Home 2016 நவம்பர் நிலாவுக்குக் காரில் பறந்த லாலினி
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
நிலாவுக்குக் காரில் பறந்த லாலினி
Print E-mail

லாலினி பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்பி இருந்தாள். அன்று, அவள் ரொம்பக் குஷியாகக் காணப்பட்டாள். தனது ஓவிய அறையில் புத்தகப் பையை வைத்துவிட்டு வெளியேறினாள். அவசர அவசரமாக ரிமோட் கார் இருக்குமிடத்தைத் தேடி அதைக் கையில் எடுத்துக்கொண்டாள். “வா! வா! சீக்கிரமா கௌம்பணும். என்னைக்கும் பார்த்திராத புதுப்புது ஊருகளுக்கு இன்னிக்கி நாம போகப்போறோம்’’ என்று தான் கையிலெடுத்த ரிமோட் காரிடம் பேசினாள்.

நாள்தோறும் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் முதல் வேலையாக வீட்டுப் பாடங்களை எழுதி முடிப்பாள். மாலை ஆறு மணிக்குப் பிறகுதான் அவளுக்கு விளையாட அனுமதி கிடைக்கும். இன்றைக்கு என்னவோ எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது என்று நினைத்த லாலினியின் அம்மா, மகளின் சுட்டித்தனத்தை வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தார். “லாலி இந்தா ஒரு கிளாஸ் ஜூஸ் குடிச்சிடு!’’ லாலினி அம்மா தந்த பழரசத்தைக் குடித்து முடித்தாள்.

உடம்புக்குத் தேவையான தெம்பும் பலமும் கிடைத்திருந்ததால் அவள் தனது விளையாட்டைத் தொடங்கினாள். வரவேற்பறைக்கு வந்து சேர்ந்த அம்மா, கன்னத்தில் கைவைத்தபடி நாற்காலியில் உட்கார்ந்தார். பரபரப்புடன் அறை முழுதும் ஓடிக்கொண்டிருந்த   மகளின் விளையாட்டைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்.

“யார் யாரெல்லாம் கார்ல ஏறி இருக்கீங்க? சரி! அனு, சுஜா, சாய்ரா, ஏஞ்சலின். நீங்க நாலுபேருமே சீட் பெல்ட் மாட்டிக்கோங்க. கார் கௌம்புறதுக்குத் தயாராயிடுச்சு’’ என லாலினி, தனக்குத்தானே பேசிக்கொண்டாள். தனது நெருங்கிய தோழியருடன் உலகச் சுற்றுலாவுக்குச் செல்வதாக லாலினி கற்பனை செய்துகொண்டாள்.

லாலினியின் ஓவிய அறை திடீரென்று சென்னையாக மாறியது. சென்னை என்றால் சென்ட்ரல் புகைவண்டி நிலையம். ரயில் நிலையத்துக்கு முன்பிருந்து அவளது ரிமோட் கார் கிளம்பியது. அங்கிருந்து வேகமெடுத்த கார், விஜயவாடா, போபால், இந்தூர், ஜான்சி ஆகிய நகரங்களைக் கடந்து வடக்கில் உள்ள படுக்கை அறைக்குள் நுழைந்தது.

அவளது படுக்கையறை எந்த ஊர் தெரியுமா? இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லி. புதுடெல்லியைச் சென்றடைந்த கார் எழுத்து மேசைக்குக் கீழே புகுந்து ஓடியது. ஆமாம்! அவளது எழுத்துமேசை என்பதுதான் இமயமலைத்தொடர்.  “சீக்கிரம்! இமயமலைத் தொடருக்கு மேலே ஏறிச்செல்ல நமக்கு இப்போதைக்கு நேரமில்லை. மலைகளுக்கு அடியில குகையைக் குடைஞ்சு வெச்சிருக்காங்க. குகைப் பாதையில புகுந்து நாம சீனாவுக்குப் போறோம்.’’ என்றவள் ரிமோட் காரை மேசைக்கு அடியில் இயக்கினாள்.

அடுத்த சில நிமிடங்களில் அவளது சிகப்பு நிற ரிமோட் கார் சீனா சென்றடைந்தது. இடது கை மணிக்கட்டில் கட்டியிருந்த பொம்மைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்...

“ம்ம்ம், சீனாவுக்கு வந்தாச்சு. நம்மகிட்ட ரொம்ப நேரமில்லை. சீக்கிரமா சாங்காய், பெய்ஜிங்கெல்லாம் சுத்திப் பார்த்திட்டுக் கிளம்பணும்’’ என்றவள்,  ரிமோட்டில் விரல் வைத்து அழுத்திப் பிடித்தாள். அவளது கார், சர் சர்ரென ஒரே அறைக்குள் பல சுற்றுக்களைச் சுற்றி முடித்தது. பிறகு அருகிலிருந்த ரஷ்யாவுக்குப் பயணித்த கார் அதன் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தது.

மாஸ்கோ நகரத்தை முழுவதுமாகப் பார்த்து ரசித்துவிட்டிருந்த லாலினி, மறுபடியும் ரிமோட் பொத்தானை அழுத்தினாள். அந்தக் கார் படுக்கையறையை ஒட்டிய கழிப்பறை வாயிலை அடைந்தது. ஈரப்பதத்துடன் இருந்த அந்த இடம் பசிபிக்பெருங்கடலாக மாறியது. அந்த அறைக்கு அடுத்துள்ள இடத்தை ஜப்பான் என்று அறிவித்தாள்.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ சென்றடைந்த லாலினி, காரிலிருந்து இறங்கி பூங்காவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த சிறுமிகளிடம் சிறிது நேரம் உரையாடினாள். அங்கிருந்த சிறுமிகள் கற்றுத் தந்த பாடலைப் பாடி இந்திய நடனமாடிக் காண்பித்தாள்.

