Home 2017 மார்ச் பேசாதன பேசினால் : 6 மண்புழுவின் மன வருத்தம்
வியாழன், 06 ஆகஸ்ட் 2020
பேசாதன பேசினால் : 6 மண்புழுவின் மன வருத்தம்
Print E-mail


கதை, ஓவியம் : மு.கலைவாணன்

சென்னை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முத்து ஏழாம் வகுப்புப் படிக்கிறான். ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறையில் தன் அம்மாவின் சொந்த ஊரான வயலூர் கிராமத்துக்குச் செல்வது வழக்கம்.

நகரத்தின் பரபரப்பும், போக்குவரத்து வாகனங்களின் இரைச்சலும், இடநெருக்கடியும் இல்லாத வயலூர் கிராமம் முத்துவுக்கு பிடித்தமான இடம்.

கோடை விடுமுறைக்கு வழக்கம்போல வயலூர் வந்து சேர்ந்தான் முத்து. ஒரு நாள்... அந்த ஊர் பிள்ளைகளோடு சேர்ந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அகலமான நிலப்பரப்பு, சுற்றிலும் மரங்கள் தரும் நிழல் என விளையாடுவதற்கு ஏற்றச் சூழல், சென்னையில் தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் இதுபோல் ஓர் இடம் இல்லை என்பதால் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தான்  முத்து.

காலையில் தொடங்கிய விளையாட்டு மதியம் வரை தொடர்ந்தது. கடுமையாக விளையாடியதால் எல்லோருக்குமே பசி வந்துவிட்டது. வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மாலை கூடி விளையாடலாம் என முடிவெடுத்து கலைந்து சென்றனர் பிள்ளைகள்.

முத்து, தான் கொண்டு சென்ற பந்தை தரையில் தட்டியபடியே வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். தட்டி விளையாடியபோது தவறிய பந்து வயலுக்குள் விழுந்துவிட்டது. சேற்றில் விழுந்த பந்தை எடுக்க குனிந்தான் முத்து.

அந்த களிப்பு நிலத்தில் வேகவேகமாக ஊர்ந்து, நகர்ந்து வந்த மண்புழு ஒன்று விழுந்து கிடந்த பந்தின் மேல் ஏற முயற்சி செய்தது.

அதைப் பார்த்த முத்து பந்தை எடுக்காமல் மண்புழு என்னதான் செய்கிறது என்பதை கவனித்தான். மிகுந்த சிரமப்பட்டு மண்புழு அந்தப் பந்தின்மேல் ஏறியது. உடனே பந்தை கையில் எடுத்துக்கொண்டான் முத்து.

சுற்றும் முற்றும் பார்த்தான். கொஞ்ச தூரத்தில் வயலில் ஒருவர் முகத்தை மூடியபடி துணிகட்டிக்கொண்டு பயிருக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். ஓ! அந்த பூச்சி மருந்தின் நெடி தாளாமல்தான் இந்த மண்புழு வேகமாக ஓடிவந்ததோ... என நினைத்தான்.

மண்புழுவின் மகத்துவம் பற்றி தன் அக்கா அன்பரசி முதல்நாள் சொன்னது. நினைவுக்கு வந்தது. முத்துவின் கற்பனையில் பந்தின் மேல் சேற்றுடன் இருந்த மண்புழு பேசத் தொடங்கிவிட்டது.

“இந்த மண்ணிலே 120 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் உயிரினம்தான் மண்புழுவாகிய நான், என்னைப்போல பல வகை இருக்கு! எல்லாமே பொதுவா வளத்தசை உருளைப் புழுக்களின் வகையைச் சேர்ந்ததுதான்.

மண் புழுவான எங்களை உழவனின் நண்பன்னு பெருமையா சொல்லுவாங்க.

ஏன்னா... தாவரக் கழிவுகளை உணவா உட்கொண்டு அதன் மூலமா எங்க உடலிலிருந்து வரக்கூடிய செரிமானக் கழிவால் நாங்க வாழக்கூடிய மண்ணை வளப்படுத்துகிறோம். எங்க வாழ்க்கைச் சுழற்சியால் மண்ணானது மேலும் மிருதுவா மாறுது. அப்படிப்பட்ட மண்ணுலே காற்றோட்டமும், நீரும் அதிகமா தங்கிடும். அந்த இடத்திலெ வளரக்கூடிய தாவரத்தின் வேர்கள் அதிகமான பயனை அடைஞ்சு, செழிப்பா வளர்ந்து பயிரிட்ட உழவனுக்கு லாபம் கொடுக்குது. நிலத்திலே இருக்கக்கூடிய இயற்கைக் கழிவுகளை மட்க வச்சு உரமாக்கி மறுபடி பயிர்கள் கிரகிச்சுக்கிற நிலையை உருவாக்குறதும் நாங்கதான்.

இதனாலே மண்ணுல நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகுது. பயிர்களைத் தாக்கி அழிக்கிற நோய்க் கிருமிகளை அழிச்சு ஒழிச்சு பயிரைக் காப்பாத்துற வேலையையும் நாங்கதான் செய்யிறோம். இயற்பியல் சுற்றையே மாத்தி அமைக்கிறதுனாலே சுற்றுப்புறச் சூழ்நிலை அமைப்பாளர்கள்னுகூட எங்களைச் சொல்லுவாங்க.

