Home 2016 ஜூன் நாற்று நட்டாயா? களை பறித்தாயா?
சனி, 10 ஜூன் 2023
நாற்று நட்டாயா? களை பறித்தாயா?
Print E-mail

மனிதர்களின் அடிப்படைத் தேவையாக இருப்பது உணவு, உடை, இருப்பிடம். உடையும், இருப்பிடமும் நாகரிகத்தின் அடையாளங்கள். ஆனால், உணவு என்பது நாகரிகம் அடைந்தாலும் சரி, அடையாமல் காட்டுமிராண்டியாக இருந்தாலும் சரி தவிர்க்க முடியாதது!  அப்படிப்பட்ட உணவைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? சமைத்துக்கொடுத்தால் மூக்குபிடிக்க சாப்பிடத் தெரியும். அவ்வளவுதான். அதிலும் அம்மாவின் பாடு திண்டாட்டம்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக சமைக்க வேண்டிருக்கும். அதிலும் இது விவசாயத்தையே பெருமளவு நம்பி இருக்கும் நாடு! அதைவிட நெருக்கமானது பழகுமுகாம் நடந்துகொண்டிருப்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில்! ஆகவே, விவசாயத்தின் முக்கியத்துவத்தை பெரியார் பிஞ்சுகளுக்கு அறிமுப்படுத்த வேண்டும் என்கிற வகையில் பழகுமுகாமின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஒரு வேளாண்மை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டுத்தோட்டத்தில் மண்மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலைத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது கோயமுத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி பிரிவாகும். இதில் தண்ணீரைக் குறைவாக பயன்படுத்தி பயிர் செய்வது, மாற்றுப்பயிர் மற்றும் பலப்பல முறைகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மண் சார்ந்த, பசுமை சார்ந்த சுற்றுலா பெரியார் பிஞ்சுகளுக்கு திடீரென ஒரு புது உலகத்திற்குள் நுழைந்துவிட்டதைப் போன்ற உணர்வையே உண்டாக்கிவிட்டது. இதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

நெடுஞ்சாலைக்கு வெகு அருகிலேயே இப்படிப்-பட்ட வயல் வரப்புகள், பசுமையான பயிர்கள், சின்னச்சின்ன வாய்கால்கள், பம்ப்செட்டுகள், அதிலிருந்து பெருகும் தண்ணீர், வயல்களை ஒட்டி வரிசையாக உயர்ந்தோங்கி நிற்கும் தென்னை மரங்கள், தோப்புகள், துரவுகள், மாட்டுக் கொட்டகை,

மண்புழு மூலம் உரம் தயாரித்தல், மாட்டு சாணத்தின் மூலம் இயற்கை உரம் தயாரித்தல், விவசாயம் செய்வதற்கான பல்வேறு கருவிகள் என்று பார்ப்பவை எல்லாம் புதுமையாகவும், அதே சமயத்தில் கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்து விட்டது! கட்டிவைத்திருந்த மாடுகளுக்கும், கன்றுக்குட்டி-களுக்கும் பசுந்தளைகளை ஊட்டிவிட்ட ஆனந்தத்தை அவர்களால் மறக்கவே முடியாது.

இடமும் புதிது! விசயங்களும் புதிது! கேட்க வேண்டுமா பிஞ்சுகளின் உற்சாகத்திற்கு! ஒன்றா? இரண்டா? சாகுபடியின் வகைகள், பயிர்களின் வகைகள், எண்ணெய் வித்துகள்,  ஆகியவை பற்றியும், அதைவிட முக்கியமாக உரத் தேவைகளுக்காகவே பயிரிடப்படும் பயிர்கள் என்று ஏராளமான தகவல்களை அந்த ஆராய்ச்சி மய்யத்தின் மேலாளர் பழனிசாமி பிஞ்சுகளுக்கு பிட்டு பிட்டு வைத்தார்.

தெரிந்த விசயங்களுக்கே கேள்விகள் ஏராளமாக வரும். புதியது என்றால் கேட்க வேண்டுமா? அதுமட்டுமல்ல, நாட்டுக்கோழி பண்ணை, உரத்தை குழாய்கள் மூலம் ஊற்றி வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் புதுப்புதுக் கருவிகளையும், வெப்பத்தை அளக்கும் கருவி, காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவி, மழையை அளக்கும் கருவி என்று பார்ப்பதற்கும், கேள்விகள் கேட்பதற்கும் எவ்வளவோ இருந்தது.

இது கணினி யுகம் தான்! ஆனாலும், அந்தக் கணினிகளை உணவாக உண்ண முடியாது! அதற்கு விவசாயம் முக்கியம்! விவசாயத்திற்கு தண்ணீரும் அதி முக்கியம்! மண்ணும், தண்ணீரும் நமது இரண்டு கண்களைப் போன்று மிகமிக முக்கியமானவையாகும். ஆகவே சுற்றுச்சூழலும், மரங்களும் முக்கியம் என்பது போன்ற சில உன்னதமான சிந்தனைகளை பேராசிரியர் கணேஷ்ராஜா அவர்களுக்குள் தூண்டி-விட்டிருந்தார். அதுமட்டுமா? பெரியார் பிஞ்சுகளான நீங்கள் அறிவில் பெரியார் பழங்களாக மாறி இந்த சமூகத்திற்கு பயன்பட வேண்டுமென்று பளிச்சென்று சொல்லிவிட்டார். பிஞ்சுகளுக்கு அப்போதே அறிவியல் அறிஞர்கள் ஆகிவிட்ட பெருமிதம் முகங்களில் மின்னியது.

மொத்தத்தில் அத்தியவசியமான எதையும் மேலோட்டமாக தெரிந்து கொள்ளாமல், ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்டு ஆழமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதை பெரியார் பிஞ்சுகளுக்கு உணர்த்தியிருக்கிறது இந்த வேளாண்மைச் சுற்றுலா!

Share