Home 2016 செப்டம்பர் கதை கேளு...கதை கேளு...
ஞாயிறு, 05 பிப்ரவரி 2023
கதை கேளு...கதை கேளு...
Print E-mail

சிராவின் கோரிக்கையை மன்னர் ஏற்றார். யார் இந்தச் சிரா? என்ன கோரிக்கை? ஏன் மன்னர் அதனை ஏற்றார். சிரா ஒரு போர் யானை. அதன் உண்மையானப் பெயர் சிரஞ்சீவிவதனார். அரதப்பழசான பெயரா இருக்கே.. மார்டனா, ட்ரெண்டியா இருக்கட்டும்னு சிரான்னு பெயரை மாற்றிக்கொண்டது.

மன்னனிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? தனக்கு ஒரு மேல்சட்டையும், கால்சட்டையும் (பேண்ட்) வேண்டும் என்பதே. சிராவின் இந்தக் கோரிக்கையைக் கேட்டதும் மன்னர் ஏன் ஏற்றுக்கொண்டார் தெரியுமா? போன வாரம் நடந்து முடிந்த போரில் மன்னனைக் காப்பாற்றியதே நம்ம சிராதான். அதனால் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்றதற்கு, ஒரு வாரம் கழித்து இப்படி ஒரு கோரிக்கையை வைத்தது. உடனே மன்னர் நாட்டின் முக்கியத் தையல்காரர்களை அழைத்தார்.

நாலு பேர் வந்தனர். சிரா கேட்கும் ஆடையைத் தைத்து கொடுக்கவும். என்ன வண்ணம், என்ன பொருட்கள் பொதித்து ஆடையைத் தைக்க வேண்டும் எனச் சிராவிடம் கேட்டுக்கொள்ளவும் வந்தார்கள். அடுத்த வாரம் நடக்க உள்ள போர் வெற்றி விழாவிற்குள் தைத்துவிடுங்கள் எனக் கட்டளையிட்டார். வெற்றி விழாவில் போரில் சிறப்பாகப் பங்காற்றிய வீரர்களுக்குப் பாராட்டு விழா, பரிசு மழை.

“ஆடைகள் என்ற பெயரில் எனக்குப் போர்வையைத் தந்திட வேண்டாம். என் தலை உள்ளே நுழைந்து செல்வது மாதிரி சட்டையும், என் பின்னிரு கால்கள் உள்ளே நுழைந்து செல்வது மாதிரி கால்சட்டையும் (பேண்ட்) வேண்டும். தந்தத்திற்குத் தனியாகத் துணி. மேல்சட்டை மஞ்சள் நிறத்தில் இருக்கவேண்டும். கால்சட்டை புள்ளட் துளைத்த ஜீன்ஸ் போதும். சட்டையில் ஒரே ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். அதில் அய்ந்து நட்சத்திரங்களாவது பொதிக்கப்பட்டு இருக்க வேண்டும். நிஜமான நட்சத்திரங்கள்” என்றது சிரா.

மற்ற எல்லா விஷயமும் சரிதான்; ஆனால் நிஜமான நட்சத்திரத்திற்கு எங்கே போவது? நாட்டின் சிறந்த நெசவாளரிடம் பெரிய்ய்ய்யத் துணிக்கும், ஜீன்ஸ் துணிக்கும் கட்டளை போட்டாச்சு. இரண்டு நாட்களில் தந்துவிடுவதாகச் சொல்லிவிட்டார்கள். அடுத்து நட்சத்திரம், மண்டையைக் குழப்பிக் கடைசியில் அமைச்சரிடம் சென்றனர். அமைச்சர் அற்புதமான ஒரு யோசனையைச் சொன்னார்-_ “நாட்டில் ஒரு விசேஷமான மீனவர் உள்ளார், அவரால் மட்டுமே இது சாத்தியம்” என்றார்.

