புத்தகம் பேசுது | |||
|
ஆசிரியர் மாறன் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் சுவையாகச் சொல்லும் வரலாற்றுச் செய்திகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். கதிரவன் மட்டும் அதைக் கவனிக்காமல் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஆசிரியர் “கதிரவா! இங்கே சொல்றதை கவனிக்காம அங்கே என்ன வேடிக்கை! இங்கே கவனி’’ என்று குரல் கொடுத்துவிட்டு மீண்டும் தான் சொல்லிக் கொண்டிருந்த சேதியைத் தொடர்ந்தார். “மாணவர்களே! நூலகம்னு சொல்றமே! அது யார் யார் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கு?’’ நான்கு மாணவர்கள் கை தூக்கினார்கள். கதிரவன் பக்கத்தில் இருந்த பாலு ''டேய்! கதிரவா உங்க தெரு முனையில கூட லைப்ரரி இருக்கில்லே கைத்தூக்குடா'' என்றான். அதைக் கவனித்த ஆசிரியர் மாறன் “என்ன கதிரவா உங்க வீட்டுப் பக்கத்துலெ நூலகம் இருக்கா? இல்லியா.’’ “எனக்குத் தெரியாது சார்!’’ என சட்டென்று பதில் சொன்னான் கதிரவன். உடனே பக்கத்திலிருந்த பாலு, “சார்! இவங்க தெருவோட கடைசியில அண்ணா பூங்கா இருக்கு சார். அதுக்குப் பக்கத்து கட்டிடமே நூலகம்தான் சார். கிளை நூலகம்னு பெருசா எழுதிப் போட்டிருக்கு சார்! நான் பாத்திருக்கேன் சார்'' என்றான். ஆசிரியர் கதிரவன் “உனக்குத் தெரியாதுங்கிறியே... நீ அங்கே போயி புத்தகமெல்லாம் எடுத்து படிக்கமாட்டியா...!’’ என்றார். “போக மாட்டேன் சார்! அங்கெல்லாம் போனா ஒரே போர் அடிக்கும் சார்! பாடப் புத்தகத்தையே படிக்க முடியிலே. இதுலே அங்கே வேற போயி படிக்கிறதா.. அய்யய்யோ... நம்மாலே முடியாது சார்!‘’ என்றான் கதிரவன்... மற்ற மாணவர்களெல்லாம் கல கலவென சிரித்தனர். “மாணவர்களே! ஏப்ரல் மாதம் 23ஆம் நாளை உலக புத்தக தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுறாங்க. அந்த நாள்ல நம்ம வகுப்புல உள்ள மாணவர்கள் 45 பேரையும் அவங்கவுங்க இருக்கிற பகுதியில உள்ள நூலகத்தில உறுப்பினரா நான் என்னுடைய செலவுலேயே சேத்துவிடலாம்னு இருக்கேன்’’ என்றார் ஆசிரியர். மாணவர்கள் அதை வரவேற்கும் விதமாக ஆரவாரம் செய்தனர். பள்ளி முடியும் நேரத்திற்கான மணி ஓசை ஒலித்தது. அவ்வளவுதான் புத்தகச் சுமையோடு சட்டென விரைந்து சென்று விட்டனர் மாணவர்கள். பள்ளி விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த கதிரவன் பள்ளிச் சீருடையை மாற்றிக் கொண்டு அம்மா தந்த தேநீரைக் குடித்துவிட்டு, நண்பர்களோடு விளையாடப் புறப்பட்டு விட்டான். ஓடி ஒளியும் விளையாட்டு... ஒருவன் கண்ணை மூடிக் கொண்டு ஒன்று, இரண்டு, மூன்று நான்கு என சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் ஓடிஒளிந்து கொண்டிருந்தனர். கதிரவனும் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தான். சாலையின் அடுத்த முனைக்கே வந்துவிட்டான். அவனுக்கு ஒளிந்து கொள்ள இடமே கிடைக்கவில்லை. சாலையின் முடிவில் ஒரு கட்டிடம். ஒரு கதவு மூடியும், ஒரு கதவு திறந்தும் இருந்தது. தன்னை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என சுற்றும் முற்றும் பார்த்தபடி முட்டி போட்டபடி உள்ளே நுழைந்தான் கதிரவன். அந்த இடமே அமைதியாக இருந்தது. பல அலமாரிகள் வரிசையாக இருந்தன. அவற்றில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதுதான் கதிரவன் வீட்டு அருகில் உள்ள கிளை நூலகம். இப்போதுதான் கதிரவன் முதல் முறையாக அதன் உள்ளே வந்திருக்கிறான். அதுவும் ஒளிந்து கொள்ள!. தன்னை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதால் ஓர் அலமாரியின் பின்னால் போய் பதுங்கி உட்கார்ந்து கொண்டான். சற்று