Home 2017 பிப்ரவரி உலகம் சுற்றி - 6
புதன், 20 ஜனவரி 2021
உலகம் சுற்றி - 6
Print E-mail

அனைவரும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டை இனிமையாகக் கொண்டாடினீர்களா?

டிஸ்னி உலகத்தின் அய்ந்து பிரிவுகளில் முதல் பிரிவின் கடைசி இடத்தைப் பார்க்கப் போகின்றோம். அது தான் விடுதலை சதுக்கம்!

1776இல் இங்கிலாந்திடம் போரிட்டு அமெரிக்கா விடுதலை பெற்றது. அப்போது எப்படி இருந்ததோ  அப்படியே கட்டங்கள், அப்போதிருந்த 13 மாநிலங்களின் கொடிகள் என்று 13 மாநிலங்களையும் நமக்குக் காண்பிக்கின்றனர். விடுதலை மணி என்ற ஒரு பெரிய மணி அங்கே வைத்துள்ளார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலான ஒருபெரிய மரத்தை வேறொரு இடத்திலிருந்து பெயர்த்து இங்கு நட்டு "விடுதலை மரம்” என்று பெயரிட்டு, அதனுடன் ஒரு குட்டி ஓக் மரமும் அங்கேயே வைத்துள்ளனர்.

இங்கு மிகவும் விரும்பிப் பார்க்கப்படுவது "குடியரசுத் தலைவர்கள் அரங்கம்." ஜார்ஜ் வாசிங்டனிலிருந்து ஒபாமா வரை அனைத்துத் தலைவர்களும் அங்கேயிருப்பார்கள். முதலில் நாம் அமெரிக்கத் தலைநகரில் உள்ளது போன்ற ஒரு மண்டபத்தில் நுழைவோம்.

அங்கே பல தலைவர்கள் பயன்படுத்திய பொருள்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அதன் பின் உள்ளே நுழைந்ததும் பெரிய அழகான அரங்கம் இருக்கும். அதில் அமர்ந்ததும் அமெரிக்க விடுதலைப் போராட்டம்  பற்றிய திரைப்படம் காட்டுவர். பின்னர் திரை விலகும். அங்கே மேடையிலே அனைத்துத் தலைவர்களும் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள்.

முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன், முக்கிய குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன், ஒபாமா (நான் சென்றது ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்) மூவரும் எழுந்து நின்று கைகளை அசைத்துப் பேசுவார்கள். அப்படியே அவர்களே நேரில் பேசுவது போல இருக்கும். அனைவரும் பொம்மைகள்! பேசும், நடிக்கும் பொம்மைகள்! ஆனால் உணர்ச்சி பொங்கும் படி இருக்கும். மக்கள் செலுத்தும் மரியாதையை முகத்தில் காணலாம்.

அடுத்து மக்கள் விரும்பிப் பார்ப்பது "பேய்களின் மாளிகை". அமெரிக்கா 1660களில் மூட நம்பிக்கையின் உறைவிடமாக இருந்தது.

பேய், பிசாசுகள் பற்றி நிறைய கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் நீண்ட நாட்கள் தொடர்ந்து இருந்தன. அந்த மாதிரி ஒரு பழைய மாளிகை உள்ளே இருட்டில் செல்வோம். ஒரு பலகை வண்டியில் அமர்ந்த படி, அந்த சத்தமும், காட்சிகளும் கோர உருவங்களும் நேரடியாக முகத்திற்கருகே தெரியும். குழந்தைகளின் சத்தம் காதைப் பிளக்கும். பெரியவர்களுக்குச் சிரிப்பைத் தரும்!

அங்கே ஒரு விடுதலைக் கப்பல் ஆற்றில் சுற்றிவரும். முன்பு பார்த்த இடங்கள் தாம் அவை. இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.

அடுத்து அங்கே மப்பட் (Muppet) நாடகம் அமெரிக்காவின் ஆரம்பத்தின் கதையைச் சொல்லும். முக்கிய  நடிகர்கள் கெர்மிட் தவளை, மிஸ் பன்றி போன்றவை. அமெரிக்க வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை குழந்தைகள் விரும்பும் படி அங்குள்ளவர்களே நடித்துக் காட்டுவார்கள்.

வெளியே வரும் போது அமெரிக்கத் தலைவர் ஜெபர்சன் அப்போதிருந்த உடைகளுடன் நின்று கொண்டு  நடந்த நிகழ்வுகளைச் சொல்வார். கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது பெருமையாக இருக்கும்.

முழுமையாக ஒரு பகுதியைப் பார்த்து விட்டோம், இன்னும் நான்கு பகுதிகள் போக வேண்டும். ம்ம்ம்... போவோமா?

Share