சரி அவரையும் பார்த்திடுவோம்னு அவரைத் தேடிச் சென்றார்கள். செய்தியை சொன்னார்கள். அந்த மீனவரிடம் மிகப்பெரிய மீன் வலை உள்ளது. ஒரு வீச்சில் முப்பத்தி ஆறு திமிங்கலத்தைப் பிடித்துள்ளார். இப்ப அவர் திறமை தெரிந்திருக்குமே. ஆனால் இதுவரை நட்சத்திரத்தை நான் பிடித்ததில்லை. “கடலும் வானமும் சந்திக்கிற இடத்திற்குச் சென்று வலையை வீசுங்கள் மீனவரே எளிதாகப் பிடிச்சிடலாம்” என்றார் ஒரு தையல்காரர்.

‘அப்படி ஒரு இடமே இல்லையே’ என வருத்தப்பட்டார் மீனவர். கடைசியாக நாட்டில் உள்ள மிகப்பெரிய மலையின் உச்சியில் நின்று வலை வீசுவதாக முடிவு எடுக்கப்பட்டது. நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு வலை வீசினார் மீனவர். அட ஆச்சர்யம், அய்ந்து நட்சத்திரங்கள் சிக்கியது. இரவே அதனைத் தையல்காரர்களிடம் ஒப்படைத்தார்.

தையல்காரர்களுக்குத் துணியும் கைக்கு வந்துவிட்டது, பட்டன்களும் வந்துவிட்டன, பெரிய கத்திரிக்கோலும் வந்துவிட்டது, ஊசிகளும் கிடைத்தன, இதோ நட்சத்திரமும் கிடைத்துவிட்டது. ஆனால் ஒரே ஒரு சிக்கல் தான், இரவில் மட்டுமே தைக்கும் வேலையைச் செய்ய முடியும், ஏன் ஏன் ஏன் என உங்கள் மனதில் கேள்வி எழுவது நியாயமே. இரவில் தானே நட்சத்திரம் கண்ணுக்குத் தெரியும், பகலில் தெரியாது அல்லவா?

ஒருவழியாக விழாவிற்கு முந்தைய நாள் ஆடை தயாராகிவிட்டது. மன்னவரும் விடிவதற்கு முன் வந்து பார்த்துவிட்டார். சிராவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி. மறுநாள் மாலை இருட்டும்போதுதான் இந்த ஆடையைச் சிரா அணிவது என்று திட்டம். இல்லை என்றால் நட்சத்திரம் தெரியாது அல்லவா? மேடை தயார். சிரிப்பு பொங்க சிரா அமர்ந்து இருந்தது. ஆடையை எடுத்து வந்தபோது.

நாடே ஆ... ஆ... என வாயை பிளந்தது. அதுவரையில் சோர்ந்து இருந்த நட்சத்திரங்கள் அங்கு கூடி இருந்த குழந்தைகளைப் பார்த்ததும் மின்னின. விழா முடிந்தது. எல்லோரும் தங்களது இல்லத்திற்குச் சென்றனர்.

அழகிய ஆடையை உடுத்திய சிரா நகர் வலம் வந்தது. ஒரு மரத்தின் மேலே தன் உணவை தேடிக்கொண்டிந்தது ஒரு ஜீவன். அது ஒரு சாமி எறும்பு. நேராகச் சிராவின் காதிற்குச் சென்றது. கூச்சம் தாங்காமல் சிரா தன் உடலை ஒரு சிலுப்பு சிலுப்பியது. அந்த ஆட்டத்தில் ஒட்டிக்-கொண்டிருந்த நட்சத்திரங்கள் தரையில் விழுந்தன. அச்சச்சோ என்றது சிரா. எங்கே வானத்திற்கு நட்சத்திரங்கள் பறந்து போய்விடுமோ எனப் பயந்தது சிரா.

“நீ உன்னுடன் குழந்தைகளை விளையாட விடுவாயா?”

“நிச்சயம்” என்றது சிரா.

“அப்ப நாங்க இந்த ஆடையிலேயே இருப்போம்” என்றன நட்சத்திரங்கள்.
தினமும் இருட்டத் துவங்கியதும் சிராவை சுற்றி குழந்தைப் பட்டாளம்தான். நாளுக்கு ஒன்றாக நட்சத்திரங்கள் பல கதைகளை கூறின.

ரகசியம் என்னன்னா நட்சத்திரம் கதை சொல்லும் விஷயமே பெரியவர்களுக்குத் தெரியாது. இந்தக் கதையையும் எனக்குச் சொன்னது ஒரு நட்சத்திரம்தான்.

Share