Home 2016 ஆகஸ்ட் பிரபஞ்ச ரகசியம் 37
சனி, 31 அக்டோபர் 2020
பிரபஞ்ச ரகசியம் 37
Print E-mail

வியாழனைச் சுற்றி பல்வேறு வண்ணங்களில் மேகக் கூட்டத்திலான வளையங்கள் காணப்படுகின்றன. அதன் மத்தியப்பகுதிக்கு இணையாக அமைந்துள்ள இவ்வளையங்கள் ஆரஞ்சு, பழுப்பு, சாம்பல், மஞ்சள், இளம்பச்சை,  வெளிர் பச்சை போன்ற அழகிய வண்ணங்களில் காணப்படுகின்றன. இவ்வாறு வண்ண வண்ண வளையங்களாக தோன்றுவதற்கு முக்கிய காரணம் வியாழனின் திடீர் சுழற்சியேயாகும்.

வியாழன் 10 மணி நேரத்திற்கு ஒருமுறை திடீரென சுழல்கிறது. இந்த சுழலும் விதமே, மேகங்களிலான வண்ண வளையங்கள் தோன்ற காரணமான உள்ளது. வியாழனின் மற்றொரு சிறப்பம்சம் அதன் மேகப் பரப்பில் புலனாகும் மிகப்பெரிய சிவப்பு நீள்வட்டங்களாகும். இது பெரிய சிவப்பு புள்ளி (அ) பள்ளம் (Great Red Spot) என்றழைக்கப்படுகிறது. சிவப்பு பள்ளம் பூமியை விடப்பெரிய அளவிலானது. இது 13000 கி.மீ ஜ் 26,000 கி.மீ பரப்பினைக் கொண்டது. வியாழன் கோள் சுழலும் போது மேகக் கூட்டங்களோடு மெல்ல ஊர்ந்து செல்வதுபோல் தோன்றுகிறது.

சிவப்பு பள்ளம் நிலையான ஒன்று. இது சுமார் 350 ஆண்டுகளாக மனிதனின் தொலை-நோக்கிகளுக்கு புலப்பட்டு வருகிறது. 1955-ஆம் ஆண்டு மற்றொரு வினோதத்தை வியாழனில் வானியலர்கள் கண்டறிந்தனர். வியாழனின் மேற்பரப்பிலிருந்து தீவிரமான கதிர்வீச்சு வெளிவந்தது. இது வியாழனில் புவியைக் காட்டிலும் அதிக வலுவான காந்தபுலம் மற்றும் கதிர்வீச்சு பட்டைகள் இருப்பதை உறுதி செய்தது.

பயனிர்- 10 (1973) மற்றும் பயனிர்- 11 (1974) ஆகிய விண்கலங்கள் முதலில் வியாழனின் மிக நெருக்கமான படங்களை படம் பிடித்து காட்டின. அதன் பின்னர் 1979-இல் ஏவப்பட்ட வோயாஜர் ஒன்று- (Voyager -I) மற்றும் வோயாஜர்- இரண்டு (Voyager -II) அதன் வளையங்களை படம் பிடித்தது. இவ்வளையங்கள் நுண்ணிய தூசுகளால் ஆனவை. வியாழன் மற்றும் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு  தாக்குதல்களினால் இந்த தூசுக்கள் அவ்வளையங்-களினின்று தொடர்ந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

1979-இல் வோயாஜர்- வியாழனை தழுவிச் சென்றபோது அதன் சிவப்பு பள்ளத்தின் தெளிவான புகைப்படத்தை எடுத்தது. வோயாஜர்- வியாழனின் தென்கோளத்தில் அமைந்துள்ள சிவப்பு பள்ளத்தில் எதிர் சூறாவளி வீசுவதை கண்டறிந்தது. எதிர் சூறாவளி கடிகாரச் சுற்றுக்கு எதிர்திசையில் சுழற்சியைக் கொண்டது. சூறாவளிக்காற்று சுழலும் போது அதன் மையத்தில் குறைந்த அழுத்தம் காணப்படும். ஆனால் எதிர் சூறாவளி சுழலும்  போது அதன் மையத்தில் அதிக அழுத்தம் காணப்படும்.

வியாழனின் காந்தப்புலமானது சுமார் 3 மில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் நிலவும் சூரிய புயலின் மீது பாதிப்பை ஏற்படுத்த வல்லது. இதன் காந்தப்புல அடுக்கு சுமார் 30 மில்லியன் கி.மீ அளவிற்கு பரவியுள்ளது. இது பூமியின் காந்த அடுக்கினை விட சுமார் 1 மில்லியன் மடங்கு அதிகம். மேலும் சூரியனோடு ஒப்பிட்டு நோக்கும் போதும் வெற்றி வியாழனுக்கே சொந்தமாகிறது.

