Home 2017 பிப்ரவரி நலமான வாழ்விற்கு...
சனி, 28 மே 2022
நலமான வாழ்விற்கு...
Print E-mail

நலமான வாழ்விற்கு...

-சிகரம்

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் 15 வயது வரை குழந்தையாகவே, எண்ணி பெற்றோர் பிள்ளைகளை வளர்த்தனர். பிள்ளைகளுக்கு எது தேவை, எது கூடாது என்பதை அறிந்து கொடுத்தனர்; விலக்கினர்.

பிள்ளைகளின் உணவை வீடுகளிலேயே செய்து கொடுத்தனர். ஒவ்வொரு வீட்டிலும் உடல்நலம் காக்கும் உணவுகள் பற்றிய விழிப்பு இருந்தது. அதனால், உடல்நலம், வளம்; உள்ள நலம், வளம் காக்கப்பட்டன. எனவே, உடல் நலக்கேடோ மருத்துவமனைக்குச் செல்லும் அவசியமோ அப்போது பெருமளவிற்கு இல்லை.

ஆனால், தற்போது, இரண்டு வயதிலே பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்து வாழும் நிலை உள்ளதால், பிள்ளைகளின் உடல்நலம், வளம், உள்ள நலம், வளம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாடு, விழிப்பு, அறநெறி, நீதிநெறி போன்றவைப் பற்றிய செய்திகளை, விவரங்களை அறிய, பின்பற்ற வாய்ப்பற்ற நிலையில் பிஞ்சுகள் உள்ளனர். எனவே, பிஞ்சுகளுக்குத் தேவையான சில அடிப்படைச் செய்திகளை இங்குக் குறிப்பிட்டுள்ளோம். பிஞ்சுகள் அவற்றை கவனத்துடன் படித்து உள்ளத்தில் கொண்டு, அதன்படி வாழவேண்டும்.

பிஞ்சுப் பருவம் என்பது வாழ்வின் அடித்தளம் போன்றது. கட்டடத்திற்கு அடிப்படை வலுவாக இருக்க வேண்டியது எப்படிக் கட்டாயமோ அப்படி, பிஞ்சுப் பருவத்தில் உடலும் உள்ளமும் வலுவுடனும் வளமுடனும் இருக்க வேண்டியது கட்டாயம்; அப்போதுதான் வாழ்நாள் முழுவதும் நலத்துடனும் வளத்துடனும் வாழ முடியும்.

உடல், உள்ளம் இவற்றின் நலம், வளம் இரண்டும் உணவால், அறிவால் தீர்மானிக்கப்-படுகிறது. அந்த உணவும், அறிவும் நலம் தருவதாயும், கேடற்றதாயும் இருக்க வேண்டும். இல்லையேல் உடலும் கெடும், உள்ளமும் கெடும்.

உடலைக் கெடுக்க நோய்க்கிருமிகள் காரணமாவது போல, உள்ளத்தைக் கெடுக்கும் காட்சிகளும், கருத்துகளும் உள்ளன. இந்த இருவகைக் கேடுகளில் பல நாமே தேடிக் கொள்பவை, சில நாடி வந்து நம்மைச் சேர்பவை.

நோய் எதிர்ப்பாற்றல்: நாமே உருவாக்கிக் கொள்ளும் நோயாக இருப்பினும், தானே வரும் நோயாக இருப்பினும் அவற்றை எதிர்கொள்ளும், தடுக்கும் எதிர்ப்பாற்றல் நம் உடலுக்குத் தேவை.

வீட்டிற்கும், நாட்டிற்கும் காவலர்கள், படை வீரர்கள் இருந்து காப்பது போல, நம் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய்க் கிருமிகளை அழித்து நோய் வராமல் தடுக்கும் வீரர்களாகச் செயல்படுகின்றன.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மைக்ரோ லிட்டர் இரத்தத்தில் 3,500 _ 16,000 அளவிலும், பெரியவர்களுக்கு 3,500 _11,000 என்ற  அளவிலும் வெள்ளை அணுக்கள் இருக்கும். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் நோய் எதிர்ப்பாற்றலை நம் உடல் இழக்கும். அதனால், சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் நம்மைப் பற்றிப் பாதிக்கும்.

இந்த நோய் எதிர்ப்பாற்றலை உணவு மூலமும், உடற்பயிற்சி மூலமும் நாம் பெற முடியும். அதன்வழி நோயற்ற நலமான, வளமான வாழ்வை வாழ முடியும்.

எவற்றையெல்லாம் ஏற்க வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

(அடுத்த இதழில் பார்போம்)

பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றல் தாய்ப்பால் வழி கிடைத்துவிடுகிறது. எனவே, ஓராண்டுக்காவது தாய்ப்பால் பருக வேண்டியது குழந்தைகளுக்குக் கட்டாயத் தேவை.

