Home 2016 ஆகஸ்ட் அறிவால் உணர்வை ஆளவேண்டும்!
வியாழன், 22 அக்டோபர் 2020
அறிவால் உணர்வை ஆளவேண்டும்!
Print E-mail

“பிஞ்சில் பழுக்கலாமா?’’ என்று பெரியவர்கள் சிறுவர்களைப் பார்த்துக் கேட்பர். அது பொருள் பொதிந்த கேள்வி. ஒவ்வொரு பிஞ்சும் நெஞ்சில் கொள்ள வேண்டிய கேள்வி இது.

நீங்களே கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே விடை கிடைக்கும். கடையில் மாம்பழம் வாங்கச் செல்கிறீர்கள். எந்தப் பழம் சுவையாக இருக்கும் என்று தேர்ந்தெடுப்பீர்கள்? நன்றாக முற்றி, பழுத்து மணம் வீசும் மாம்பழத்தைத்தானே!

நல்ல மாம்பழத்திற்கு பக்கத்திலே சிறிய அளவில் வெம்பிய பிஞ்சுகளும் கிடக்கும். அதை நாம் அப்படியே ஒதுக்குவோம். காரணம் என்ன? அது பிஞ்சிலே வெம்பியது _ பழுத்தது அல்ல.

ஒரு கனி என்பது பிஞ்சிலிருந்து காயாகி, முற்றிக் கனிந்து பழமாக வேண்டும். அப்படித்தான் பிள்ளைகளும் பிஞ்சு நிலையிலிருந்து மெல்ல மெல்ல வளர்ந்து முதிர்ச்சி பெற்று இளைஞர் நிலையை எட்ட வேண்டும். மாறாக, பிஞ்சு பருவத்திலே இளைஞர்க்குரிய இயல்புகளோடு செயல்பட முற்பட்டால் அது பயன்தராது.

பிஞ்சுப் பருவம்

பிஞ்சுப் பருவத்தில் பெற்றோருடனும், நண்பர்களுடனும், சுற்றத்தாருடனும் ஓடியாடி, சிரித்து மகிழ்ந்து வாழவேண்டும். கற்க வேண்டியதை விரும்பி ஆர்வத்துடன் கற்கவேண்டும்.

பெற்றோர், ஆசிரியர், பெரியவர்கள் கூறுகின்ற நல்வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

எது நல்லது? எது கெட்டது? எதைக் கொள்ள வேண்டும்? எதைத் தள்ள வேண்டும்? என்று நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.

தீயச் சூழலில் தூய வாழ்வு!

இன்றைய பிள்ளைகள் தீய வழியில் செல்ல, கெட்டுச் சீரழிய வலிய வட்டமிடும் வாய்ப்புகள் ஏராளம். உள்ளம் உறுதியாய் இல்லையென்றாலும், கெட்டவற்றை அடையாளங் கண்டு அகற்றி, நல்வழியை, நல்லவற்றைப் பின்பற்றி வாழவில்லை யென்றாலும் கெட்டழிய வேண்டிய கட்டாயம் வரும்!

உண்ணும் உணவாயினும், உடுத்தும் உடையாயினும், பழகும் நண்பராயினும், பார்க்கும் படமாயினும், படிக்கும் புத்தகமாயினும், கேட்கும் கருத்துகளாயினும் அதில் நல்லதைத் தேர்வு செய்ய நாம் விழிப்போடிருக்க வேண்டும்.

உண்ணும் உணவில் உடலுக்கும், உள்ளத்துக்கும் கேடு பயக்கும் பாக்கெட் உணவுகளும், பானங்களும் இன்று ஏராளம். அவற்றின் கவர்ச்சியில், சுவையில் மயங்கி சாப்பிட்டால், உடல்நலம் கெட்டு, வாழ் நாளெல்லாம் நோய்களைச் சுமந்து துன்பப்பட வேண்டிவரும்.

போதை தரும் பாக்கு, சாக்லட், பீடா போன்றவை இன்று பள்ளிக்கருகிலே கிடைக்கின்றன. ஒருநாள் சுவைத்துப் பார்ப்போமே என்று சபலத்தில் அவற்றைச் சாப்பிட்டால், அதன்வழி கஞ்சா, மது, போதை ஊசி என்ற உச்சநிலை தீயப் பழக்கங்களுக்கு ஆளாக நேரும்.

சிறுவயதிலே பாலுணர்வைத் தூண்டும் படங்கள், புத்தகங்கள், இணையதளக் காட்சிகள் பிஞ்சுகளின் உள்ளத்தைக் கவரும். அதிக ஆர்வத்தோடு, யாருக்கும் தெரியாமல் பார்க்க முற்படுவர். விளைவு பிஞ்சிலே சீர்கெட்டு அழிய அது வழிவகுக்கும். எனவே, அப்படிப்பட்டவற்றை மன உறுதியுடன் பார்க்காது ஒதுக்க வேண்டும். அவற்றைத் தூண்டும் நண்பர்களோடு பழகாது விலக வேண்டும்.