ஆனா! இன்னைக்கு அந்த விவசாயி பயிருக்குக் கெடுதல் செய்யிற பூச்சியை விரட்டுறதுக்காக பூச்சி  மருந்துங்கிற பேருல விஷத்தை தெளிச்சுக்கிட்டிருக்காரு. அதனாலே பயிரின் வளர்ச்சிக்கும் மகரந்த சேர்க்கைக்கும் உதவக்கூடிய பூச்சிகளும், வண்டுகளும் செத்துப் போகின்றன. அந்த விஷத்தின் நெடி தாளாமத்தான் பூச்சிகளை தின்னு உழவருக்கு உதவுற தவளை, உழவனின் நண்பன்னு பெருமையாக சொன்ன மண்புழுவான நானெல்லாம் உயிர் பிழைச்சா போதும்னு ஓடிவந்தோம்! சமூக வளர்ச்சிக்கும் நல்ல மாற்றத்துக்கும் தொண்டு செய்யிறவங்களை புரிஞ்சுக்காத சில மனிதர்களைப் போல... உழவனுக்கு உதவியா இருக்குற எங்களை சரியா புரிஞ்சுக்காம விஷத்தைத் தெளிச்சு பயிரையும் கெடுத்து, உயிரையும் மாய்ச்சுக்கிறாங்களேன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு.

என்னை மாதிரி மண்புழுக்களை முறைப்படி வளர்த்து உரம் தயாரிக்கிற தொழிலை பலபேர் சிறப்பா செய்துக்கிட்டிருக்காங்க. ஆடு, மாடு போன்ற கால்நடைகளோட சாணம், வயல்வெளியிலெ உள்ள களை, பண்ணைக் கழிவு, காடுகளில் இருந்து கிடைக்கிற இலை, தழை, சந்தையிலயிருந்து வாங்குற வேண்டாத சொத்தைக் காய்கறி, பழம், இலைக்கழிவுகள், உணவு விடுதிகளில இருந்து கிடைக்கிற வீணான உணவுப் பொருளுங்க இதையெல்லாம் என்னை மாதிரி மண்புழுக்களுக்கு உணவாக் கொடுத்து மண்புழு உரம் தயாரிக்கிறாங்க.

மண்புழு உரத்தில 15% விழுக்காடு தழைச்சத்து 0.5% விழுக்காடு மணிச்சத்து, 0.8% விழுக்காடு சாம்பல் சத்து, 12% விழுக்காடு அங்ககக் கரிமப் பொருள்களெல்லாம் இருக்கு. இந்த உரத்தை ஒரு ஏக்கரில் பயன்படுத்துனா மண்ணோட உயிர்த்தன்மை ஒவ்வோர் ஆண்டும் கூடிக்கிட்டே போகும். உரத்தில உள்ள எல்லா சத்தும் பயிர்களுக்கு உடனே கிடைக்கும்.

இதன்மூலமா பயிரோட வேர் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறன் தூண்டப்பட்டு மகசூல் 20லயிருந்து 30 விழுக்காடு அதிகமாகும்.

இதையெல்லாம் தெரிஞ்சுக்காம... இருக்கிறவங்களை நினைச்சாதான் மன வருத்தமா இருக்கு!” என்றது மண்புழு.

“என்னப்பா! முத்து... பந்தை முறைச்சுப் பாத்துக்கிட்டே நிக்கிற” என்று கேட்டுக்கொண்டே வந்தார் மாமா புகழேந்தி.

பந்தின் மீது இருக்கும் மண்புழுவைக் காட்டி, “அதோ அந்த விவசாயி தெளிக்கிற பூச்சிக் கொல்லியின் நெடி தாங்காம கீழே விழுந்த என் பந்து மேலே ஏறிக்கிட்டு பரிதாபமா பேசுது இந்த மண்புழு” என்றான் முத்து. “அது எப்படி பேசும்?” என கேள்வி எழுப்பினார் மாமா. அன்பரசி அக்கா முதல்நாள் சொன்னதையும், தன் கற்பனையில் நினைத்ததையும் மாமாவிடம் சொன்னான் முத்து.

முத்துவின் கற்பனையைப் பாராட்டிய மாமா புகழேந்தி, ”நம்மைச் சுற்றி நாம அறியாமலே அறிவியல் இயங்கிக்கிட்டே இருக்கு. அதுல ஒளிஞ்சிருக்கிற உண்மையையும், அறிவுப் பூர்வமான சிந்தையையும் கட்டாயம் உன்ன மாதிரி குழந்தைகள் உணரணும்.

எங்களை மாதிரி உள்ள பெரியவங்க உணர்த்தணும்” என்று சொல்லியபடி முத்துவை வீட்டுக்கு சாப்பிட அழைத்துச் சென்றார்.

பந்தின் மீது ஏறி இருந்த மண்புழுவை தன் வீட்டுத் தோட்டத்தில் விட்டுவிட வேண்டும். இன்னும் இதுபோல் நிறைய அறிவியல் செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுடன் போனான் முத்து. பிஞ்சுகளே நீங்க?

Share