Home 2017 ஜனவரி பேசாதன பேசினால் 4
வியாழன், 13 ஆகஸ்ட் 2020
பேசாதன பேசினால் 4
Print E-mail

ஏழாம் வகுப்புப் படிக்கும் தமிழரசி தன் பள்ளியின் சார்பில் மறுநாள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா போகப் போகிறாள். தான் எலுமிச்சை சோறு எடுத்து வருவதாகத் தன் தோழிகளிடம் சொல்லியிருந்தாள் தமிழரசி. அதற்காக எலுமிச்சம்பழம் வாங்கிவர அவளையே கடைக்கு அனுப்பி வைத்தார் அவள் அம்மா.

வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் கடைவீதியில் எலுமிச்சம்பழம் எங்கே விற்கிறது என்று தேடிக் கொண்டே நடந்தாள் தமிழரசி. ஒரு தாத்தா கோணி ஒன்றை விரித்து அதில் எலுமிச்சம் பழங்களைக் கொட்டி வைத்து விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த தமிழரசி அங்கே சென்றாள்.

அந்தத் தாத்தாவிடம் ஒரு பெண்மணி, “எலுமிச்சம் பழம் என்ன விலை?” எனக் கேட்க, தாத்தா, “அஞ்சு பத்து ரூபாம்மா” என பதில் கூறினார். இதைப் பார்த்த தமிழரசி விலை பேசும் இந்த அம்மாவை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதே என உற்றுப் பார்த்தாள். “அட! இவங்க தொலைக்காட்சியிலே சமையல் குறிப்பு சொல்றவங்களாச்சேன்னு” நினைவுக்கு வந்தது.

அந்தப் பெண், “தாத்தா! நல்லா பெரிய பழமா அஞ்சு குடுங்க; இது சாமிக்கு” என்றார்.

“சாமிக்கா இருந்தாலும் ஆசாமிக்கா இருந்தாலும் இங்க இருக்கிறதுதான். அதுக்காக ஸ்பெஷலா விளைய வச்சா கொண்டுவர முடியும்? நீங்களே பாத்து எடுத்துக்குங்க” என்றார் தாத்தா.

அந்தப் பெண்மணி தேடிப்பிடித்து அய்ந்து பழத்தை எடுத்துக்கொண்டு தாத்தாவிடம் பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு கிளம்பினார். தமிழரசியும் பழத்தை வாங்கிக் கொண்டு அந்தப் பெண்மணியின் பின்னாலேயே வீடு நோக்கி நடந்தாள்.

அந்தப் பெண்மணி கடைவீதியின் முனையில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றார். அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் மகிழுந்து அருகில் சென்றதும் ஓட்டுநரைக் கூப்பிட்டு, “இந்தாப்பா இதை சக்கரத்துக்கு அடியிலே வை... நான் போயி இதுலெ கற்பூரம் வச்சி கொளுத்தி எடுத்துக்கிட்டு வர்றேன்” என்று ஒரு எலுமிச்சம் பழத்தோடு போனார்.

இதையெல்லாம் சாலையின் ஓரமாக நின்ற தமிழரசி வேடிக்கைப் பார்த்தாள்.

கற்பூரம் ஏற்றிய எலுமிச்சம் பழத்தோடு வந்த அந்தப் பெண்மணி அதை ஓட்டுநரிடம் கொடுத்தாள். அவர் அதை பயபக்தியோடு வாங்கி வண்டிக்கு முன்னால் நின்று இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக மூன்று சுற்றுச் சுற்றி கீழே கற்பூரத்தை தட்டிவிட்டு பழத்தை கையால் அடித்து நசுக்கி இரண்டு துண்டாக்கி ரெண்டு பக்கமும் வீசிவிட்டு வண்டியில் ஏறி சக்கரத்தின் அடியில் வைத்திருந்த எலுமிச்சம் பழங்களை நசுக்க வண்டியைக் கொஞ்ச தூரம் ஓட்டி நிறுத்தினான்.

அதுவரை கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி பெரிய கும்பிடு போட்டுவிட்டு வண்டியில் ஏறினார். மகிழுந்து வேகமாகக் கிளம்பிப் போனது. பத்து ரூபாய்க்கு வாங்கிய அய்ந்து பழங்களும் யாருக்கும் பலனில்லாமல் சாலையில் நசுங்கிக் கிடந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்த தமிழரசி, இந்த அம்மாதானே போனவாரம் டிவியிலே சமையல் நிகழ்ச்சி நடத்தும்போது எலுமிச்சம் பழத்துல என்னென்ன சத்து இருக்குன்னு பேசுனாங்க... இவங்களே இப்படி ஒரு உணவுப் பொருளை வீணாக்கிட்டுப் போறாங்களேன்னு வருந்தியபடி வீட்டுக்குப் போய் சேர்ந்தாள்.

வாங்கி வந்த எலுமிச்சம் பழங்களை மேசைமீது வைத்துவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

திடீரென மேசை மீதிருந்த எலுமிச்சம் பழத்தில் ஒன்று உருண்டு வந்து தமிழரசியின் முன் நின்றது. “தமிழரசி! தமிழரசி என்ன யோசிக்கிறே? ஊருக்கெல்லாம் நல்லதை எடுத்துச் சொன்ன அந்த அம்மா... தன் வாழ்க்கையிலே சொன்னமாதிரி நடந்துக்காமே மூடநம்பிக்கையிலே மூழ்கிட்டாங்-களேன்னு பாக்குறியா? இவங்க மட்டுமில்லே; நாட்டில சில பேரு இப்படித்தான் இருக்காங்க.