கெடத் தூண்டும் விடலை உணர்வுகள்:

பாலுணர்வு தூண்டுதல் 13 வயது முதல் வரும். அப்போதுதான் மிகவும் மனஉறுதியுடனும், கட்டுப்பாட்டுடனும், சபலமின்றியும், சரியான வழியில் செல்ல வேண்டும். மாறாக, உணர்வு வயப்பட்டு, தவறான வழிகளில், வயதிற்கு ஒவ்வாத செயல்களில் இறங்கினால், சிதைந்து சீரழிய வேண்டிவரும்.

அறிவால் அடக்கி ஆளவேண்டும்!

13 முதல் 23 வயது வரையுள்ள பருவம் உணர்விற்கும் அறிவிற்குமான போட்டி நடக்கும் காலம். ஒன்றை ஒன்று வீழ்த்த முயலும். குறிப்பாக, பருவ உணர்வு கண்மூடித்தனமாகச் செயல்படத் தூண்டும். அந்நிலையில் அறிவுதான் உணர்வை வெற்றிகொள்ள உதவும் ஒரே ஆயுதமாய் அமையும்.

வயதுக்கு ஏற்ப வாழ்வை வகுக்க வேண்டும்:

12 வயதுவரை பெற்றோருடன் நெருங்கிப் பற்றுப் பாசத்துடன், அவர்களின் பாசப்பிணைப்பில், நண்பர்களின் தோழமை விளையாட்டில், ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் துள்ளித்திரிந்து மகிழ்ந்து கற்க வேண்டும்.
13 முதல் 23 வயது வரை தன்னைத்தானே கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தி, சிந்தித்து சரியான வழியில் தன்னைக்கொண்டு செலுத்த வேண்டும்.

கேடான சூழலை விட்டு விலக வேண்டும். பாதுகாப்பான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

எதிர்கால வாழ்விற்கான, உயர்விற்கான, அடிப்படை முயற்சிகளை மேற்கொண்டு, அதில் சிந்தனையை, கவனத்தைச் செலுத்தி பருவத்தால் இயல்பாய் எழும் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து, இலக்குநோக்கி உழைக்க வேண்டிய பருவம் இது.

ஒருவர் உயர்வை நோக்கிச் செல்வதும், கெட்டழிவதும் இப்பருவத்தில்தான். அறிவால் உணர்வைக் கட்டுப்படுத்துகின்றவர்கள் உயர்வை நோக்கிச் செல்வர்; உணர்வு உந்தும் போக்கில் செல்வோர் பல்வேறு கேடு, பாதிப்பு, இழப்புக்கு ஆளாகி கெட்டழிவர்.

அதேபோல் பிஞ்சுகள் உள்ளத்தில் மனிதநேயத்தை நாளும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னைப்போலவே பிறர் உணர்வுகளையும், விருப்பங்களையும் மதிப்பதே மனிதநேயம்.

அன்பான பழக்கம், இனிய பேச்சு, மரியாதையுடன் கூடிய பழக்கம், பொதுநலம், அடுத்தவர் இன்னல் களைதல், உண்மைப் பேசுதல், கேடுகள் அகற்றி நல்லன ஏற்றல் போன்ற நற்செயல்களை _ பண்புகளை நாளும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றி மறவாமை, இக்கட்டில் உதவுதல், பெற்றோரை பாதுகாத்தல், மன்னித்தல், வன் முறையைத் தவிர்த்தல் போன்ற உயர் நெறிகளைப் பின்பற்ற வேண்டும்.

பழிக்குப்பழி, கேட்டுக்குக் கேடு, அடிக்கு பதிலடி என்ற அணுகுமுறை அழிவை நோக்கி அழைத்துச் செல்லும்.

எனவே, நமக்கு கேடு செய்தவர்க்கும் நல்லது செய்து, இன்சொல் பேசினால், அன்பு காட்டினால் அவர்களே வெட்கித் தன் தவற்றை உணர்வர். பதில் தாக்குதலைவிட இது பல வகையில் பயன்தரும்.

நம்மை ஒருவன் தரக்குறைவாய்ப் பேசினால் நமக்கு கோபம்வரும்போது, நாமும் தரக்குறைவாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

நம் சகோதரியை பிறர் தப்பாக அணுகினால் நமக்கு ஆத்திரம் வருகையில், நாம் பிறர் சகோதரியை தப்பாக அணுகக் கூடாது என்பதை உணர வேண்டும்.

நம் பொருளை பிறர் அபகரித்தால் நாம் பதறுகிறோம். அப்படியானால் நாம் பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது என்று உறுதிகொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட நற்பண்புகளை நாளும் வளர்த்துக்கொண்டால், எதிர்காலத்தில் கொலை காரனாய், கொள்ளைக்காரனாய், குடிகாரனாய் சீரழிய வேண்டிய நிலைவராது. மாறாக, உயர்வான, மரியாதையான, மகிழ்வான வாழ்வு கிடைக்கும்!

பிஞ்சுகள் இவற்றை ஆழமாக நெஞ்சில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அதன்வழி நடக்க வேண்டும்.

Share