Home 2017 பிப்ரவரி எவரெஸ்ட் உயரம் குறைகிறதா?
சனி, 28 மே 2022
எவரெஸ்ட் உயரம் குறைகிறதா?
Print E-mail

பொது அறிவுக் கேள்விகளில் எவர் எப்போது கேட்டாலும் சட்டென்று பதில் சொல்லக்கூடிய அளவு எளிமையானது -_ உலகின் உயர்ந்த சிகரம் எது என்ற கேள்விதான். எவரெஸ்ட் சிகரத்தின் பெருமை இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் தெரியும். எவரெஸ்ட் நேபாளத்தில் அமைந்திருந்தாலும் இந்தியாவில் விரிந்து பரந்திருக்கும் இமயத்தின் சிறப்போடு அதையும் இந்தியா இலவச இணைப்பாக பெற்றே வருகிறது.

நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைக்கோட்டில் அமைந்திருக்கிறது எவரெஸ்ட். 1865?ஆம் ஆண்டு இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த ஆன்ட்ரூ வா அவர்கள், தனக்கு முன்பு அப்பொறுப்பில் இருந்த சர் ஜார்ஜ் எவரெஸ்டை சிறப்பிக்கும் வகையில் சிகரம் 15 என்று அதற்கு முன்பு குறிப்படப்பட்டுவந்ததை மவுண்ட் எவரெஸ்ட் என்று குறிப்பிட முன்மொழிந்தார். அதன் பின் அதை இங்கிலாந்தின் ராயல் ஜியாகிரபிக்கல் சொசைட்டி ஏற்றுக் கொண்டது. நாமும் உலகமும் அதை எவரெஸ்ட் என்று அழைத்தாலும், சீனாவில் சோலுங்மா என்றும், நேபாளில் சாகர்மாதா என்றும் அழைக்கிறார்கள்.

2012 என்ற ஆங்கிலப் படத்தின் கடைசிக் காட்சியில் உலகின் டெக்டானிக் தட்டுகள் நகர்ந்து இடம்மாறி பெரும் ஊழி ஏற்பட்டு, எவரெஸ்ட் உள்பட இமயம் கடலால் சூழப்படும். தென்னாப்பிரிக்கப் பீடபூமியில் உள்ள ட்ராகன்ஸ்பெர்க் மலை தான் உயர்ந்த மலையாக இருக்கும் என்று காட்சி அமைத்திருப்பார்கள். கதை தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இருந்தாலும், அது எவரெஸ்ட் மீதான பெருமையின் புகைச்சல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இதுவரை எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் பலமுறை பலராலும் அளக்கப்பட்டிருக்கிறது. முதல்முறையாக 1856?ஆம் ஆண்டு இந்திய அளவைத்துறை மேற்கொண்ட நிக்ஷீமீணீt Great Trigonometrical Survey of India இதன் உயரம் 8840 மீட்டர் (29002 அடி) என்று சொன்னது.

அதன் பிறகு 1955ஆம் ஆண்டு இந்தியா 8848 மீ என்று நிறுவியது. அதனை சீனாவும் நேபாளமும் ஏற்றுக் கொண்டிருந்தன. எனினும் 2005 முதல் 2010 வரை இதன் உயரம் தொடர்பான சர்ச்சை சீன, நேபாள நாடுகள் இடையில் இருந்தன. பின்னர் 2010?ல் இரு நாடுகளும் ஒரு முடிவுக்கு வந்து, சீனா சொன்னபடி எவரெஸ்ட் சிகரத்தின் பாறைமுனை உயரம் 8844 மீட்டர் என்பதையும், நேபாளம் சொன்னபடி அதன் பனிமுனையின் உயரம் 8848 மீட்டர் என்பதையும் ஏற்றுக் கொண்டன.

இருந்தாலும் உலகம் வெப்பமயமாதலின் காரணமாக பனி உருகி, அதன் உயரம் குறைகிறதா என தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், முன்பு நீர்ப்பகுதியாக (கடலாகவோ அல்லது நதியாகவோ) இருந்தது தான் டெக்டானிக் தட்டுகளின் நகர்வில் மலையாக உயர்ந்து நிற்கிறது என்ற கருதுகோளின் அடிப்படையில், அதில் மாற்றம் நிகழ்கிறதா என்பதையும் ஆய்வு செய்துகொண்டே இருக்கிறார்கள்.

ஆய்வாளர்களின் சந்தேகத்தினை அடுத்து எவரெஸ்ட் மலையின் உயரத்தினை இந்திய சர்வே அமைப்பு மீண்டும் அளவீடு செய்கிறது. அய்தராபாத் நகரில் நடந்த ‘ஜியோ ஸ்பேசியல்’ உலக அமைப்புக்கான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசிய இந்திய சர்வே அமைப்பின் தலைவர் சுவர்ண சுப்பாராவ் கூறும்பொழுது, “எவரெஸ்ட் மலைக்கு நாங்கள் குழு ஒன்றினை அனுப்புகிறோம். கடந்த 1856ஆம் ஆண்டில் எவரெஸ்டின் உயரம் அறிவிக்கப்பட்டது. பலரும் அதனை அளவீடு செய்துள்ளனர். ஆனால் இந்திய சர்வே அமைப்பு அளித்துள்ள உயரமே இன்றளவும் சரியான உயரம் என எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது 29 ஆயிரத்து 28 அடியாக உள்ளது. இந்நிலையில், நாங்கள் மீண்டும் அளவீடு செய்கிறோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “நேபாளத்தில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 2 வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர், அறிவியல் ஆய்வாளர்களுக்கு மலை சுருங்கி வருகிறது என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆய்வு செய்வதற்கு அதுவும் ஒரு காரணம்.
அறிவியல் ஆய்வுகள், அடுக்குகளின் இயக்கம் ஆகியவற்றை அறிய உதவிடும் என்பது இரண்டாவது காரணம். இந்தக் குழுவிற்கான அனைத்துத் தேவையான ஒப்புதல்களும் கிடைத்து விட்டன. இரு மாதங்களில் (ஆய்வுக் குழு) அனுப்பிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இப்படியாக, மீண்டும் அளவைக்கு உள்ளாகிறது எவரெஸ்ட். சரி, இவர்கள் பாட்டுக்கு அளந்து உயரம் குறைந்துவிட்டது என்று சொன்னால், அடுத்து வேறெதாவது நாட்டில் ஒரு மலைச் சிகரம் உயர்ந்தது என்ற பெயர் வாங்கிவிடுமோ என்ற பயம் உங்கள் கண்களில் தெரிவது எனக்கும் தெரிகிறது. அதே பயம் எனக்கும் இருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, அடுத்த இடத்திலுள்ள கே2 சிகரம் இதை விட 200 மீட்டர் உயரம் குறைவானதாக இருப்பதால், 2012 படத்தில் சொல்வதைப் போல பெரும் ஊழி நடந்தால் ஒழிய எவரெஸ்ட் பெருமைக்கு எந்தக் குறைச்சலும் இல்லை என்பதையும் இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போ நிம்மதியா பிஞ்சுகளே!

Share