Home 2017 ஏப்ரல் எச்சரிக்கையும் விழிப்பும் எப்போதும் எதிலும் வேண்டும்
திங்கள், 26 அக்டோபர் 2020
எச்சரிக்கையும் விழிப்பும் எப்போதும் எதிலும் வேண்டும்
Print E-mail


- சிகரம்

உள்ளங்கையில் உலகம்

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 30 வயதைக் கடந்தவர்கள்கூட உண்பது, உழைப்பது, உறங்குவது தவிர எந்த அறிவும் விவரமும் இன்றி வாழ்ந்தனர்.

அவர்களுக்கு, தான் வாழும் இடத்தையும் அருகிலுள்ள இடத்தையும் தவிர வேறு எதுவும் தெரியாது. பலர் பள்ளிக்கூடங்களுக்கே கூடச் சென்றதில்லை. செய்தித்தாள் ஊருக்கு ஒன்று வருவதே அரிது. சைக்கிள்தான் முக்கிய வாகனம். எந்த இடத்திற்கும் விரைவில் சென்றுவர இயலாது; செய்தியும் விரைவாக வந்து சேராது.

ஆனால், இன்று உங்கள் காலத்தில் அப்படியா? எல்லாம் தலைகீழ். உலகில் எதையும் இருந்த இடத்திலிருந்தே அறியலாம். உள்ளங்கையில் உலகம்! அள்ள அள்ள ஏராளம் அங்கே! ஆனால், எதை அள்ளுகிறீர் கொள்ளுகிறீர் என்பதே முக்கியம். காரணம், அதில் நல்லவையும் உண்டு, தீயவையும் உண்டு. வாழ வைப்பவையும் உண்டு, வீழ வைப்பவையும் உண்டு. சந்தனமும் உண்டு; சாக்கடையும் உண்டு.

சூழல் மாசுச் சூறாவளி

நீங்கள் வாழும் உலகு ஏமாற்று, வஞ்சனை, மோசடி, கொலை, கொள்ளை, கடத்தல், சுரண்டல் என்று பலவும் எளிதாக எங்கும் நடக்கக்கூடியதாய் மாறிவருகிறது.

உண்மை, நேர்மை, அறம், தொண்டு, உதவி, ஒற்றுமை, பாசம், கூடி வாழ்தல், பகிர்தல் என்ற நல்ல பண்புகளெல்லாம் மெல்ல மெல்லக் குறைந்துவருகின்றன.

கெட்டதை நீக்கி, நல்ல வழியில் செலுத்தும் ஊடகங்கள் குறைவு. பள்ளிக்கூடங்கள்கூட பணம் ஈட்ட, உங்களைப் பாடங்களிலே மூழ்கச் செய்து பண்பை வளர்க்கத் தவறி விடுகின்றன.

10 வயதுக்குள்ளாகவே நீங்கள் பாழாய்ப் போவதற்கான அனைத்தும் அருகிலேயே உங்களைச் சூழ்ந்து நெருங்குகின்றன.

எச்சரிக்கையும் விழிப்பும்

உலகில் கேடுகள் மிகுதியாய்ச் சூழும் அளவிற்கு உங்களுக்கு விழிப்புணர்வும் விவரங்களும் நிறைய கிடைக்கின்றன. எனவே, நீங்கள் விழிப்போடும் எச்சரிக்கையோடும் எங்கும், எதிலும், எப்போதும் இருக்க வேண்டியது கட்டாயம். மிக மிகக் கட்டாயம்.

எது சரி? எது தப்பு? எது நல்லது? எது கெட்டது? எது ஏமாற்று? எது சூழ்ச்சி? எது மூடத்தனம்? எது அறிவுக்கு உகந்தது? எது நம்மை உயர்த்தும்? எது நம்மை வீழ்த்தும்? யாருடன் சேர வேண்டும்? யாருடன் சேரக்கூடாது? எதைப் பயன்படுத்த வேண்டும்? எதைப் பயன்படுத்தக் கூடாது? எதைப் படிக்க வேண்டும்? எதைப் படிக்கக் கூடாது? எதைப் பார்க்க வேண்டும்? எதைப் பார்க்கக் கூடாது? எதை உண்ண வேண்டும்? எதை உண்ணக் கூடாது? என்று ஒவ்வொன்றையும் நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். தெரியாததைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர், ஆசிரியர், மூத்தோரை அணுக வேண்டும். அவர்கள் சொல்வதையும் ஆய்ந்த பின்னே ஏற்க வேண்டும்.

