Home 2016 ஜனவரி குழந்தைகள் நாடகம்
வெள்ளி, 23 ஏப்ரல் 2021
குழந்தைகள் நாடகம்
Print E-mail

பள்ளி கலை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நல்ல நாடகங்களைத் தேடி அலைவோம். ஒன்றும் சரியாக வரவில்லையென்றால் மொக்கையாக எதையாவது எழுதி நடித்துவிட்டு வருவோம். சமூகச் சிந்தனையோடு குழந்தைகளுக்கான நாடகங்களை எழுதி பெரியார் பிஞ்சு வாசகர்களுக்காகத் தருகிறார் கலை அறப் பேரவை மு.கலைவாணன்.

கதைமாந்தர்கள்:

ரங்கன், நல்லமுத்து, ஆனந்தன், ஒருவர் மற்றும் சாலையில் செல்வதற்காக ஒரு சிலரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:
கருப்புக் கண்ணாடி, பார்வையற்றோர் பயன்படுத்தும் அலுமினியக் கைத்தடி, தோள் பை.

காட்சி : 1                   சாலை

பங்கேற்போர் : ரங்கன், நல்லமுத்து, ஆனந்தன்
முகத்தில் பெரிய மீசை, முரட்டு உருவம்கொண்ட ரங்கன் கலர் பனியனுடன் கழுத்தில் கலர் கைக்குட்டை கட்டிக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்தபடி வருகிறான்.

ரங்கன் : அடச்சே! இன்னைக்கு ஒரு பயலும் மாட்டலியே... நேத்து பிட்பாக்கெட் அடிச்சதுலே கிடைச்ச நூறு ரூபாயும் நேத்தே செலவாயிடுச்சு, இன்னைக்கு செலவுக்கு என்ன செய்யிறது... ம்? யாராவது மாட்டாமலா போவான்.

(கண்பார்வையற்ற நல்லமுத்து தட்டுத் தடுமாறியபடி வருகிறார்.)

நல்லமுத்து : அய்யா... அண்ணே! யாராவது எனக்குக் கொஞ்சம் உதவி செய்யுங்கண்ணே... அண்ணே! அய்யா! சார்... யாருமே இல்லியா... சார்!

(ரங்கன் மெதுவாக அருகில் வந்து.)

ரங்கன் : யாருப்பா நீ... எங்கே போகணும்?

நல்லமுத்து : போகணும்! ஆனா எங்கே போறதுன்னுதான் தெரியலே...

ரங்கன் : ஏம்ப்பா.. என்ன ஆச்சு...

நல்லமுத்து : கண்ணு தெரியாமெ பொறந்தது என்னோட குத்தமாங்க... வீட்டுலெ எல்லாரும் என்னை பாரமா நினைக்குறாங்க... அப்பாவோ குடிகாரரு. தினமும் என்னைத் திட்டுறாரு... அம்மாவோ உடம்பு சரியில்லாதவங்க.. என்ன செய்யிறதுன்னு தெரியாமெ வருத்தப்படுறாங்க... அதனாலே அவங்களுக்கு பாரமா இருக்க வேண்டான்னு வீட்டை விட்டு வந்துட்டேங்க...

ரங்கன் : வீட்டை விட்டு வந்துட்டே சரி... எங்க போறே!

நல்லமுத்து : யாருக்கும் சுமையா இல்லாமெ சாகப் போறேங்க...

ரங்கன் : சாகப்போறியா? ஆமா.. கையிலெ எவ்வளவு காசு வச்சிருக்கே...

நல்லமுத்து : கையிலே காசில்லேங்க..

ரங்கன் : பையிலெ...

நல்லமுத்து : காசேயில்லேங்க.. சாகுறவனுக்கு எதுக்குங்க காசு..
(மெல்லிய குரலில்)

ரங்கன் : சரியான சாவுகிராக்கி போலிருக்கு... கையிலெயும் காசில்லேங்கிறான்... பையிலேயும் காசில்லேங்குறான்...