சொல்றது சுலபம். அதைக் கடைப்பிடிக்கிறது ரொம்ப ரொம்பச் சிரமம். ஊருக்கெல்லாம் சொன்ன நாமே இப்படி தப்பா நடந்துக்கிறோமேன்னு எப்ப அவங்க உணர்ந்து தன்னை மாத்திக்கிறாங்களோ அப்பதான் அவங்களுக்கு ஆறாவது அறிவுன்னு சொல்ற பகுத்தறிவு வேலை செய்யுதுன்னு அர்த்தம். அவங்களை மட்டும் குறை சொல்ல முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலையும் அவங்க வளர்ந்த விதமும் அதுக்குக் காரணம். அதோட பல ஆயிரம் ஆண்டுகளா பரவிக்கிடக்கிற மூடத்தனமும்தான் காரணம்.

எலுமிச்சம்பழமான நான் ஊறுகாயாக எல்லாருக்கும் அறிமுகமாகி இருந்தாலும் மனிதர்களான உங்களுடைய சிறப்பான உணவுப் பொருள்.

எந்த ஒரு பழத்தையும் மருத்துவ கண்ணோட்டத்தோட ஆராய்ந்து பாத்தா குணம் -_ குறைன்னு இரண்டும் இருக்கும். ஆனா எலுமிச்சையான எங்கிட்ட, அதிகப்படியான மருத்துவ குணம் அவ்வளவும் அடங்கியிருக்கு. அதனாலே என்னை மருத்துவ மன்னன்னு புகழறாங்க.

ஒவ்வொரு நாளும் காலையிலே எழுந்த உடனே என்னோட சாற்றை வெந்நீர்லே கலந்து சாப்பிட்டா... உடம்பை ஆரோக்கியமா வச்சுக்குவேன். ஜீரண மண்டலத்தை சிக்கலில்லாமல் சீரா வச்சுக்குவேன். இதயத்தை பாதுகாப்பேன். எங்கிட்ட உள்ள உயர்தரமான பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆற்றல் உள்ள என்னை... பேய் எதிர்ப்பு சக்தியா பயன்படுத்துற பகுத்தறிவில்லாத மனிதர்களைப் பாத்தா... சிரிப்புதான் வருது.

மஞ்சள் காமாலை, கண்நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் இதையெல்லாம் குணப்படுத்தும் தன்மை கொண்ட என்னை வீணாக்குறதை நினைச்சா வேதனையா இருக்கு.

சாறு பிழிந்த என் தோலை தூக்கிப் போடாமல் கை, கால் விரல் நகங்களிலே நல்லா தேய்ச்சா... நகங்களிலே படிஞ்சிருக்கிற அழுக்கு வெளியேறி நகம் பளிச்சின்னு மாறும்.

ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடம்பிலே ஏற்படுற காயங்களைக் குணப்படுத்துற என்னை நசுக்கி காயப்படுத்தி தூக்கி எறியும் போதும்... பலனளிக்கக் கூடிய, நல்ல உணவை வீணாக்கிட்டு வாய்கிழிய பேசுறவங்களை பார்க்கும்போதும் அய்யோ... இந்த மண்ணு இவங்களையும் தாங்கிக்கிட்டு நிக்குதேன்னு கோபம் வருது.

ஆனா, தன் இன நலனுக்காகப் போராடி, வாதாடி வாங்கித் தந்த உரிமைகளைப் பயன்படுத்தி முன்னுக்கு வந்துட்டு அவங்களையே குறை சொல்ற மனுசங்கதானே... அப்படிதான் இருப்பாங்க.

பாப்பா நீயாவது அப்படி இல்லாமல் மனிதனின் உடல் நலத்துக்கு முழுமையா பயன்தரக்கூடிய என்னை மூடத்தனத்துக்குப் பயன்படுத்தாமல் இருப்பியா... சொல்லு” எனக் கவலையோடு கேட்டது எலுமிச்சை.

இத்தனை நன்மைகளைத் தரக்கூடிய என்னை மதிக்காமல் போனாலும் போகட்டும். ஆனா, மிதிச்சி பாழாக்காமலாவது இருக்கலாம். உம்... பிஞ்சுக் குழந்தைகளான நீங்களாவது இந்த மாதிரி மூடநம்பிக்கையில மூழ்காம எதையும் சிந்திச்சுப் பார்த்து செயல்படணும்கிறதுதான் என்னோட எச்சரிக்கை.

திருஷ்டிக்கு, மந்திரிக்க, சூனியம் வைக்கன்னு  என்னைப் பயன்படுத்தாம... உடல்நலத்துக்காக உண்மையா பயன்படுத்துனாதான் எனக்கும் மகிழ்ச்சியா இருக்கும். அது நடக்குமா?” என்று ஏக்கத்தோடு கேட்டது எலுமிச்சை.

“நிச்சயம் நடக்கும். என்னைப்போல உள்ள குழந்தைகள் கண்டிப்பா பகுத்தறிவோட செயல்படுவோம்!” என உறுதி கூறினாள் தமிழரசி.

சமையல் அறையிலிருந்து வெளியே வந்த அம்மா, “தமிழரசி என்ன நீ வாங்கிட்டு வந்த எலுமிச்சம் பழத்தையே பாத்துக்கிட்டிருக்கே’’ என்றார்.

அப்போதுதான் கற்பனையில் இருந்த தமிழரசி சுயநினைவுக்கு வந்தாள்.

தான் நேரில் பார்த்ததையும் கற்பனையில் கண்டதையும் அம்மாவிடம் சொன்னாள் தமிழரசி.

அம்மா சிரித்தபடி... “சொல்றதும், சொன்னபடி நடந்துக்கிறதும் சிறந்த மனிதர்களின் அடையாளம்” என்றார். தமிழரசி சிறந்த மனிதனாக வாழ்வதுதான் சிறப்பு என முடிவெடுத்தாள்.

பிஞ்சுகளே நீங்க-?

Share