Home 2017 ஜனவரி ஜோ(க்)சியர்- 2017 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள்
செவ்வாய், 22 செப்டம்பர் 2020
ஜோ(க்)சியர்- 2017 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள்
Print E-mail

ஜனவரி மாதத்திற்கான பலன்:

உங்களுக்கு இனிப்பு மேல அதிக நாட்டம் இருக்கும். சாக்லேட், அய்ஸ்கிரீம், கேக்குகள்னு கண்ணுல படுற எந்த இனிப்பையும் பார்த்ததுமே வாயில எச்சி ஊறும்! விட்டுவைக்கவே தோணாது! ஆனால் நீங்க அதிகமா இனிப்பு திங்கறதால உங்க பெற்றோருக்கு வாங்கிக் குடுக்குற செலவு மட்டுமில்லாமல், வீணான மருத்துவ செலவும் ஏற்பட வாய்ப்பு இருக்கு! அதனால இனிப்பு திங்கிறதுல கவனமாஇருக்கணும்! சளி, இருமல் வர வாய்ப்பிருப்பதால், சுடு தண்ணீர் அருந்துவதும், குளிரில் வெறும் தலையில் செல்லாமல் இருப்பதும் நல்லது.

பிப்ரவரி மாதத்திற்கான பலன்:

சோம்பேறித்தனம் அதிகமா இருக்க வாய்ப்பு இருக்கு. ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னால சிறுநீர் கழிக்க சோம்பேறித்தனப்பட்டு, தூக்கத்துல படுக்கையிலேயே ஒண்ணுக்கு இருந்து அடி வாங்குவீங்க! வீட்டுப் பாடத்தை எழுத சோம்பேறித்தனப்பட்டு பள்ளிக்கூடத்துல தண்டனைய அனுபவிக்கவும் வாய்ப்பிருக்கு! அதனால இதிலெல்லாம் கூடுதல்கவனமா இருங்க!

மார்ச் மாதத்திற்கான பலன்:

நீங்க எதிலயும் கவனமா இருக்கணும். பெற்றோரோட டூவீலர்ல போறப்ப, அரசாங்கம் சொல்லிடுச்சேங்கற கடமைக்காக அப்பா மட்டும் ஹெல்மெட்ட மாட்டிக்கிட்டு வண்டியோட்டுவாரு. அது தப்புன்னு சொல்லி, உங்களுக்கும் ஹெல்மெட் மாட்டிவிடச் சொல்லுங்க. இந்த மாதிரி விசயங்களில் ரொம்பவே கவனமாகவும் அக்கறையாகவும் இருக்கணும்னு பெற்றோருக்கு எடுத்துச் சொல்லுங்க!

ஏப்ரல் மாதத்திற்கான பலன்:

ஏப்ரல் மாதத் தொடங்கமே முட்டாள்கள் தினமாக இருப்பதால் உங்களை முட்டாளாக்குற மாதிரியான செயல்கள் நிறைய நடக்க வாய்ப்பிருக்கு. எந்த பொருள் வாங்கினாலும் அதோட பயன்பாட்டு தேதி, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, இரண்டையும் கவனமா பாருங்க. ஏமாந்துடாதிங்க. தேர்வு நேரமாகையால், கவனமாகப் படித்தால் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புண்டு.

மே மாதத்திற்கான பலன்:

இந்த மாதம் உங்களோட விடுமுறைக்கான காலம். இந்த மாதத்திலும் எதாவது சிறப்பு வகுப்புகளில் சேர்ந்து உங்களோட பொழுதை கடுமையாக்காமல், உங்களோட தாத்தா, பாட்டி, உறவினர்களோட செலவிடுங்க. குடும்பத்தோட சுற்றுலா சென்று நிறைய விசயங்களைக் கத்துக்கோங்க. அதிகம் வெய்யிலில் அலையாமல் இருப்பது உடலுக்கு நல்லது.

ஜூன் மாதத்திற்கான பலன்:

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு லைட்டா பொறாமை குணம் இருக்க வாய்ப்புள்ளது. சக மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்த்து பொறாமைப்படும் குணத்தை விட்டுவிடுங்கள். குழந்தைகள் அனைவருக்கும் தனித்துவமான திறமை உண்டு. மதிப்பெண் என்பது படிக்கும் பாடத்திற்கான அளவீடு தானே ஒழிய, உங்களுடைய தனித்திறமைக்கான அளவீடு அல்ல.