நல்லமுத்து : அய்யா... சார், என்னை அந்தப் பக்கம் ரோட்டைத் தாண்டி விட்டுடுங்க... எங்கேயோ, எப்படியோ போயிடுறேன். யாருக்குமே பலனில்லாத நான் வாழ்ந்து என்ன செய்யப்போறேன்...

ரங்கன் : கொஞ்சம் இருப்பா... யாருமே மாட்டலெ.. மாட்டுனவனும் காசில்லாதவனா இருக்கான். இவனை வச்சு என்ன செய்யலாம்...
(யோசிச்சு)

ஆங்... அதான் சரி... தம்பி! கையைக்குடு... வா போலாம்!
(உரத்த குரலில்)

அய்யா கண்ணிலாத பாவி அய்யா... தர்மம் பண்ணுங்கசாமி.. உங்க புள்ளை குட்டிக்கெல்லாம் புண்ணியம் அய்யா! அம்மா தர்மம் பண்ணுங்க.. கண்ணில்லாதவன் சாமி...
(என நல்லமுத்துவின் கையைப் பிடித்தபடி பிச்சையெடுக்கிறான் ரங்கன்.)

ரங்கன் : அய்யா! அம்மா கண்ணில்லாத பாவி அம்மா!
ஒருவர் : அய்யோ! பாவம்.. இந்தாப்பா.
(என ரங்கன் கையில் காசு போட்டுவிட்டுப் போகிறார்.

நல்லமுத்து : டேய்! கையை விடுடா... நான் பிச்சைக்காரன் இல்லே.. நான் பிச்சைக்காரன் இல்லே என்னை வச்சு பிச்சையா எடுக்கிறே டேய்! கையை விடுடா...
(என ரங்கனை அடித்து கையை இழுக்கிறார் நல்லமுத்து.)

ரங்கன் : கண்ணுத் தெரியாமெ கஷ்டப்படுறியே உன்னைவெச்சு ஒரு பிசுனஸ் பண்ணலாமேன்னு பாத்தா கிறுக்குப்பய பிச்சை எடுக்க மாட்டானாமே... பெரிய லாடு லபக்கு மாதிரி பேசுறான்.. சே..

நல்லமுத்து : கண்ணு தெரியாதவன்னு வீட்டுலெ கேவலமாப் பேசுறாங்களேன்னு வெளியிலெ வந்தா என்னை வச்சு பிச்சையா எடுக்கப் பாக்குறே உன்னை...
(ரங்கனை பிடித்து அடிக்க முயற்சிக்கிறார் நல்லமுத்து)

ரங்கன் : போனாபோவுது சாகப் போறவனை காப்பாத்தலாம்னு பாத்தா ரொம்பத்தான் அலட்டிக்கிறானே... போடா போ... ரோட்டுக்கு குறுக்க போயி வண்டியிலெ அடிபட்டு சாவு...
(எனப் பிடித்துத் தள்ளிவிட்டுப் போகிறான் ரங்கன். தட்டுத்தடுமாறி விழுந்த நல்லமுத்து மெதுவாக எழுந்து நடக்க முயற்சிக்கும்போது எதிரே கருப்புக் கண்ணாடி அணிந்து தோளில் பையுடன் வரும் ஆனந்தன் மீது மோதிக் கொள்கிறார்.)

ஆனந்தன் : யாருங்க! பாத்துப் போகக்கூடாது?

நல்லமுத்து : கண்ணுத் தெரியாத நான் எப்படிங்க பாத்துப் போகமுடியும். கீழே விழுந்து எழுந்திரிச்சதுலெ தெரியாமெ இடிச்சுட்டேன் மன்னிச்சடுங்க...!

ஆனந்தன் : கீழே விழுந்துட்டிங்களா என்ன ஆச்சு? நான் எதாவது உதவி செய்யட்டுமா?

நல்லமுத்து : உதவியா வேணாங்க! வேணாம்! இப்பதான் ஒருத்தன் ரோட்டை கடந்து விடச் சொன்னா என்னை வச்சு பிச்சையெடுக்கிறான். அது புடிக்காமெ அவனோட சண்டை போட்டேன். கீழே தள்ளிவிட்டுட்டுப் போய்ட்டான். மறுபடி நீங்களும் உதவி செய்யிறேன்னு வந்து நிக்கிறீங்க... வேணாங்க. நீங்க போங்க.. நான் எப்படியோ போயி சாகுறேன்.

