Home 2017 பிப்ரவரி வானுக்கு வந்த மழை!
சனி, 28 மே 2022
வானுக்கு வந்த மழை!
Print E-mail

வானுக்கு வந்த மழை!

உமையவன்

ரொம்ப நாளா காட்ல மழையே இல்ல! தண்ணீர் இல்லாம செடி, மரமெல்லாம் வாடிப் போச்சு. விலங்குகளும் தண்ணீருக்கு பெரும் சிரமப்பட்டன. இந்த வருசம் எப்படியும் மழை பெய்யும்னு அவைகள் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தன.

காட்டு உயிர்களின் நம்பிக்கை வீண் போகலை, ஆகாயத்துக்கும் _ பூமிக்கும்னு மழை இடைவெளி இல்லாம கொட்டித் தீர்த்தது. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், செடி, கொடிகளுக்கும் அளவில்லாத மகிழ்ச்சி.

யானை, சிங்கம், புலி, கரடி, மான்னு காட்டுல இருந்த எல்லா விலங்குகளும் மழைல ஆட்டம் போட தொடங்கின. வராது வந்த விருந்தாளி போல மழையைக் கொண்டாடி வரவேற்றன. காட்டுல தேங்கியிருந்த மழைத் தண்ணீரை ஒவ்வொரு விலங்கின் மீதும் தெளித்து சேட்டை பண்ணியது குட்டியானை.

கரடிக்குட்டியைச் சொல்லவே தேவையில்லை. மழைக்குப் பயந்துட்டு குகையில் ஒளிந்து ஒளிந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த புலிக்குட்டியை மெதுவா பின்னாடி வந்து மழைல தள்ளிவிட்டது கரடிக்குட்டி.

இன்னொரு பக்கம் மயில், பருந்து, கழுகு, கரிக்குருவி உள்ளிட்ட பறவைகள் எல்லாம் தேக்கு மரத்து இலையில் கப்பல் செய்து மழைத் தண்ணீரில் விட்டன.

பல விலங்குகள் மழையில குளியல் போட்டு, தங்களைச் சுத்தம் செய்துகொண்டன.

கட்டெறும்புகளும், வண்டுகளும் பறவைகள் விட்ட கப்பலில் ஏறி காட்டை வலம் வந்தன.

குரங்குகளின் சேட்டைக்கு அளவே இல்லை. மரத்திற்கு மரம் தாவி உற்சாக ஆட்டம் போட்டன.

இந்த மழையினால காடே விழாக்கோலம் ஆகிவிட்டது. பல மணிநேரம் கொட்டித் தீர்த்த மழை ஓய்வெடுக்கச் சென்றதைப் போல மெதுவாக நிற்கத் தொடங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் மழை முற்றிலுமாக ஓய்ந்துவிட்டது.

விலங்குகள் எல்லாம் அதனதன் இடத்திற்குச் சென்றுவிட்டன. மைனா மட்டும் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த யோசனையில் இருந்தது. இதைப் பார்த்து அங்கு வந்த மயில், மரத்தின் ஒரு கிளையை ஆட்டி மீண்டும் ஒரு சின்ன மழையை வரவழைத்து மைனாவின் யோசனையைக் கலைத்தது.

“என்ன மைனா நீண்ட யோசனை?’’ என ஆரம்பித்தது மயில்.

“எனக்கொரு சந்தேகம், நானும் நிறைய பேருகிட்ட கேட்டுட்டேன்; ஆனா, யாரும் அதைத் தீர்த்து வைக்கல’’ என்றது மைனா.
“அப்படி என்ன உனக்கு சந்தேகம் சொல்லு, தெரிஞ்சா நான் தீர்த்து வைக்கிறேன்’’ என முற்பட்டது மயில்.

“அப்ப, உன்னால என் சந்தேகத்தைப் போக்க முடியுமா?’’ என உற்சாகம் பொங்கக் கேட்டது மைனா.

“மொதல்ல, உன் சந்தேகத்தைச் சொல்லு, அப்புறம் பார்க்கலாம்’’ என்றது மயில்.

“இந்த மழை எப்படி பெய்யுது... அது எங்கிருந்து வருது...’’ எனக் கேள்வி மழையைத் தொடங்கியது மைனா.

“இவ்வளவுதானா! மழை, மேல வானத்தில் இருந்து வருது’’ எனப் பெருமிதத்தோட விடைகூறி முடித்தது மயில்.