ஜூலை மாதத்திற்கான பலன்:

அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடும். குறிப்பாக தனது குடும்பத்தின் நிலை, தனது நிறம் குறித்தெல்லாம் தாழ்வான சிந்தனைகள் எழக்கூடும். ஏழை, பணக்காரன், கறுப்பு, வெள்ளை என்ற பாகுபாடு எவ்விதத்திலும் உங்களுடைய குணத்தை நிர்ணயிக்காது. செவப்பழகு என்ற வார்த்தை ஒரு விளம்பர மாயை. ஏழ்மையில் செம்மையாக வாழ்வது எளிது. எனவே தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

ஆகஸ்டு மாதத்திற்கான பலன்:

இம்மாதத்தில் பிறந்த குழந்தைகள் துறுதுறுவென எதையாவது செய்துகொண்டேயிருப்பீர்கள். அதனால் அவ்வப்போது வம்பில் மாட்டிக்கொண்டு அடி விழவும் வாய்ப்புண்டு. சேட்டைக்காரப் பிள்ளையென்ற பெயரெடுக்கவும் வாய்ப்புண்டு. எனவே உங்களுடைய சுறுசுறுப்பை, தேனீக்கள் போல உழைப்பதற்குப் பயன்படுத்துங்கள். கல்வி கற்பதிலும், மற்றவர்களுக்கு உதவவும் பயன்படுத்துங்கள்.

செப்டம்பர் மாதத்திற்கான பலன்:

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நம் வாழ்க்கையில் நாம் சம்பாதிப்பதிலேயே உயர்ந்த சம்பாத்தியம், நண்பர்களாவார்கள். கூடுமானவரை நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகுங்கள். தீய வழியில் செல்ல முற்படும் நண்பர்களைத் திருத்துங்கள். நம் சமூகத்தை வளமாக்குங்கள்.

அக்டோபர் மாதத்திற்கான பலன்:

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் புதுசு புதுசா என்னத்தையாவது பண்ணுவாங்க. கையில எதாவது அட்டைப்பெட்டி கிடைத்தால் அதை வைத்து வீடு, கார், பீரோ மாதிரி எதையாவது புதுமையா உருவாக்கி ஆச்சர்யப்பட வைப்பாங்க. இவங்களை கட்டுப்படுத்தாமல், புத்தாக்க சிந்தனையை ஊக்கப்படுத்த வேண்டியது மட்டும் தான் பெற்றோரோட கடமை. பண்டிகைகளின் பெயரில் மூடநம்பிக்கை நோய்கள் அண்ட வாய்ப்பிருப்பதால், கவனமாக அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

நவம்பர் மாதத்திற்கான பலன்:

சிலருக்கு அடம் பண்ற குணம் ரொம்பவே அதிகமா இருக்கும்! நினைத்ததையெல்லாம் வாங்கணும், நினைத்ததையெல்லாம் பண்ணணும்னு ஓவரா சாதிப்பாங்க! உங்க அடம் பண்ற குணத்தை எதாவது நல்ல இலக்கை நோக்கி திருப்புங்க! இமயமலைல ஏறணும், விமான பைலட்டாகணும்கற மாதிரி உயரமான இலக்கை அடைவதற்காக அடம் பண்ணினால் வாழ்க்கையில் முன்னேறவும் சாதிக்கவும் வாய்ப்பிருக்கு!

டிசம்பர் மாதத்திற்கான பலன்:

தண்ணீரில் கண்டம் வர வாய்ப்பிருக்கிறது. வெள்ளம், புயல், மழை போன்றவற்றிலிருந்து தப்பிக்க, அரசின் அறிவிப்புகளை கவனமாகக் கேட்க வேண்டும்.

இந்த மாதத்தோட காலண்டரை நாம தூக்கியெறிவதாலோ ஏனோ, இம்மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் தூக்கியெறியும் குணம் அதிகமா இருக்கும்! அப்படி நீங்க தூக்கியெறியும்போது அந்த இடத்தில் யாரும் இருக்காங்களான்னு செக் பண்ணிக்கோங்க! கண்ணாடிப்பொருள் எதுவும் கையில சிக்காமல் பார்த்துக்கோங்க! முடிந்தால் நீங்க குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டால் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல வாய்ப்பிருக்கு!

என்னடா... சில விசயங்கள் பொருந்திப் போகுது... சில விசயங்கள் தப்பா இருக்குதேன்னு யோசிக் கிறீங்களா...? நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களைத் தவிர வேறு யாரும் அடம் செய்ய மாட்டார்களா? இல்லை பிப்ரவரியைத் தவிர பிற மாதங்களில் பிறந்தவர்கள் சோம்பல்பட மாட்டார்களா என்ன? மேலே இருப்பவையெல்லாம் எல்லா மாதத்திலும் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும்.

ராசிபலன், மூடநம்பிக்கைகளை எல்லா ஏடுகளும் பரப்பும் நேரத்தில் அவற்றைக் கிண்டலடிக்கவும், வெய்யில், மழை போன்ற அந்தந்த மாதங்களுக்கான பொதுவான செய்திகளைச் சேர்த்தும் தான் இந்தப் பலன்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இது எல்லா மாதங் களுக்கும், எல்லா ஆண்டுகளுக்கும் பொருந்தும்.

மற்றபடி, 2017 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் ஒழுங்காக இருந்தால், இந்த ஆண்டும் 365 நாள்களுடனும், ஒவ்வொரு வாரமும் 7 நாள்களுடனும், ஒவ்வொரு நாளும் 24 மணிநேரத்துடனும் ஒழுங்காகவே இருக்கும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

Share