செல்பேசி

செல்பேசியின் பயன்பாடு சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. அதிக நேரம் அதில்தான் நீங்கள் செலவழிக்கிறீர்கள். தொலைவிலுள்ளவர்களிடம் பேசுவதற்காக வந்த செல்பேசி தற்போது எல்லாவற்றையும் உள்ளடக்கி, உலகே உங்கள் உள்ளங்கையில் என்ற நிலையை உருவாக்கி விட்டது.

அதில் எந்த அளவிற்கு ஏராளமாக நன்மைகள் உள்ளனவோ அதே அளவிற்குத் தீமைகளும் உள்ளன. எனவே, உங்கள் உயர்விற்கு, நல்வாழ்விற்கு, திறமைக்கு, சாதனைக்கு, அறிவு வளர்ச்சிக்கு, ஆக்கத்திற்கு எது பயன்படும் என்பதைத் தேர்வு செய்து பார்க்க வேண்டும்.

விளையாடவே செல்லைப் பயன்படுத்துவோர் உண்டு. நக்கல், கிண்டல், சிரிப்பு போன்றவற்றையே அதிகம் பார்ப்பவர் உண்டு. ஆபாசக் காட்சிகளைத் தேடிப் பார்ப்போர் உண்டு. அரிய செய்திகளைத் தேடிப் படிப்போர் உண்டு.

நீங்கள் செல்பேசியைப் பயன்படுத்தும்போது முதலில் எதைப் பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்து அதைத் தவிர்க்க வேண்டும். பக்கத்தில் உள்ள நண்பன் கேடானவற்றைப் பார்க்கச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டுவான். உங்களுக்கும் ஆர்வம், ஆசை வரும்.

கட்டுப்பாடே காக்கும் கருவி

அப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் உள்ள உறுதியுடன் கட்டுப்பாடாய் கெட்டதைத் தவிர்க்கும் திறமையில்தான் உங்கள் எதிர்கால வாழ்வும், உயர்வும், வீழ்வும், பாழும் அடங்கியுள்ளது.

புகைப்பிடிக்கக் கூடாது; போதைப் பொருளைச் சுவைக்கக் கூடாது; பொய், களவு, மோசடி செய்யக் கூடாது; செல்லில் அதிகநேரம் விளையாடக் கூடாது. அறிவுக்குகந்த பல செய்திகளைத் தேடிப் படிக்க வேண்டும்.

சபலம் வந்தால் சரிவும் கேடும் சுலபம்

உள்ளத்து உறுதியோடு இவ்வுலகில் வாழாமல், சபலத்திற்கு ஆளானால், அது தீய வழியில்  உங்களை எளிதில் கொண்டு சென்று வாழ்வையே பாழாக்கிவிடும். எனவே, தீயவற்றில் ஆர்வங்கொண்டு, சபல உணர்வுக்கே இடங்கொடுக்காது; மன உறுதியுடன் நல்வழியில் வாழ வேண்டும். அத்தகு கெட்டச் சூழலில் விலகி வருவதும், கெட்டவற்றை, கெட்டவர்களை விலக்குவதுமே ஏற்ற வழி! விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருங்கள். அது உங்களைக் காக்கும், உயர்த்தும், வாழ்விக்கும்!

பாடங்கள் மட்டும் படிப்பல்ல

பள்ளிக் கூடங்களில் நீங்கள் படிப்பது மட்டும் அறிவு வளர்ச்சிக்கும்; சாதனைக்கும் போதாது. நீங்கள் இணையவழி, நூலகங்கள் வழி பல தகவல்களை அறிய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் ஓசூரைச் சேர்ந்த ஆகாஷ் மனோஜ் என்ற பத்தாம் வகுப்பு மாணவன், தன் முயற்சியில், இதயம் பற்றி நிறையப் படித்து அதன்மூலம் மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறியும் அரிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். அப்படி பிஞ்சுகள் அனைவரும் அறிவுத் தேடலில் இறங்கிச் சாதிக்க வேண்டும். பிஞ்சுகளால் அது நிச்சயம் முடியும்! வாழ்த்துகள்!

Share