“அது எங்களுக்கும் தெரியும்! வானத்திற்கு மழை எப்படி போச்சு? என்கிறதுதான் என் சந்தேகம். இதுக்கு இதுவரைக்கும் யாருமே பதில் சொல்லவே இல்லை’’ என சோக பாணியில் சொல்லி முடித்தது மைனா.

“அட! இவ்வளவுதான் உன் சந்தேகமா? என்னோடு வா, உனக்கு செய்முறையின்படி சொல்றேன்’’ என தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது மயில்.

தன் வீட்டில் இருந்த அடுப்பில் தீ மூட்டி ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி அதன்மீது வைத்தது. அந்தப் பாத்திரத்தின் மீது இன்னொரு தட்டை வைத்து மூடியது.

மைனாவிற்கு ஒன்றுமே புரியல.. நாம மழை எப்படி வானத்துக்குப் போச்சுன்னு கேட்டா, மயில் என்னென்னமோ பண்ணுதே’’ என குழப்பத்தோடு நடப்பதை கவனித்தது மைனா.

கொஞ்ச நேரத்தில் அந்தப் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் சூடாகத் தொடங்கியது. தண்ணீர் நன்கு சூடானதும் தன் விளக்கத்தைத் தொடர்ந்தது மயில்.

“மழை எப்படி வானத்துக்கு போச்சுன்னு கேட்டியே, இப்படித்தான் போச்சு’’ என அந்தப் பாத்திரத்தின் மீதிருந்த தட்டை மெல்ல எடுத்தது மயில்.

ஏற்கனவே பாதி குழப்பத்தில் இருந்த மைனா இப்பொழுது முழு குழப்பத்தில் மூழ்கிப் போனது. அதனுடைய சந்தேகம் மேலும் மேலும் பெருகிக்கொண்டே போனது.

மைனாவின் முகத்தைப் பார்த்தவுடன் அதன் முழு மனநிலையையும் உணர்ந்து கொண்டது மயில்.

“நான் சொல்லறத நல்லா கேட்டுக்கோ’’ என ஆரம்பித்தது மயில்.

“இந்தத் தட்டு இருக்கே இதுதான் வானம்னு நெனைச்சுக்கோ. இந்த நெருப்புதான் சூரியன். சூரியன் என்கிற நெருப்பால் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் சூடாக, அது நீராவியா மாறி தட்டு என்கிற வானத்துல போயி சேருது’’ என்றது மயில். அதைக் கேட்டதும் மைனாவின் முகத்தில் பாதித் தெளிவு பிறந்தது.

“இது போலத்தான் பூமியில இருக்கிற ஆறு, குளம், குட்டை, கடல்ல இருக்குற தண்ணீர் எல்லாம் சூரிய வெப்பத்துல நீராவியா மாறி வானத்தில் போய் சேருது, கொஞ்சநாள் கழித்து அது மறுபடியம் மழையா மீண்டும் பூமிக்கு வருது. இப்படித்தான் மழை வானத்திற்கு வருது’’ எனக் கூறி முடித்தது மயில்.

இத்தனை நாட்கள் மழை எப்படி பெய்கிறது? மழை எப்படி வானத்திற்குப் போகுது என குழம்பிக் கிடந்த மைனாவிற்கு, மயிலின் விளக்கமும், பதிலும் அதன் சந்தேகத்தைப் போக்கியதோடு பெரும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. இயற்கையின் சக்தியைக் கண்டு பெருமிதமும் கொண்டது மைனா.

பலத்த இடி சத்தத்தோடு வானில் மீண்டும் மழை வருவது போல் இருந்தது. தன் சந்தேகத்தைப் போக்கிய மயிலுக்கு நன்றி கூறிவிட்டு, தன் கூட்டை நோக்கி பறந்தது மைனா.

அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் மழை பெய்யும்போது ஒவ்வொரு வீடாகச் சென்று அதன் காரணத்தை விளக்கியது மைனா.

என்ன குழந்தைகளா! மழை நாள்கள்ல உங்க வீட்டுக்கும் மைனா வந்திருக்குமே! இன்னும் வரலையா? இனிவரும் மழை நாட்கள்ல உங்க வீட்டிற்கும் மைனா வரக்கூடும். வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க.

Share