நோய் எதிர்க்கும் வைட்டமின்கள்:

வைட்டமின் ‘சி’: நெல்லிக்காய், கொய்யாப்பழம் இவற்றில் இது அதிகம். சளித்தொல்லை வராமலிருக்க இந்த வைட்டமின் தேவை.
வைட்டமின் ‘ஏ’, ‘டி’: வைட்டமின் ‘ஏ’ கண் நோய் வராமல் காக்கும். வைட்டமின் ‘டி’ எலும்பு நோய் வராமல் காக்கும்.

வைட்டமின் ‘ஏ’ _ அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, சுண்டைக்காய், கேரட், தக்காளி, பொன்னாங்கண்ணிக் கீரை, நெய், பப்பாளிப் பழம் இவற்றில் அதிகம் உள்ளது. வைட்டமின் ‘டி’ வெய்யில் மூலம் நமக்குக் கிடைக்கிறது. எனவே, மாலை வெய்யிலில் பிஞ்சுகள் கட்டாயம் விளையாட வேண்டும்.

வைட்டமின் ‘டி’: இரத்தத்தைச் சுத்தமாக்கி, இரத்த சோகையை இது தடுக்கிறது.

வைட்டமின் ‘இ’: இது புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

துத்தநாகம்: வைரஸ் கிருமிகள் நம்மைப் பாதிக்காமல் இருக்க இது உதவுகிறது.

கால்சியம்: எலும்பு உறுதிக்கு பல் நலத்திற்குத் தேவையானது. எலுமிச்சை, கேழ்வரகு.

மக்கினீசியம்: சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் நலத்திற்கு இது அவசியம். கீரைகள், கோதுமை, கொட்டைகள் போன்றவற்றில் இது அதிகம் உள்ளது. சிறுநீரகம் சிறப்பாகச் செயல்பட வெள்ளரிப் பிஞ்சு, வாழைத்தண்டு, முள்ளங்கி கட்டாயம் சாப்பிட வேண்டும். மேற்கண்ட அனைத்தும் கீரைகள், பழங்கள், காய்களில் கிடைக்கின்றன. எனவே, இவற்றை நிறைய சாப்பிட வேண்டும்.

தண்ணீர்: நலமான வாழ்விற்கு தினம் 2 முதல் மூன்று லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.  வாழைப்பழம், மாதுளை, சப்போட்டா இவற்றை நாள்தோறும் உண்ண வேண்டும்.

மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், ஏலம் போன்றவற்றில் நோய் தடுக்கும் ஆற்றலும், உடல் நலம் காக்கும் ஆற்றலும் உள்ளன. மஞ்சள் புற்று நோய் வராமல் தடுக்கும். இஞ்சி, பூண்டு உடலில் கொழுப்பு அதிகம் சேராமல் தடுத்து உடல் பருமன் வராமல் செய்யும். மிளகு நோய் எதிர்க்கும். நஞ்சு முறிக்கும். சீரகம் உடலை சீராக வைத்திருக்கும்.
வெந்தியம், ஏலம், கிராம்பு போன்றவை உடல்நலமாக இருக்கத் துணை செய்யும்.

கம்பு, கேழ்வரகு, தினை, எள், கொள்ளு, கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, பாதாம், வெல்லம் போன்றவற்றை தினம் அளவோடு உண்டால் உடல் நலமாகவும் வளமாகவும் இருக்கும். மீன் உணவு உடலுக்கு மிகவும் உகந்தது. குழம்பு மீன் சிறந்தது. வறுத்த மீன் அளவோடு உண்ண வேண்டும்.

உடற்பயிற்சி: படிப்பு, தொலைக்காட்சி, செல்போன் என்று முழுநேரமும் பிஞ்சுகள் மூழ்காமல், இவற்றை அளவோடு, பயனுள்ள முறையில் பயன்படுத்திக்கொண்டு, தினம் மாலை 1 மணிநேரம் நன்றாக விளையாட வேண்டும். விளையாட்டைத் தவிர்த்தால் உடல் நலம் கெட்டு, நோய்கள் தொற்றும்.

தவிர்க்க வேண்டியவை:

பேக்கரியில் விற்கும் உணவுகள்; நூடுல்ஸ், மைதாவில் செய்த உணவுகள், பரோட்டா, ஜங்புட், செயற்கைக் குளிர்பானங்கள், சிப்ஸ், பானிபூரி, அய்ஸ்கிரீம், பீசா, பர்கர், பிராய்லர் கோழி, சீனி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உணவு உடல் நலனுக்கு உண்ணப்படுவது. அது சுவையாக இருக்க வேண்டும். மாறாக, சுவைக்காக கண்டவற்றைச் சாப்பிட்டு, உடற்கேட்டை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அதேபோல், போதைப் பாக்கு, புகை, மது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் உங்கள் நலம் உங்கள் கையில் உணர்ந்து செயல்படுங்கள்.

Share