ஆனந்தன் : சாகுறீங்களா?

நல்லமுத்து : ஆமா! வீட்டுலெயும் இருக்க முடியலெ, வெளியிலெயும் நடமாட முடியலெ அப்பறம் ஏன் வாழணும்?

ஆனந்தன் : கட்டாயம் வாழமுடியும்! அதுக்கான வழியே நான் காட்டுறேன்.

நல்லமுத்து : போதும்சாமி! போதும். நீங்க சொன்னதே போதும். இனியும் ஏமாற நான் தயாரா இல்லே...

ஆனந்தன் : நான் அப்படி ஏமாத்த மாட்டேன்! ஏன்னா எனக்கும் உங்களை மாதிரியே ரெண்டு கண்ணும் தெரியாது.

நல்லமுத்து : என்னது உங்களுக்கும் கண்ணு தெரியாதா?

ஆனந்தன் : ஆமா! என் பேரு ஆனந்தன். பேருக்கேத்த மாதிரி ஆனந்தமா வாழ்ந்துகிட்டிருக்கேன்!

நல்லமுத்து : என்பேரு நல்லமுத்துங்க. உங்களுக்கு கண்ணு தெரியாதுன்னு சொல்றிங்க, அப்பறம் எப்படி பேருக்கேத்த மாதிரி ஆனந்தமா வாழுறேன்னு சொல்றிங்க... அது எப்படி முடிஞ்சது உங்களாலெ?

ஆனந்தன் : எல்லாராலேயும் முடியும்! ஏமாத்துறவங்க இருக்கிற இந்த உலகத்துலெ பல நல்லவங்களும் இருக்காங்க.. மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு மய்யத்தின் உதவியோட நான் நாற்காலிக்கு ஒயர் பின்னுற வேலையெ கத்துக்கிட்டேன். நம்மளை மாதிரி இருக்கிற இன்னும் ரெண்டு பேரை சேத்துக்கிட்டு நாற்காலிகளுக்கு ஒயர் பின்ற வேலையெ மொத்தமா காண்ட்ராக்டு எடுத்து செய்துக்கிட்டிருக்கேன் வாங்க... அந்த வேலையெ உங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்...

நல்லமுத்து : ஆனந்தன்! என்னை மன்னிச்சுடுங்க! ஒருத்தன்கிட்ட ஏமாந்த உடனே எல்லாரையும் தப்பா நினைச்சது என் தப்புதான்! போன ஜென்மத்துலெ செய்த பாவத்துனாலெதான் இந்த ஜென்மத்துலெ இப்படி ஆயிடுச்சுன்னு வேதனையிலெ சாகப்போன என்னை காப்பாத்துன நீங்க நல்லாயிருக்கணும்.

ஆனந்தன் : நான் மட்டுமில்லெ நாம எல்லாருமே நல்லாயிருக்கலாம். கண்ணு தெரியலேங்கிறது போன ஜென்மத்து பாவமுமில்லே, இந்த ஜென்மத்து பலமுமில்லே. பெற்றோர்களின் கவனக்குறைவு, அல்லது நம்மோட கவனக்குறைவுனாலே, விபத்துனாலேதான் பார்வைக் குறைபாடு ஏற்படுது.

அதுக்காக வருத்தப்பட்டு யாரும் தப்பான முடிவுக்குப் போயிடக்கூடாது. தன்னம்பிக்கை இருந்தா எல்லாராலேயும் வாழ முடியும்... வாங்க போலாம்.
(என பையில் கைவிட்டு மடித்து வைத்திருந்த அலுமினியக் கைத்தடியை நீட்டிப் பிடித்து கம்பீரமாக நடந்து போகிறார் ஆனந்தன்.

அவர் கையைப் பிடித்தபடி மகிழ்ச்சியுடன் பின் தொடர்கிறார் நல்லமுத்து.

முற்றும்

Share