
விடுமுறை நாளில் வீணாய் வெயில்தனில் அலையா தீர்கள்; சுடுகிற வெப்பத் தாலே சோர்வுடன் நோய்கள் சேரும்: உடுத்திடும் உடைகள் மென்மை உள்ளதாய் இருத்தல் நன்று; கெடுத்திடும் பனிக்கூழ்* வேண்டாம்; கேடிலா இளநீர் உண்பீர்: அடுக்கடுக் காக ஆன்ற அறிஞரின் நூல்கள் வாங்கி விடுப்பினில் வீட்டுள் தங்கி விரிவறி வோடு வாசி:
கெடுதலைச் செய்யா நல்ல கனிகளை உண்ணல் நன்று; படுப்பதும் பாயில் என்றால் பலநலம் உண்டா கும்காண்: விடியலில் எழுந்து சற்று விரைவுடன் நடத்தல் நன்று; மடியிலா தென்றும் அந்தி மாலையில் சற்றே ஆடு: படித்திடும் நூல்கள் எல்லாம் பகுத்தறி வூட்டல் வேண்டும்; துடிப்புடன் கோடை நாளைத் தோழனே! பயன் படுத்து!
- கே.பி.பத்மநாபன்
|