Home 2016 செப்டம்பர் மூன்றாவது கழிவு
ஞாயிறு, 05 பிப்ரவரி 2023
மூன்றாவது கழிவு
Print E-mail

“மாணவர்களே ஒரு சந்தோசமான செய்தி’’ என்று சொல்லிக்கொண்டே வகுப்பில் நுழைந்தார் ஆசிரியர் பிரதீப்.
ஆசிரியரின் குரலைக் கேட்டவுடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அமைதியாயினர்.

“என்ன சார் நாளைக்கு ஸ்கூல் லீவுங்களா?’’ என விளையாட்டுத்தனமாக கேட்டான் பிரேம் என்ற மாணவன்.

“ஸ்கூல் லீவு விட்டாதான் உங்களுக்கெல்லாம் சந்தோஷமா’’ என அதட்டலுடன் கேட்டுவிட்டு அவர் கொண்டு வந்த செய்தித்தாளில் இருந்த அறிவிப்பை சொன்னார்.

“மின்னணுக் கழிவுகளை கட்டுப்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மின்னணுக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியை நமது மாநகராட்சி அறிவித்துள்ளது’’ என்றார் ஆசிரியர் பிரதீப்.

“மின்னணுக் கழிவுகளா? அப்படின்னா என்ன சார்?” என மீண்டும் தன் குரலைப் பதிவு செய்தான் பிரேம்.

“அப்ப உங்களுக்கு மின்னணுக் கழிவுகள்னா என்னன்னே தெரியாதா?’’ என்றார் பிரதீப்.

“தெரியாது சார்’’ என்றனர் அனைத்து மாணவர்களும் ஒருமித்த குரலில்.

“சரி, இன்னைக்கு வகுப்பு மின்னணுக் கழிவுகளைப் பற்றித்தான்’’ என்று தொடர்ந்தார் பிரதீப்.

“உங்களுக்கு கழிவுகள் எத்தனை வகைன்னு தெரியுமா?’’ அதான் குப்பைகளின் வகைகள்.

“ஓ! நல்லா தெரியும் சார். மக்கும் குப்பை, மக்காத குப்பை’’ என்றான் சோலை இளவரசன்.

“ம்ம்ம்... சரியா சொன்ன சோலை, இப்ப  மூன்றாவது வகையா ஒரு கழிவு இருக்கு. அதுதான் மின்னணுக் கழிவுகள்’’ என்றார்.
இதைச் சொன்னவுடன் மாணவர்களின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்ததை ஆசிரியர் பிரதீப்பால் உணர முடிந்தது.

“மக்கும் குப்பைன்னா என்ன?’’

“எளிதில் மக்கக்கூடிய குப்பைகள் சார்’’ என்றான் அரவிந்தன்.

“அதுதான்... என்னென்ன குப்பைகள்’’ என மேலும் விளக்கம் கேட்டார்.

“பயன்படுத்திய காய்கறிகள், பழைய காகிதம், அட்டைப் பெட்டிகள், பழவகைகள், துணி இதுபோன்ற வகைகள்தான் மக்கும் குப்பைகள் சார்’’ என்றான் அகஸ்டின்.

“யு ஆர் ரைட் அகஸ்டின், அப்ப மக்காத குப்பைகள்?’’ என முடித்தார்.

“பிளாஸ்டிக், நெகிழிப் பைகள் போன்றவை எளிதில் மக்காத குப்பைகள் சார்’’ என்றான் மீண்டும் அரவிந்தன்.

“இதுவரைக்கும் நீங்க சொன்னது சரி, அப்ப மின்னணுக் கழிவுகள்னா என்ன?’’ என்ற கருப்பொருளுக்கு வந்தார் பிரதீப்.
மாணவர்களின் மத்தியில் பலத்த அமைதி நிலவியது.

“யாருக்கும் தெரியலையா, சரி, நானே சொல்லட்டுமா?’’ என விளக்கத் தொடங்கினார்.

“நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய தொலைக்காட்சி, சலவை இயந்திரம், குளிர்சாதனப்பெட்டி, தொலைபேசி, மின்விசிறி, மாவு அரைக்கும் இயந்திரம், கைபேசி போன்ற மின்சாதனப் பொருட்களின் ஆயுட்காலம் முடிந்து பயன்படாத நிலையில் உள்ளவைகளே மின் கழிவுகள்’’ என்கிறோம்.

