Home 2017 பிப்ரவரி யார் என்று தெரிகிறதா? ஒரிஜினல் ‘தங்கல்’ நாயகி - சரா
புதன், 20 ஜனவரி 2021
யார் என்று தெரிகிறதா? ஒரிஜினல் ‘தங்கல்’ நாயகி - சரா
Print E-mail

இரண்டு மல்யுத்த வீராங்கனைகளின் தந்தையாக இந்தி நடிகர் அமீர் கான் நடித்த ‘தங்கல்’ என்ற இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட படத்தைப் பார்த்திருப்பீர்கள்.

இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் உண்மையான வரலாற்றைக் கூறும் இந்தப் படத்தின் உண்மை நாயகியான கீதாபோகத் பற்றி நாம் தெரிந்து கொள்ளாதவைகள்:

உசிலம்பட்டி, தருமபுரி என்ற உடனேயே சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் சிசுக்கொலைதான் பலரது கண்முன் வந்து நிற்கும். இந்த இரண்டு ஊர்களிலும் உள்ள சிலர் பெண் குழந்தை என்றாலே சுமையாக நினைத்ததால் இந்த ஊர்களுக்கு அவப்பெயர் வந்தது, தற்போது அது குறைந்துவிட்டது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது, ஆனால் வட இந்தியாவில் அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெண் சிசுக்கொலைகள் இன்றளவும் தொடர்கின்றன.

முக்கியமாக அரியானா மாநிலம் உலக அளவில் பெண் சிசுக்கொலையில் அவப்பெயர் வாங்கிய மாநிலம். இந்த மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் என்ற அளவில் அங்கு ஆண் பெண்களுக்கிடையேயான இடைவெளி அதிகம் உள்ளது. (தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 985 என்ற அளவில் உள்ளது)   அரியானா மாநிலத்தில் பெண்கள் கல்வி கற்பதற்குத் தடை, பொது இடத்தில் தனியாக செல்வதற்குத் தடை, நவநாகரீக ஆடைகள் அணிவதற்குத் தடை, தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்ப்பதற்குத் தடை, மொபைல் பயன்படுத்தத் தடை எனப் பல தடைகள் இன்றும் உள்ளன.

இந்தக் கொடிய சமூகத்தில்தான் கீதா போகத் பிறந்தாள். இவரது தந்தை மகாவீர் சிங் போகத். தனது மகள்களுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை, ஊராரின் பல்வேறு எதிர்ப்பையும் மீறி தனது இரு மகள்களுக்கு மல்யுத்தம் கற்றுக் கொடுத்தார். கீதாபோகத்திற்கு ஒரு பழக்கம் உண்டு. எந்த ஒரு செயலையும் உணர்வுபூர்வமாகச் செய்து முடித்துவிடுவார். அது படிப்பாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி, அதிலும் யாராவது சவால் விட்டுவிட்டால் அந்தச் சவாலில் வென்றே தீருவது என்ற ஒரு தீவிர உணர்வு அவருக்கு உண்டு.

ஒருமுறை அவரது உறவினர் வீட்டில் நடந்த விழா ஒன்றிற்குச் சென்றபோது, ‘நீங்கள் ஆண்களாக பிறந்திருந்தால் இந்நேரம் உங்க அப்பாவைப் போன்று சிறந்த மல்யுத்த வீரனாக வந்து அப்பா பெயரைக் காப்பாற்றி இருப்பீர்கள்’ என்று உறவினர்கள் கூற, அதற்குக் கீதா உடனடியாக, “ஏன் பெண்களாக நாங்கள் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு வென்று அப்பா பெயரைக் காப்பாற்ற மாட்டோமா” என்று பதில் கூறினார். அதற்கு அந்த உறவினர், “ரொட்டி சுடும் கைக்கு மல்யுத்தம் எல்லாம் வராது; போய் சாப்பிட ரொட்டி கொண்டுவா” என்று கிண்டலடித்தார்.

அதன் பிறகு அவர் ஒரு வீரராக வரவேண்டும் என்று உறுதிபூண்டார். இவரது உறுதியைக் கண்ட தந்தை மகாவீர் சிங் ஆண் மல்யுத்த வீரனுக்கு நிகரான பயிற்சியை வழங்கினார். இந்தப் பயிற்சியின் பலனாக உலக அளவில் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனைகளுள் முதன்மையானவராகத் திகழ்ந்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் 2009-ஆம் ஆண்டு நடந்த முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்றார். 2010-ஆம் ஆண்டு தலைநகர் டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் உலகின் தலைசிறந்த வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் எமிலி பென்ஸ்டாடை தோற்கடித்து தங்கம் வென்றார்.

2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி தேர்வில் குறைந்த எண்ணிக்கையில்  புள்ளிகள் கிடைத்ததால் இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அனைத்துப் போட்டிகளில் வென்றும் இவரைவிட கனடிய வீராங்கனை அதிகப் புள்ளிகளை வென்ற காரணத்தால் அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

2012-ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை  சாம்பியன் போட்டிகள் உக்ரைனில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

2012-ஆம் ஆண்டு நடந்த ஆசிய மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வாங்கினார்.

2013-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

2015-ஆம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன் போட்டிகளில் பதக்கம் வென்றார்.

உள்ளூர், மாநிலம் மற்றும் தேசிய அளவில் 143 பதக்கங்களை வென்ற இவர், பன்னாட்டளவில் 8 பதக்கங்களை வென்றுள்ளார்.

Share