Home 2016 ஜனவரி பிஞ்சுகளின் சமூக அக்கறை
வெள்ளி, 23 ஏப்ரல் 2021
பிஞ்சுகளின் சமூக அக்கறை
Print E-mail

“இவரு வீட்டுக்குள்ள தண்ணீர் நிறைஞ்சு போச்சு. தாத்தா எப்படியோ பாட்டியை மின்விசிறி மேல ஏத்தி விட்டுட்டாரு. தாத்தா ஏற முடியாம மின்விசிறி இறக்கையை புடுச்சிட்டு தொங்குனாராம். கை நழுவி தண்ணீரில் விழுந்து இறந்தே போயிட்டாராம்.”

இது யார் சொன்னது? 2  ஆம், வகுப்பு பயிலும் ஏஞ்சல். நல்ல மெருகேறிய கருநிறம், துறுதுறுவென்று இருக்கும் முகம், அகன்ற கண்கள். அந்தக் கண்களில் அச்சமும், துயரமும் கலந்தாட வாயோடு சேர்ந்து முகமும் கைகளும் பேச, கேட்கிற நமக்கு அந்தக் காட்சியை நேரில் கண்டால் எவ்வளவு துன்பம் ஏற்படுமோ அதைவிட அதிக துன்பத்தைத் தந்தது.

இந்தக் காட்சியை ஏஞ்சல் வரைந்தும் வைத்திருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு பெரியார் பிஞ்சு “ஆனா, உண்மையில் பாட்டிதான் தண்ணீரில் விழுந்து இறந்துட்டாங்க”  என்றார்.

தாத்தாவோ, பாட்டியோ ஏதோ ஒரு உயிர் காப்பாற்ற நாதியின்றி தண்ணீரில் விழுந்து இறந்திருக்கிறது. அது இந்தப் பிஞ்சுகளை கடுமையாக பாதித்திருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 7 வயது ஏஞ்சல் ஒரு சம்பவத்தைச் சொல்லி சென்னைக்கு ஏற்பட்ட பேரிடரை ஒட்டு மொத்தமாக புரிய வைத்து விட்டாள் என்று சொன்னால், முதல் வகுப்பு பயிலும் ஆ.கிஷோர் என்ற மழலை, “சென்னையில் கடந்த ஒரு மாதமாக ஜாதியும்,

மதமும் காணவில்லை யாரும் தேடி வந்துவிட வேண்டாம்”  என்று மழலை கையெழுத்தில் எழுதி சுவற்றில் ஒட்டி வைத்து நமது கண்களையும், கருத்தையுமே சேர்த்து ஒட்ட வைத்துவிட்டான். அதிலிருந்து விடுபடுவது பெரும் பாடாகிவிட்டது. 6 வயது தான் கிஷோருக்கு.

சென்னை மற்றும் கடலூரில் பெய்த கன மழையாலும், அதனையொட்டி ஏற்படுத்தப்பட்ட கடும் வெள்ளத்தாலும் மக்கள் பட்ட அவதிகளையும், அதிலிருந்து மக்களை மீட்க பலரும் செய்த உதவிகளையும், அதில் பெரியார் திடலிலிருந்து நிறைய உதவிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததையும் பார்த்தனர் மூன்று பெரியார் பிஞ்சுகள்.

அதில் செவ்வியன், செம்மொழி, இன்சொல் ஆகிய மூவரும் சேர்ந்து செய்தி ஏடுகளில் வந்திருக்கும் புகைப்படங்களை வெட்டி தனி அட்டைகளில் ஒட்டி கண்காட்சி வைத்து நிதி திரட்டி உதவலாம் என்று முடிவு செய்தனர். அவர்களுடன் சேர்ந்து கொண்டனர் அஞ்சு, அன்பு, நிதர்சனா, அர்ஜூன் ஆகியோர். அடுத்த இரண்டே நாள் இடைவெளியில் இன்னும் ஏராளமான பிஞ்சுகள் சேர்ந்து டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் நடத்திய பெருவெள்ளப் பேரிடர் கண்காட்சி தான் "கொட்டிய மழை; துளிர்த்த மனித நேயம்".