“அப்படி எவ்வளவு கழிவுகள் சார் ஆண்டுதோறும் சேர்ந்திடப் போகுது? இதுபோன்ற மின் கருவிகளின் ஆயுட்காலம் அதிகமாச்சே’’ என்றான் பிரேம்.

“உலகிலேயே மின்சாதனங்களின் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா அய்ந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தேங்கிய மின்கழிவுகள் 1.7 மில்லியன் டன், இந்த எண்ணிக்கை வருங்காலங்களில் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் நம்நாட்டில் 20 லட்சம் பழைய கணினிகள் அகற்றப்படும் வாய்ப்புள்ளதால் 1,44,2700 கிலோ பிளாஸ்டிக், 3,96,2700 கிலோ காரீயம், 1,386 கிலோ பாதரசம் கழிவுகளாக வெளியேற்றப்படும்’’ எனக் கூறி முடிந்தார்.

இதைக் கேட்டவுடன் மாணவர்கள் புருவங்கள் உயர்ந்து பெருமூச்சு விட்டனர், இந்தக் கேள்வியைக் கேட்ட பிரேம் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டான்.

“இதுபோன்ற கழிவுகளால் என்ன பிரச்சினை  வரும் சார்’’ என்றான் அருண்.

“கழிவுகள் என்றாலே நமக்கு பிரச்சினைதான்; அதுவும் மின்னணுக் கழிவுகள் என்றால் நாம் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற மின்னணுக் கழிவுகளால் மண், காற்று, நிலத்தடி நீர் போன்றவைகள் நச்சுத்தன்மையுடையதாக மாறும் வாய்ப்புள்ளது. கணினியில் உள்ள நச்சுப் பொருட்களால் மனிதனுக்கு எண்ணற்ற தீங்குகள் ஏற்படக்கூடும், குறிப்பாக ஃபிளாட்ஸ்கிரீன் மானிட்டரில் உள்ள பாதரசம் நமது நரம்பு மண்டலத்தையும், மூளையையும் பாதிக்கக்கூடியது.

மேலும் கணினியில் காரீயம், காட்மியம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. மேலும் நச்சு வாயுக்களை வெளியிடக்கூடிய பி.வி.சி. கேபிள் இன்சுலேஷன் போன்ற நச்சுப் பொருட்களால் புற்றுநோய், சுவாசக் கோளாறு, தோல் சம்பந்தமான நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, கண்நோய் போன்ற ஏராளமான நோய்கள் வரக்கூடும்’’ எனக் கூறி முடித்தார்.

இதைக் கேட்டவுடன் ஆசிரியர் உள்பட அனைத்து மாணவர்களின் முகமும் வியர்த்துப் போயிந்தன.

“அப்ப மின்னணுக் கழிவுகளை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாதா சார்’’ என்றாள் இலக்கியா.

“ஏன் கட்டுப்படுத்த முடியாது? இதுபோன்ற கழிவுகளை குறைக்க நாமெல்லாம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் ஓரளவு இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும். மேலும் மின்னணு பொருட்களின் ஆயுள் காலத்தை அதிகரிப்பது, மறு சுழற்சி செய்வது, மின்னணுக் கழிவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மின்னணுக் கழிவுகளுக்கென்று தனியாக குப்பைத்தொட்டி அமைத்து அதில் சேகரிப்பது போன்ற செயல்களால் இத்தகைய கழிவுகளை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார் பிரதீப்.

“மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரைப் போட்டியை மாநகராட்சி அறிவித்திருக்கிறது’’ என்றாள் அனுஷா.

“சரியா சொன்ன அனுஷா’’

“என்ன மாணவர்களே; அப்ப எல்லோரும் இந்த கட்டுரைப் போட்டியில் கலந்துக்கறீங்கதானே’’ என்றார்.
அனைத்து மாணவர்களும் ஒருமித்த குரலில் “ஆமாம் சார்’’ என்றனர்.

Share