Home 2016 செப்டம்பர் உலகம் சுற்றி-1
ஞாயிறு, 05 பிப்ரவரி 2023
உலகம் சுற்றி-1
Print E-mail

அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் புகழ் பெற்று இருந்தது மிக்கி மவுசு எனும் ஒரு "எலி". அமெரிக்காவில் குழந்தைகள் பெற்றோர்களுடன் தூங்குவது இல்லை. தனியாகத்தான் தூங்குவார்கள். ஒவ்வொரு குழந்தையும் மிகவும் பிடித்த பொம்மையை கட்டிப் பிடித்துக் கொண்டு, பெரியவர்கள் ஆகும் வரை கூட அப்படித்தான் தூங்குவார்கள். அதில் முதல் இடத்தில் பல காலம் இருந்தது மிக்கி மவுசு.

வால்ட் டிஸ்னி சிகாகோவில் பிறந்தவர் _ பல தோல்விகளுக்குப் பின் படைத்த வரைபடங்கள் தாம் மிக்கி மவுசு. பின்னர் வரை படங்களாலேயே புகழ்பெற்ற சினிமாக்களைப் படைத்தார். சிரிப்பு, சிந்தனை, வியப்பு என்று அந்த எலி அடிக்கின்ற கூத்து அனை-வரையும் மகிழ்வித்தது. அதற்கு ஆரம்பத்தில் அவரே குரல் கொடுத்துப் பேசினார். பின்னர் டம்போ யானை, பேம்பி மான் குட்டி என்று பல மிருகங்களுக்கு உயிர் கொடுத்தார். அவரது படைப்புக்களுக்குப் பல விருதுகள் கிடைத்தன.

சினிமாவில் வரைபடங்களிலே (Cartoon)    மிகவும் சிறந்து பின்னர் சினிமாவிலும் பல விருதுகள் வாங்கியுள்ளார். அதில் வந்த வருமானத்தை வைத்து முதலில் கலிபோர்னியாவில் 1955 டிஸ்னி லேண்ட் என்று  ஆரம்பித்தார். அது வெற்றிகரமாக ஓடவே பின்னர் மிகப் பெரிய அளவில் ப்ளோரிடா மாநிலத்தின் மய்யப் பகுதியில் மிகப் பெரிய இடத்தை வெளியே தெரியாமல் பல நிறுவனங்களின் பெயரிலே வாங்கிக் குவித்து டிஸ்னி உலகத்தை ஒரு நகரமாகவே மாற்றிப் படைத்தார். அமெரிக்காவிலே அனைவரும் பார்க்க விரும்புவது டிஸ்னி உலகம். உலகெங்கும் இருந்தும் வந்து குவிகின்றனர் மக்கள்.

வால்ட் டிஸ்னியின் திட்டம் முழுதுமாக நிறைவேற்றப்படவில்லை. அவர் அங்கே உலக மக்கள் அமைதியுடன், பல கண்டுபிடிப்புக்களையும் பயன்படுத்திப் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற புரட்சிக் கவிஞரின் வார்ப்புப்படி மக்கள் வாழும் நகரமாகவே வடிவமைக்க இருந்தார். அது ஆரம்பிக்கும்  முன்னரே அவர் நுரையீரல் புற்று நோயால் (புகை பிடிப்பவர்) இறந்து விட்டார். பின்னர் அதை வேறு மாதிரி மாற்றி விட்டனர்.

கார் நிறுத்தும் இடம் மிகவும் பெரிது. அங்கேயே அவர்கள் தயாரிப்பினால் ஆன ஒருவிதமான பேருந்து நுழைவு வாயிலுக்கு அழைத்துச் செல்லும். அங்கேயிருந்து டிஸ்னி உலகத்தின் முக்கிய இடமான மேஜிக் கிங்டம் (தந்திர நாடு) செல்ல இரண்டு வழிகள். ஒன்று மானோ ரெயில் 1960லேயே போட்டு விட்டார்கள். அல்லது பெரிய படகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியைக் கடந்து செல்ல வேண்டும். அங்கே நுழைவு வாயிலில் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

பல விதமான, ஆனால் அனைத்துமே விலை உயர்ந்த ஒரு நாள், இரண்டு, மூன்று, ஒரு வாரம் இப்படி. அமெரிக்கக் குடும்பங்கள் பல அய்ந்து ஆண்டுகள் இதற்காகவே சேமித்துப் பயணம் செய்வார்கள். உள்ளே நுழையும் போது பெரிய மிக்கி மவுசு வரவேற்கும். அது பலவித மலர்ச்செடிகளாலும், பூக்களாலும் வடிவமைக்கப்பட்ட மிக்கி மவுசு.

உள்ளே நுழைந்ததும் முக்கிய தெரு. அங்கே பலவிதமானக் கடைகள், டிஸ்னி பற்றிய திரையரங்கம், மிக்கி மவுசுடன் படம் எடுத்துக் கொள்ளும் இடம் என்று பல இருக்கும். வணிகமே பெரும் நோக்கு என்பதால் விலை மிகுதி. அவர்கள் தயாரிக்கும் பொம்மைகள், ஆடைகள் என்று பல நினைவுச் சின்னங்களும் இருக்கும். ஆங்காங்கே உதவிக்குப் பலர் இருப்பார்கள். ஆங்காங்கே அவர்களிடம் வேலை செய்யும் புகைப்படம் பிடிப்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் மிகவும் அழகாகப் புகைப்படங்கள் எடுப்பார்கள்.

அவற்றை ஒரு தொகுப்பாக நமக்குப் போட்டிடுவார்கள். அதை ஒரு மாதத்திற்குள் பணம் கட்டி நாம் கணினி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்தத் தெரு முடியும் இடத்தில் ஒரு பெரிய அரங்கம். அங்குதான் டிஸ்னியின் முக்கிய சின்னமான சின்டரெல்லா கோட்டை மிகுந்த பொலிவுடன் இருக்கும். அதைப் புகைப்படம் எடுப்பது குழந்தைகட்கு மிகவும் விருப்பம்.

தாஜ்மகாலை எடுப்பதுபோல எடுத்துத் தள்ளிக் கொண்டேயிருப்பார்கள். அந்தக் கோட்டை உண்மையிலேயே அய்ரோப்பாவில் ஒரு இடத்தில் இருக்கும் கோட்டையைச் சார்ந்தது என்கின்றனர். அந்தக் கோட்டையின் முன்தான் அனைத்து டிஸ்னி மிக்கி, மின்னி மவுசுகளும், கரடி, மற்ற விதவிதமான மிருகங்கள்போல் ஆடிப்பாடி காலையிலும், நண்பகலிலும், மாலை, இரவிலும் மகிழ்விப்பார்கள்.

அங்கிருந்து அய்ந்து உலகங்களுக்குச் செல்லலாம். நாளை உலகம், திகில் உலகம், கனவுலகம், காட்டுலகம் & விடுதலை சதுக்கம் என்று.  அனைவரும் முதலில் மிகவும் விரும்பி செல்வது நாளை உலகம்.

அங்கு பார்ப்போமா?

(அடுத்த இதழில்)

Share