Home 2016 அக்டோபர் ’தங்கமகன்’ மாரியப்பன்
திங்கள், 08 மார்ச் 2021
’தங்கமகன்’ மாரியப்பன்
Print E-mail

சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் சிறுவயதில் விபத்து ஒன்றில் சிக்கி மாற்றுத்திறளானியாகிவிட்ட நிலையில், நீண்ட கால கடுமையான பயிற்சி மற்றும் தங்கம் வெல்லவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பிரேசில் தலைநகரம் ரியோ டி ஜெனிரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில்  உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார்.  பாரா ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து நாடு திரும்பிய மாரியப்பனிடம் பெரியார் பிஞ்சுக்காக உரையாடினோம். இதோ தங்கமகன் மாரியப்பன்...

“தங்கம் வென்று வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு, நான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது சற்று பயமாக இருந்தாலும் பயிற்சியாளர் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி போட்டிக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நினைப்போடு நான் போட்டியில் கலந்து கொண்டேன். மேலும், எங்கள் ஊரில் உயரம் தாண்டுவதாக நினைத்தே போட்டியின் உயரத்தை தாண்டிவிட்டேன். எனவே, நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியும் என்று நினைத்து செய்தால் அனைத்தும் முடியும்” என்று பெருமை பொங்க மாரியப்பன் தெரிவித்தார்.

சேலம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனுக்கு சேலம் தபால் துறை சார்பில் மை ஸ்டாம் என்ற திட்டத்தின் கீழ் அவரது உருவப்படம் பொறித்த அஞ்சல் தலை (Stamp) வெளியிடப்பட்டது,  பாரா ஒலிம்பிக் போட்டி என்பது மாற்றுத்திறனாளிகள் பங்குபெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்த உலக நாடுகள் இணைந்து நடத்திவரும் ஒரு விளையாட்டுப் போட்டியாகும்.

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், குண்டுவீச்சு, துப்பாக்கிச் சூடு மற்றும் பல்வேறு சூழலில் உடல் உறுப்புகளை இழந்து மனநிலை பிறழ்வுற்றவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர 1948-ஆம் ஆண்டு சிறு போட்டியாக லண்டனின் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு பாராஒலிம்பிக் போட்டிகள் நடத்தப் பட்டன,

முதலில் சில அயரோப்பிய நாடுகள் சேர்ந்து நடத்திய இந்த போட்டி பிற்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் மாபெரும் விளையாட்டுப் போட்டியாக உருமாறியது, 1952-ஆம் ஆண்டு பாரா-ஒலிம்பிக்கின் குழுவிதிகள் அமல்படுத்தப்பட்டு அய் பி சி எனப்படும் பன்னாட்டு பாராஒலிம்பிக் கமிட்டி உருவாக்கப்பட்டது,

இப்போட்டிகளில் கலந்துகொள்பவர்களை ஆறு பிரிவுகளாக பிரித்துள்ளனர். உடல் உறுப்புகளை இழந்தவர்கள், வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளைத்திறன் குறைபாடுடை-யோர், சக்கரநாற்காலி பிரிவினர், பார்வைக் குறைபாடுடையோர், லெ ஆதெர்சு (Les Autres) எனப்படும் குள்ளத் தன்மை கொண்டோர், முதுகு தண்டுவட வளை-வுடையோர் (கூன்), பேச்சுத்திறன்- கேட்புத்திறன் இழந்தோர் இப்போட்டிகளில் கலந்து-கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள் என்று தமிழில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் தாத்தா தான் இவர்களுக்குப் பெயர் சூட்டினார், உண்மையில் இன்றும் இவர்களை சிலர் உடல் ஊனமுற்றோர் என்று கொச்சையாக அழைத்து அவமானப்-படுத்துகின்றனர். உண்மையில் இவர்களுக்கு என்று தனித்திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன,

இந்த திறமைகளுக்கு 120- கோடி மக்களின் சார்பில் தங்கம் வென்று வந்த மாரியப்பனே பெரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

- ஆத்தூர் சந்திரன்

Share