ஜூனோ விண்ணாய்வு ஓடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதன் முக்கிய காரணம் சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் எவ்வாறு உருவாகியது என்பதனை அறிந்து கொள்வதால் மற்ற சிறிய கோள்களின் பிறப்பு ரகசியம் வெளிப்படும்.

மேலும் எவ்வாறு வாயுகோளங்கள் உருவாகிறது மற்றும் அது எவ்வாறு மற்ற கோள்களின் பரிணாமத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற வினாக்களுக்கு விடை கிடைக்கும். வியாழனில் உள்ள துகள்களின் பாயும் வெப்பநிலைகள், ஒளி நிறமாலை மற்றும் பிளாஸ்மா அலைகள் ஆகிய தகவல்களை சேகரித்து அனுப்ப ஏழு அதி நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் ஜூனோ விண்ணாய்வு ஓடத்தில் உள்ளன.

ஜூனோவில் ஜூனோகேம்  (Juno Cam) என்னும் உயர் தர புகைப்பட கருவிகள் வியாழனின் துருவப் பகுதிகளை படம் பிடிக்க பொருத்தப்பட்டுள்ளது. தற்போது வானியலர்களின் மிகமுக்கிய தேடல் வேற்று கோள்களிலிருக்கும் நீர் ஆதாரத்தை பற்றியது தான். இந்த நீர் தேடல் வியாழனையும் விட்டுவைக்கப்போவதில்லை. வியாழனின் உள்ளிலிருந்து பிரதிபலிக்கும் நுண்ணலைகளை கவனித்து, ஆராய்வதன் மூலமும். கோளின் பல்வேறு  அடுக்குகளின் வெப்பநிலையை அளந்தறிவதன் மூலமும் நீரின் அளவு எவ்வளவு என்பதனை கணக்கிடமுடியும்.

வியாழனில் அடங்கியுள்ள நீரின் அளவு, மீத்தேன் அளவு ஆகியவற்றை அறிந்துகொள்வதன் மூலம் அதன் வளிமண்டலத்தில் கலந்துள்ள வாயுக்கலவைகளின் விகிதாசாரத்தை கணிக்க முடியும் என வானியலர்கள் கூறுகின்றனர். ஜூனோ விண்ணாய்வு ஓடம் தேவையான மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கு அதன் இறகு போல மூன்று சோலார் செல் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது. இறகுகள் ஒவ்வொன்றும் 9 மீட்டர் நீளமும் ஒன்றிற்கொன்று 120 டிகிரி கோணத்தில் அமைந்துள்ளன.

இந்த இறகுகளில் அமைந்துள்ள 18,600 சோலார் செல்கள் சூரிய ஒளியிலிருந்து தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

இந்த 59 மீ2 பரப்புள்ள சோலார் இறகுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாதியளவு மின்சாரம் விண்கலத்தின் அதி முக்கிய இயந்திர பாகங்களின் வெப்பநிலையை கட்டுபாட்டில் வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் உயர்வெப்ப-நிலையை தாங்கிக் கொள்ள முடியாத இயந்திர பாகங்கள் செயலிழந்து விடும்.

நம்முடைய சந்திரயான்--1 விண்கலம் திட்டமிடப்பட்ட வாழ்நாள் முடிவடைவதற்கு முன்னரே தன்னுடைய சேவையை முடித்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் இயந்திர பாகங்களின் வெப்பநிலை கூடிப் போனதே.மீதி பாதி மின்சாரம் தொலைத்தொடர்பு, கணினிகள், உந்து சக்தி ஏழு நுட்பமான கருவிகள் மற்றும் கேமரா ஆகியவற்றை இயக்கப் பயன்படுகிறது.

ஜூனோ விண்வெளி பயணம் திட்டமிட்டபடி கடந்த ஜூலையில் நடந்துள்ளதால், 32 சுற்றுப் பாதைகளாக அதன் வியாழன் பயணம் அமைந்து, ஒரு குறுகிய காலத்தில் வியாழனின் அறியப்படாத ரகசியங்களின் பூட்டுக்கள் உடைக்கப்படும். உள்ளிருக்கும் ரகசியங்கள் மனிதனின் விண்வெளி தேடலுக்கு விருந்தாக அமையும்.

பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக்-கொண்டது. வியாழனின் நிறை பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. புவியீர்ப்பு விசையைப் போல 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது வியாழனின் நடுக்கோட்டுப் பரப்பளவு சுமார் 88,700 மைல், சற்று சப்பையான துருவ விட்டம் சுமார் 83,000 மைல் வாயுக் கோளமான வியாழன், மிக குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்றுவதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன.

சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு சிறுகோள்கள், வால் விண்மீன்கள் போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

(தொடரும்)

Share