”மிஸ்... அன்பு கடிக்கிறான் மிஸ்..” | |||
|
பள்ளிக்கூடம் மணியடித்து முதல் வகுப்பில் வருகைப்பதிவு முடிந்தவுடன், ஒரு மாணவன் எழுந்து, “மிஸ்... அன்பு கடிக்கிறான் மிஸ்...’’ என்று புகார் வாசித்தான். மிஸ் ஆச்சரியப்பட்டு, “அன்பு... டோண்ட் டூ தட்!’’ என்று கண்டித்தார். இன்னொருவனும் எழுந்து, “மிஸ்... அன்பு என்னையும் கடிச்சிட்டான் மிஸ்!’’ மிஸ் ஆச்சரியப்பட்டு, “வாட்...?! அன்பு இங்க வா...’’ அன்பு சற்று பதட்டத்தோடு வந்தான். “அன்பு... என்ன பழக்கம் இது?’’ என்றார் அதட்டும் குரலில். “மிஸ்... அவங்க பொய் சொல்றாங்க!’’ “எதுக்கு அவங்க பொய் சொல்லணும்?’’ “எத்தனை தடவை பையில் காய்கறி வாங்கிட்டு வந்தாலும் பை கிழிஞ்சு போயிடுது. ஏன்னு கேட்டேன். அதுக்கு அவங்களுக்கு பதிலே தெரியலை. நான் சொன்னேன். அதுக்குதான் இப்படி சொல்றாங்க.’’ மிஸ் அவன் மீதிருந்த புகாரை மறந்தேவிட்டார். “எத்தனை தடவை காய்கறி வாங்கிட்டு வந்தாலும் பை கிழிஞ்சு போகுதா? எனக்கும் தெரியலையே... என்ன அது?’’ “‘கத்திரி’க்காய் மிஸ்’’ “ப்பா... செமக்கடி’’ மாணவர்கள் அனைவரும் கொல்-லென்று சிரித்தனர். “சரி, அப்புறம்?’’ “ஜோக்கடிச்சதைக் கேட்டு ஒருத்தன் சிரிச்சான். அவன் உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி விட்டாங்க. எதுக்-குன்னு கேட்டேன். அதுக்கும் இவங்களுக்கு பதில் தெரியலை மிஸ்.’’ மிஸ்சுக்கு ஆர்வம் அதிகமாகிவிட... “சிரிச்சதுக்கு எதுக்கு உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி விட்டாங்க?’’ “ஏன்னா? அவன் சிரிச்சது ‘புண்’ சிரிப்பாம்.’’ “அய்யோ... கடி தாங்கலை...’’ மாணவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்ணில் தண்ணீர் வர சிரித்தனர். மிஸ்சுக்கு இப்பொழுதுதான் விசயமே விளங்கியது. வேறு வழி! மாணவர்களுடன் சேர்ந்து அவரும் சிரித்தார் -ச.அன்பு, சென்னை
|