“டோங்குரி கொர கொர டோங்குரி கோ,
டோங்குரி கொர கொர டோங்குரி கோ’’

என்ற ஜப்பானியக் குழந்தைப் பாடலை மனனம் செய்துகொண்டாள்.

பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்று அமெரிக்கா சென்றடைந்தாள். அடுத்ததாக பயணிக்க வேண்டிய நாடு எதுவென சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை. சிறிது நேரம் யோசித்துப் பார்த்தவளுக்கு ஆப்பிரிக்கா நினைவுக்கு வந்தது. படுக்கையறை கட்டிலுக்குக் கீழ்ப்பகுதிதான் ஆப்பிரிக்கா. ரிமோட் கார் ஆப்பிரிக்க கண்டத்துக்குள் நுழைந்து சென்றது. அடுத்ததாகச் போய்ச்சேர வேறு இடமே இல்லை. அரைமணி நேரத்துக்குள் உலகம் முழுதும் சுற்றி வந்தாகி விட்டது.

லாலினியின் வீட்டில் நடந்தவை எல்லாமே சினிமாக் காட்சிகளை நினைவுபடுத்தியது. முப்பது நிமிடங்களில் முழு உலகையும் சுற்றிவர லாலினி ஒருத்தியால் மட்டுமே முடிந்தது. அவளைக் கவனித்துக்கொண்டிருந்த அம்மாவோ மகளின் விளையாட்டைப் பார்த்து ஆச்சரியமாக உணர்ந்தார். சரி! இனி பயணிக்க வேண்டிய இடங்கள் ஏதேனும் மிச்சம் உள்ளனவா? இல்லை.

உலக அதிசயங்கள் அனைத்தையும் அருகில் இருந்தபடி பார்த்து ரசித்தாகி விட்டது. இனி இந்தப் பூமியைக் கடந்து வேறு கோள்களுக்குத்தான் செல்லவேண்டும். லாலினி வேறு யோசனையில் திளைத்திருந்தாள். அடுத்த சில நொடிகளில் சுதாரித்துக்கொண்ட லாலினி ஒரு முடிவுக்கு வந்தாள். ரிமோர்ட் காரை வேகமாக ஓட்டிச் சென்றாள். அந்தச் சிவப்பு நிறக் கார், நிலை வாயிலை முட்டி நின்றது.

“அய்யோ அம்மா! நாங்க இந்த பூமியைக் கடந்து போக முடியாதா?’’ உரத்தகுரலில் கத்தினாள். வரவேற்பறையில் உட்கார்ந்து அவளது விளையாட்டைக் கவனித்துக் கொண்டிருந்த அம்மா பதில் பேசாமல் காத்திருந்தார். குழந்தைகள், புதிது புதிதான பொழுதுபோக்கு விளையாட்டுகளைக் கண்டுபிடிக்கும் திறமை படைத்தவர்கள் என்பதை மட்டும் அவர் புரிந்துகொண்டார்.

கடைசியில், லாலினிக்குப் பூமியைக் கடந்து சென்றாக வேண்டும். ஆனால் ரிமோட் கார் வாசலுக்கு அருகில் வரை சென்று நின்று கொள்கிறது. நிலைவாயில் தடுப்பு மரம் காரை மறு பக்கத்திற்குத் தாண்டிச் செல்ல விடுவதில்லை. லாலினி பல தடவை முயற்சி செய்தாள். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு திடீரென்று தடுப்பு மரத்தைத் தாண்டிய கார், பலதடவை குட்டிக்கரணமடித்து கீழே உருண்டது. ஆனால் அந்தக் கார் சேதமடையவில்லை.

லாலினியும் அவளது தோழிகளும்கூட காயங்கள் இல்லாமல் தப்பித்தார்கள். ஆஹா! அவள் நினைத்தது சரியாவே நடந்தது. வாசலுக்கு வெளியே அம்மா அதிகாலையில் வரைந்து வைத்த நிலாக் கோலத்திற்கு நடுவில் கவிழ்ந்து நின்றது கார். காலையில் வரைந்த கோலம் கொஞ்சம் கலைந்திருந்தது. லாலினி, கலைந்த கோலத்தைப் பிறைநிலா என்றாள்.

“அடடே! இப்போ நாம் நிலாவுக்கு வந்திட்டோம். எல்லாரும் இறங்கி வாங்க. நிலாவுல இறங்கி நடப்போம்’’ ரிமோட்டைக் கீழே வைத்துவிட்டு கைகளைத்தட்டிக் கொண்டாடினாள் லாலினி. லாலினியின் விளையாட்டுக்கான காரணம் அம்மாவுக்குப் புரியவந்தது. ஆமாம்! இன்று அவளது வகுப்பில் உலக நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்கள் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

பூமியையும் அதன் துணைக்கோள்களையும் வரைபடத்தில் காண்பித்து ஆசிரியை விளக்கியிருக்கலாம்.  லாலினி மட்டுமல்ல. நாமும் அப்படித்தானே, வகுப்பில் சொல்லித் தந்த பாடங்களை, உண்மையில் சின்னச் சின்ன மாதிரிகளாகச் செய்து பார்த்துத்தான் புரிந்துகொள்ளப் பழகுகிறோம்.

Share