Home 2017 ஏப்ரல் இந்த விடுமுறைக்கு என்ன திட்டம்?
புதன், 28 அக்டோபர் 2020
இந்த விடுமுறைக்கு என்ன திட்டம்?
Print E-mail

பிரசன்னா, கவுதம், யு.எஸ்.எஸ். காலனி, உடுமலைப்பேட்டை

முழு ஆண்டுத தேர்வு முடிந்து விடுமுறையில் என்ன செய்ய, எங்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள்? என்ற கேட்டதற்கு மூத்தவன் பிரசன்னா முந்திக்கொண்டு பேசினான்.

“கோயமுத்தூரில் இருக்கும் வேணி பெரியம்மா வீட்டுக்குப் போய் இருந்துவிட்டு வருவேன். அங்கே பிரியா அக்காகூட நல்லா... ஜாலியா... விளையாடுவேன். அப்புறம் பொள்ளாச்சியிருக்கிற ரம்யா அக்கா எங்களை டூர் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. ஆனா, எங்கேன்னுதான் தெரியலே’’ என்றான் மிகுந்த எதிர்பார்ப்போடு.

தம்பி கவுதம் தனியாக வந்து பேசினான்.

“அடப் போங்கங்க, எல்லாத்தையும் பிரசன்னாதான் சூஸ் பண்றான். எனக்கு முதல்ல பொள்ளாச்சிக்குப் போகணும்தான் ஆசை. ஏன்னா, ரம்யா அக்காகூட ஜாலியா சுத்துவேன். ஆனா, பிரசன்னாதான் கோயமுத்தூர்னு அடம் பிடிக்கறான்’’ என்று ஆதங்கத்தோடு அண்ணனை போட்டுக் கொடுத்தான்.

 

எஸ்.ஹரிஹரன், நாட்டார் மங்கலம், கடலூர் :

எனக்கு பிடித்த ஊர் திருச்சி. இந்த முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் திருச்சிக்கு சென்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும். நண்பர்களோடு நாள் முழுக்க விளையாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

 

அபிநயா, திருச்சி :

சென்னை மற்றும் பெங்களூரு போய்ச் சுத்திப் பார்க்கணும். இன்னும் தெரியாத புதுப்புது ஊருக்கெல்லாம் போய்ச் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்த விடுமுறையில் புதுசா ஏதாவது கத்துக்கணும். விதம் விதமா சாப்பிடணும்.

 

அட்சயா, திருச்சி :

“அமெரிக்கா போய் நயாகரா நீர் வீழ்ச்சில குளிச்சிட்டு பர்கர் சாப்பிடணும். அப்புறம் கோவா போய், அங்க இருக்குற பீச்சில் விளையாடனும். ஆம்பூர் பிரியாணி சாப்டுட்டு, சென்னை வந்து நிறைய நிறைய பொம்மைகள் வாங்கி வச்சு விளையாண்டுகொண்டே இருக்கனும்.  இன்னும் நிறைய ஆசை இருக்கு. நான் கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்.”

கொஞ்சமா... ஆத்தீ!

 

சு.அமுதன், கரைமாநகர், சென்னை :

கேள்வியைக் கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று “தஞ்சாவூருக்கு’’ என்றான். “தஞ்சாவூரில் எங்கே?’’ என்ற மீண்டும் கேட்டதற்கு, “பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு’’ என்றான் முகமெல்லாம் மலர. (பழகுமுகாமைச் சொல்கிறான்). “சரி அங்கு போய் என்ன செய்யப் போறே?’’ என்று கேட்டதற்கு, “சிலம்பம் கத்துக்கப் போறேன்!’’ கராத்தே கத்துக்கப் போறேன்!’’ என்றான் மிகுந்த ஆசையுடன். ஆர்வத்துடன், “எதற்கு?’’ என்றதும், “சண்டை போடறதுக்கு’’ என்றான். அதிர்ச்சியுடன், “யாரிடம்?’’ என்று கேட்க, “பிரண்டு கூடத்தான்’’ என்று வாயெல்லாம் பல்லாகத் சிரித்தான். தொடர்ந்து அவனே, “கத்துகிட்டு பெரிய ஆள் ஆவேன். அப்புறம் அங்கே ஜாலியா இருப்பேன்’’ என்றதும், “சரி சரி அப்பா அம்மாகிட்ட அனுமதி வாங்கியாச்சா?’’          என்ற கேள்விக்கு, “அப்பாதான் போகச் சொன்னாரு’’ என்றான். “அப்பா ஹைகோர்ட் தானே! அம்மா சுப்ரீம் கோர்ட் ஆச்சே?’’ என்றதற்கு. “ஆங்.. அவங்க சொன்னாங்க. அவன் போயிட்டு வரட்டும். நாம் நிம்மதியா இருப்போம்னு” என்று சொன்னதும், பக்கத்திலிருந்த அவனது அம்மா வெடித்துச் சிரித்தார். “சரி, அந்த அஞ்சு நாள் நீங்க எப்படி இருப்பீங்க என்று கேட்டதும், “நானும் ரொம்ப... ஜாலியா இருப்பேன்’’ என்று வெடித்துச் சிரித்தான்.

 

வி.நிதிஷ்குமார், திருவள்ளூர் :

என்னுடைய பிறந்த நாள் ஏப்ரல் மாதம். அன்று என் குடும்பத்தாருடன் கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடணும். நீச்சல் பயிற்சி வகுப்பு செல்ல வேண்டும்.

கோடைக்கானல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்லவேண்டும். இந்த ஆண்டு இது மட்டும்தான்.

 

ம.விக்ரமாதித்யன்,

காட்டாங்கொளத்தூர்-:

திருவெற்றியூரில் உள்ள என்னுடைய பாட்டி வீட்டுக்கு செல்ல வேண்டும். வாலிபால், கிரிக்கெட், வீடியோகேம் விளையாடணும். கராத்தே, யோகா பயிற்சி வகுப்பு போகணும். நல்லா விளையாடணும்.


க.ம.யாக்ஷணா, தேனி :

என் தந்தைக்கு ஏப்ரல் மாதம் பிறந்த நாள். அன்று எங்கள் குடும்பத்துடன் வைகை அணைக்குச் சென்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

வெளிநாடுகளுக்கு கப்பலில் சென்று நடுக்கடலில் கடலின் அடியில் இறங்கி, கடலில் உள்ள மீன்களைப் பார்க்க வேண்டும்.

கராத்தே, நடனம், பாட்டு, வரைதல் போன்ற பயிற்சி வகுப்புகளை என் பள்ளி நாட்களிலேயே கழித்துவிட்டேன். ஆகையால் கிராமத்தில் உள்ள என் பாட்டி வீட்டிற்குச் சென்று என் சக நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும்.

 

க.ம.தக்ஷனா, தேனி :

குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும். மலைப்-பகுதிகளுக்குப் போகணும், மலை ஏற வேண்டும். (நீங்க 34-ஆம் பக்கம் போங்க!)

 

ஜெ.ஷார்லி சூசன், செஞ்சி :

டெல்லி சென்று தாஜ்மஹால், இந்தியா கேட், செங்கோட்டை போன்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கணும். மதுரை மீனாட்சி கோயிலுக்குச் சென்று அங்குள்ள சிலைகளின் வடிவமைப்பைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.


ஜெ.ஜான் நெகேமியாநேசன், செஞ்சி

என் மாமாவுடன் சென்று மதுரையில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்கணும். நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். சென்னையில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றிப் பார்க்கணும். அடுத்த ஆண்டு நான் 10ஆம் வகுப்பு. ஆகையால் என்னுடைய கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். <

Share