ஆசிரியர் தாத்தாவிடம் வரிசை கட்டி கேள்வி கேட்ட பிஞ்சுகள்
Print

நீங்க சின்ன வயசில எப்படி இருந்தீங்க? நீங்க செஞ்ச குறும்பு என்ன்? பெரியார் தாத்தாவை எப்போ பார்த்தீங்க? என்று வரிசையாக கேள்விகளால் ஆசிரியர் தாத்தாவை துளைத்து எடுத்துவிட்டார்கள் பிஞ்சுகள். ஆசிரியர் தாத்தாவும் சளைக்காமல் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி மகிழ்ந்தார். இது நடந்தது கடந்த மாதம் ஜூலை 6-ஆம் தேதி திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் பள்ளியில்!

ஆசிரியர் முன்னிலையில் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடங்கப்படுவது இது தான் முதல் முறை. (இதற்கு முன்பு பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் முதல் முறையாக வேலூர் - குடியாத்தம் லிட்டில் பிளவர் பள்ளியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.) நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் வாசகர் வட்டத்துக்கான மாணவப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு,

அவர்களுக்கு அதற்குரிய அடையாளச் சின்னத்தைப் பொருத்தினார் ஆசிரியர் தாத்தா. பிறகு ஆசிரியர் உரையாற்றியதும், பிஞ்சுகள் கேள்வி கேட்கலாம் என்று சொன்னது தான் தாமதம், வரிந்துகட்டி வந்தார்கள் பிஞ்சுகள். நிறைவாக, பொன்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'ஒரு ஊருல...' என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

மற்ற ஊர்களிலும் விரைவில் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடங்கப்படவேண்டாமா? <

Share