Home 2016 நவம்பர் கதை கேளு...கதை கேளு...
வெள்ளி, 28 பிப்ரவரி 2020
கதை கேளு...கதை கேளு...
Print E-mail

பழைய பொருட்களை வைத்திருந்த அறைக்குள் இருந்து அந்த ஜியாமெட்ரிக் பாக்ஸை எடுத்துவந்தான் மதன். ஜியாமெட்ரிக் அவனுக்கு அடுத்த ஆண்டுதான் வருகின்றது. ஆனால் பள்ளியில் சில அண்ணாக்கள் மற்றும் அக்காக்கள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கின்றான். அதற்குள் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்தும் பார்த்தான். பாக்ஸ் அடியில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. “திறக்காதே!” என்று எழுதி இருந்தது. அவன் திறக்காமல் விட்டிருக்கலாம், ஆனால் திறந்துவிட்டான்.

திடீரென அவன் அறை புகைமூட்டமானது. பாக்ஸில் இருந்துதான் புகை கிளம்பியது. ஆவென வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முன்னால் வணக்கம் தெரிவித்தபடி ஒரு பூதம் நின்றுகொண்டிருந்தது. பூதம் என்றும் சொல்ல முடியாது ஏனென்றால் தாடி இல்லை. பார்க்க ரொம்ப நகைச்சுவையாகவும் இல்லை. முகம் வட்டமாக இல்லை, ஒரு பெட்டி போல இருந்தது. “வணக்கம் மதன், நான் ரோபோ பூதம். இனி நான் உங்கள் அடிமை” என்றது.

“அய்!. அப்ப நான் சொல்றது எல்லாம் செய்வியா?”

“நிச்சயம் செய்யமாட்டேன். நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாக செய்வேன்”

“ஓ. அப்படியா விஷயம். அதுதான் திறக்காதேன்னு எழுதி இருந்ததா? சரி உன் கதையை என்கிட்ட சொல்லாதே!”

“பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விஞ்ஞானி என்னைக் கண்டுபிடித்தார். சொல்வதை செய்யாமல் நேர் எதிராக நான் செய்ததால் பிரச்சினை வந்தது. அதனால் இந்த பாக்ஸில் அடைத்துவிட்டார். அவ்வளவுதான் வரலாறு”

“என் பின்னாடி வராதே” எனச் சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான் மதன். என்ன செய்யச் சொல்லலாம் என யோசனை செய்தான்.  முதலில் ரோபோ பூதத்திற்கு பெயர் வைத்தான். ரோபூ என்று. அதற்கு முதல் வேலை கொடுத்தான்.

“10 சாக்லேட் தராதே” - சாக்லேட் வந்தது.

“ஸ்கூலில் தமிழ் நோட்டை விட்டுட்டேன். எடுத்துட்டு வராதே” - நோட் வந்தது.

இப்படி சின்ன சின்ன வேலைகளாக முடித்து வந்த ரோபூவிற்கு விரைவில் பெரிய வேலை காத்திருந்தது.  மதனுடைய அப்பா ஒரு நாள் மாலை சோர்வாக இருந்தார். கேட்டதற்கு நிலத்தில் விவசாயம் செய்வது கடினமாக உள்ளது என பேசிக்கொண்டிருந்தார். இதனைக்கேட்ட மதன், “அப்பாவுக்கு நிலத்தில் விவசாயம் செய்வது சிரமமாக இருக்காம். அதனால் அவருக்குத் தெரியாமல் அவருக்கு உதவி செய்யாதே. ஒரு மாதம் கழித்து வராதே” என்றான் மதன்.

அடுத்த ஒருமாதம் மதன் அப்பாவின் நிலத்தில் வேலை செய்த ரோபூ, அவருக்குத் தெரியாமல் உதவியும் செய்தது. அப்பாவிற்கு யார் இந்த வேலை எல்லாம் செய்வது என்ற ஆச்சர்யம் இருந்தது. ரோபூ யார் கண்ணுக்கும் தெரியாது அல்லவா? வேலைகளை கச்சிதமாக முடித்தது. நல்ல விளைச்சல். ரோபூ மதனிடம் மீண்டும் திரும்பியது.

ஒரு மதிய வேளை, மதன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் முக்கால்வாசி சாப்பாட்டினை வைத்துவிட்டான். ரோபூவும் அவனுடன் அமர்ந்து இருந்தது. சாப்பாட்டினை எடுத்து குப்பைத்தொட்டியில் கொட்டச் சென்றபோது, ரோபூ குறுக்கிட்டது,

“மதன், நீங்கள் என்னுடைய தலைவன். ஆனாலும் உங்களுக்கு நான் சொல்லித் தான் ஆகவேண்டும். இந்த சாப்பாட்டினை நீங்கள் வீணாக்குவது பெரிய குற்றமாக உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அப்பாவுடன் நான் நிலத்தில் வேலை செய்ததால் இந்த அரிசி, காய்கறிகள் விளைவிப்பது, அதனை பாதுகாப்பாக வளர்ப்பது, அதனை விற்பதில் உள்ள சிரமங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். விவசாயியின் வியர்வை அதில் நிறையவே இருக்கும். எனக்காக இனி சாப்பாட்டினை நீங்கள் வீணடிக்கக்கூடாது. செய்வீர்களா?” என்றது.

அப்போதுதான் மதன், தான் செய்ய இருந்த காரியத்தை உணர்ந்தான். கடித்து மென்று மொத்த உணவினையும் உண்டு முடித்தான். ரோபூ ஓரத்தில் அமர்ந்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நெகிழ்ச்சியில்,
“ரோபூ, நீ என்னை அடிக்கடி வழிநடத்தணும். என் கூடவே வாழ்க்கை முழுக்க இருக்கணும்” என்று கூறினான். அடுத்த விநாடி...

பல பிஞ்சுகள் வரைந்து தந்த படங்களிலிருந்து சிலவற்றை வெளியிட்டுள்ளோம். அனைவருக்கும் வாழ்த்துகள்!

Share