள நுண்ணுயிரி தண்ணீர் உடன் சேர்ந்து வினைபுரிந்து மீத்தேனை வெளியிடுகிறது, இதனை நாம் சேகரித்து எரிவாயுவாகப் பயன்படுத்துகிறோம்.

இதேபோல் செவ்வாயின் தரைப்பகுதிக்கு கீழே அதிக அளவு நுண்ணுயிர்கள் இருக்கக் கூடும் அது பருவ மாற்றத்திற்கு ஏற்ப உருவாகும் ஈரப் பதத்தின் காரணமான மீத்தேனை வெளியிட வாய்ப்புள்ளது. செவ்வாய்க் கோள் உருவாகி சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இந்த 400 கோடி ஆண்டுகளில்  250 ஆண்டுகள் பூமியைப் போன்ற காலநிலை, மிகபெரிய நன்னீர் ஏரிகள் போன்றவை இருந்தன.

இந்த நிலையில் செவ்வாய்க் கோள் குளிர ஆரம்பித்த உடன் அதன் காந்தப் புலம் வலுவிழந்து போனது. இதன் காரணமாக கடுமையான சூரியப் புயல்கள் செவ்வாய் கோளின் தரைப்பகுதியில் தாக்கின. இதனால் செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்த வாயுக்கள் பெருமளவில் விண்வெளியில் சிதறடிக்கப்பட்டன. தற்போது செவ்வாய் வினாடிக்கு 100 கிராம் அளவு தனது வளிமண்டலத்தை இழந்துகொண்டு வருகிறது.

2014இல் செவ்வாயைச் சுற்றத் தொடங்கிய MAVEN விண்கலம் சேகரித்த தகவல்கள் சூரியப்புயலே செவ்வாயின் வளிமண்டல இழப்பிற்குக் காரணம் எனக் கூறுகிறது. சூரியப் புயலில் இருந்து வரும் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான் துகள்கள், செவ்வாயின் மேல்-வளிமண்டலத்தில் உள்ள அயணித் துகள்களின் விடுபடு- திசைவேகம் (Escape Velocity) அளவிற்கு முடுக்கிவிடுவதால், அந்தத் துகள்கள், செவ்வாயை விட்டு நிரந்தரமாக சென்றுவிட்டன.

இன்றிலிருந்து சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனில் இருந்து வெளிப்பட்ட சூரியப் புயல்கள் தற்போதைய சூரியப் புயல்களை விட மிகச் சக்திவாய்ந்ததாகக் காணப்பட்டது. ஆகவே அக்காலத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து இலகுவாக வளிமண்டலத்தை அச்சூரியப் புயல்களால் சிதறடிக்க முடிந்திருக்கும். தற்போது செவ்வாய் இழந்துவரும் வளிமண்டலத்தின் அளவைக் கணக்கில் எடுத்தால், மொத்தமாக அதன் வளிமண்டலம் மறைவதற்கு அடுத்த இரண்டு பில்லியன் வருடங்களாவது ஆகும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

அடுத்த இதழில் வியாழனில் உள்ள வளிமண்டலம் பற்றிக் காண்போம்.

Share