ஆசிரியர் தாத்தா வருகை தந்து கண்காட்சியைத் திறந்துவைத்தார். பிஞ்சுகளின் பணியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். உடன் கவிஞர் தாத்தா வந்தார். ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் வந்து பார்த்து வியந்தார். ஏராளமானோர் வந்து பார்த்து பெரியார் பிஞ்சுகளின் சமூக அக்கறையைக் கண்டு மகிழ்ந்தனர்.

இக்கண்காட்சி உருவாவதற்கு காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான பெரியார் பிஞ்சு செம்மொழி தனது பிறந்த நாள் நிதியை வெள்ள நிவாரண நிதியாக ரூ.400 உண்டியலில் போட்டு மற்றவர்களோடு சேர்ந்து கொண்டாடினான்.

கொட்டிய மழை ஏற்கனவே இருந்ததாகக் கருதப்பட்ட ஜாதி, மத பேதங்களையெல்லாம் அடித்துச் சென்றுவிட, அங்கே  மனிதநேயம் துளிர்த்தது. அது மழலைகள் உட்பட அனைவரிடமும் துளிர்த்தது. ஆகவே, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயளாலர் சத்திய நாராயண சிங், பெரியார் பிஞ்சுகள் திரட்டுகின்ற வெள்ள நிவாரண நிதியில் தன் பேத்தி பூஜாவின் சார்பாக ரூ.2000த்தை உண்டியிலில் போட்டு மனநிறைவடைந்தார்.

பாதிப்பைப் பார்த்தாயிற்று. அதற்கான நிவாரணப் பணிகளை தொண்டு நிறுவனங்கள் செய்தாயிற்று. அரசின் கடமை என்ன என்பதைச் சுட்டிக்காட்டியது போல, 8 ஆம் வகுப்பு பயிலும்

ச.அன்பு, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யனும். பாதிக்கப்பட்ட இடங்களில் மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்” என்று வேண்டுகோளே வைத்துவிட்டார்.

மக்களின் துயரைக்கண்டு பெரியார் பிஞ்சுகளும் துன்பப்படுகின்றன. அதற்கான பரிகாரத்தை தேட முயலுகின்றன. அதற்கான காட்சிதான், “கொட்டிய மழை! துளிர்த்த மனிதநேயம்!” என்ற இந்த நிகழ்ச்சியே. ஆகவே, பிஞ்சுகள் ஆணையிடவும் உரிமையுள்ளவர்கள் தானே! அதைத்தானே ச.அன்பு வேண்டுகோள் வடிவத்தில் வைத்திருக்கிறார்.

இதையும் தாண்டி 11  ஆம் வகுப்பு பயிலும் செ.பெ.தொண்டறம் தமிழக அரசின் மீது குற்றமே சுமத்துகிறார். உயிரிழப்புகள் அதிகமானதற்குக் காரணம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே என்கிறார். எல்லாருமே இதைக் குறிப்பிட்டுள்ளனர். காலம்தான் இதற்குப் பதில் சொல்லும். செ.பெ.தொண்டறத்தின் கருத்தையொட்டியே அறிவுச்செல்வி கூறுகிறார்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகத் தண்ணீரைத் திறந்துவிட்டதே காரணம் என்கிறார். இதுவும் ஆய்வுக்குரியதுதான். தந்தை பெரியார் “கடவுளை மற! மனிதனை நினை!” என்று சொன்னார். அதுதான் டிசம்பர் 2 ஆம் தேதியிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டவரின் துயரங்களை கடவுள் வந்து போக்குவார் என்று யாருமே காத்திருக்கவில்லை. மனிதர்களை நினைத்தார்கள், மனிதநேயத்தின் வடிவமாகவே மாறி களத்தில் இறங்கி மக்களுக்கு தொண்டாற்றினர். இந்த உணர்வும், உறவும்  எல்லாக் காலங்களிலும் நீடித்தால் சண்டை ஏது? சச்சரவு ஏது? சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் தான் ஏது? எல்லோரும் பெரியார் பிஞ்சுகளின் மனநிலைக்கே சென்று விடலாம் அல்லவா?

- மலை

Share