நேரத்தில் அந்த இடமே இருட்டானது. கண்ணாடி ஜன்னல் வழியே தெரு விளக்கின் வெளிச்சம் லேசாக உள்ளே தெரிந்தது. கதவு காற்றில் தானாக மூடுவது போல் மூடிக் கொண்டது. கதிரவன் அடிக்கடி தொலைக்காட்சியில் பேய்க்கதை தொடர்களைப் பார்ப்பவன். அதனால், “இது ஏதாவது பேயின் சேட்டையாக இருக்குமோ'' என பயம் வந்தது. கை கால் உதறல் ஏற்பட்டது. திடீரென மேசை மேலிருந்த புத்தகங்கள் நகர்ந்தன. சில புத்தகங்களின் பக்கங்கள் படபடவென காற்றில்பறந்தன. அது கதிரவனை மேலும் அச்சப்பட வைத்தது. “கதிரவா!’’ கரகரப்பான குரலில் அழைப்பு. ஆடிப் போனான் கதிரவன், “யாரு யாரு பேயா?’’ என தழுதழுத்த குரலில் கேட்டான். “ஹ... ஹ... ஹா..’’ என பெரிய சிரிப்போடு “பேயை நீ பார்த்திருக்கிறாயா கதிரவா?’’ என்றது அந்த குரல் “இல்ல.... இல்ல...’’ என்றான் கதிரவன். “ஆமாம் கதிரவா... நீ சொல்வதுதான் உண்மை... பேய்.. இல்லை... பிசாசு இல்லை.. அதனால் நீ அசச்சப்படத் தேவையில்லை’’ என்றது குரல். “சரி அப்ப நீ யாரு’’ என்றான். “நானா.... சாதி மதம் பார்க்காதவன்! சாத்திர சடங்கு எதுவும் இல்லாதவன்! என்னைத் தொட்டால் தீட்டு என்று சொல்லாதவன்! என்னைத் தொட்டு, எடுத்து, படித்து, முடித்தவரை புகழ் பெறச் செய்யும் புத்தகம்தான் நான்!’’ கதிரவன் லேசாகச் சிரித்தபடி “புத்தகமா! புத்தகம் எங்கேயாவது பேசுமா?’’ எனக் கேட்டான் கதிரவன். லேசான வெளிச்சத்தில் மேசை மேலிருந்த ஒரு பெரிய புத்தகம் கதிரவன் பக்கம் திரும்பி, “கண்டிப்பாக பேசும்! நல்ல புத்தகமான என்னை எடுத்துப் படிக்கும் ஒவ்வொருவரின் இதயத்தோடு இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறேன்''. “அது சரி! என்னை எதுக்குக் கூப்பிட்டே'' என்றான். “வாசிப்பை நேசிக்கச் சொல்றதுக்காகத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.'' என்றது புத்தகம். உடனே கதிரவன், “என்ன சொல்றே?’’ என்றான். “வாசிக்கிறத நேசிக்கனுமா'' “ஆமா.. எமது முன்னேற்றங்கள் அனைத்திற்கும் ஒரே ஆசான் புத்தகங்கள்தான்னு சொன்னவர் வின்ஸ்டன் சர்ச்சில்.... ஒரு கோடி ரூபா கிடைச்சா என்ன செய்வீங்கன்னு கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்னு பதில் சொன்னவர் உத்தமர் காந்தியடிகள். வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம்... சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேணும்னு சொன்னவர் நெல்சன் மண்டேலா... புத்தகங்கள் இருந்தாப் போதும் சிறைக் கம்பிகளும் கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாதுன்னு சொன்னவர் மாவீரன் பகத்சிங்.. இப்படிப் பல பேர் புத்தகமான என்னைப் பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.. என்னைப் படிச்சவங்க படிச்ச மாதிரியே நடந்துக்கிட்டவங்க எல்லாரும் வாழ்க்கையிலே பேரும் புகழும் அடைஞ்சாங்க'' என்றது புத்தகம். “இருக்கட்டும் அதுக்காக ஓவரா அலட்டிக்காதே நிறுத்து. அச்சு அடிச்சு... அழகா மடிச்சு, அட்டை போட்ட கொஞ்சம் காயிதம்தான் நீ.'' என்றான் கதிரவன். “கையிலே புடிச்சா நான் காகிதம்! தொடர்ந்து படிச்சா அறிவுக்கு நான்தான் ஆயுதம்!’’ என பதில் சொன்னது புத்தகம். “அட நல்லா பேசுறியே...'' என்று வியந்தான் கதிரவன். “ஆமா! நல்ல புத்தகமான என்னை வாசிச்சா நீயும் நல்லா பேசலாம்'' என்றது புத்தகம். “பேசலாம்! பேசலாம்! பேச்சு வேலைக்கு ஆகுமா!!’’ என கேலியாகக் கேட்டான் கதிரவன். புத்தகம் சிரித்தபடி தந்தை பெரியாரின் பேச்சு.. எத்தனை பெரிய சமூக மாற்றத்தை இந்த நாட்டுல உண்டாக்கிச்சு. பேரறிஞர் அண்ணாவின் பேச்சு அரசியலில் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்துச்சு. பேசுனதோட இல்லாம அவங்கள மாதிரி உள்ளவங்க எழுதுன நூல்கள் எவ்வளவு பேருடைய வாழக்கையிலே மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்தது தெரியுமா? உலகத்தையே புரட்டிப்போட்ட புத்தகங்கள் ஏராளமா இருக்கு. அதையெல்லாம் படி’’ என்றது புத்தகம். “நீ உலகத்தையே புரட்டுனது இருக்கட்டும்.. உன்னைப் புரட்டிப் படிச்சவனும் சிலபேரு ஊரை ஏமாத்துறானே...’’ எனக் கேட்டு மடக்கினான் கதிரவன். “அது எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. ஏன் ஏமாத்துறான்னு யோசிச்சுப் பாத்தேன். படிச்சவங்க படிக்காதவங்கன்னு இருக்கிறதுனாலதான் இப்படி நடக்குது... எல்லாரும் படிச்சு எல்லாருக்கும் எல்லாமும் தெரியுங்கிற நிலை வந்தா யாரும் யாரையும் ஏமாத்த முடியாது.’’ என பதிலளித்தது புத்தகம். “ஆமா... ஆமா.. நீ சொல்றது உண்மைதான். கட்டாயம் எல்லாருக்கும் எல்லாமே தெரிஞ்சுதான் இருக்கணும்’’ என ஒப்புக் கொண்டான் கதிரவன். “அதுக்கு படிச்சாதானே முடியும். அதனாலதான் யுனேஸ்கோ நிறுவனம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்கும் நோக்கத்தோட ஏப்ரல் 23ஆம் தேதிய உலக புத்தக நாளா அறிவிச்சிருக்கு... அந்த நாள் புகழ் பெற்ற இலக்கியவாதி நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த நாளும்... இறந்த நாளும் ஆகும்...’’ என்றது புத்தகம். “ஆமா... அன்னையர் தினம்.. உழைப்பாளர் தினம்... மாதிரி உலக புத்தக நாளும் வரும். அவ்வளவுதான்’’ என்றான் கதிரவன். “அதைக் கொண்டாடுறது எதுக்காக தெரியுமா?’’ என்று கேட்டது புத்தகம். “ஆங்.. அம்மா.. அப்பா இறந்து போயிட்டா அம்மாவாசை... கிருத்திகையிலெ காக்காவுக்கு சோறு வச்சு அவுங்களெ நினைப்பாங்கல்ல... அது மாதிரி நினைச்சு பாக்குறதுக்கு..’’ என்றான் கதிரவன். “அதுகூட நம்பிக்கை... ஆனா உலகப் புத்தக தினம் கொண்டாடுறது தன்னம்பிக்கைய ஊட்ட.. எல்லாருக்கும் வாசிக்கும் உரிமை... அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலகம், உலகில் உள்ள எல்லா அறிவுச் செல்வத்தையும் அவரவர் தாய்மொழியில பெறனும். அவுங்க அவுங்க தாய்மொழியில உள்ள இலக்கியச் செல்வங்கள பாதுகாத்து ஆவணப் படுத்தனும்... புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், இடையில ஒருங்கிணைப்பை ஏற்படுத்தனும். இப்படி பத்து கட்டளைகளை முன்வச்சுதான் உலக புத்தக நாள் கொண்டாடப்படுது. அதனால நீ மட்டும் படிக்காமே எல்லாரையும் படிக்கச் சொல்லு.. மக்கள் எல்லாரும் படிச்சவங்களாவும் பண்பாடு நிறைஞ்சவங்களாவும், பகுத்தறிவு உள்ளவங்களாவும் இருந்தாத்தான் நாடும் வீடும் நல்லாயிருக்க முடியும். கல்வி அறிவு வளர்ச்சி அடஞ்ச அளவுக்கு வாசிக்கிற பழக்கம் மக்கள் கிட்டே போதிய அளவு வளரலை. வாசிப்பை நேசிக்கச் சொல்லு. உலகத்தின் நாகரீக வளர்ச்சிக்கு புத்தகமான நான்தான் முக்கியக் காரணம். அதனாலே எல்லாரையும் படிக்கச் சொல்லு. விலை கொடுத்து வாங்கிதான் படிக்கணும்னு அவசியம் இல்ல. நூலகத்துக்குப் போயி இலவசமாவே என்னை எடுத்துப் படிக்கலாம். படிக்கிறியா கதிரவா.. படிக்கிறியா?’’ “படிக்கிறேன்.. படிக்கிறேன். படிச்சு நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிறேன்.’’ என்று உரக்கக் குரல் கொடுத்தபடி தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றான் கதிரவன். அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது பெரிய புத்தகத்தை கையில் பிடித்து அசைத்தபடி பேசிக் கொண்டிருந்தது தன்னுடைய ஆசிரியர் மாறன் என்பது. மாறன் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடி வந்து கதிரவனைக் கட்டி அணைத்துக் கொண்டார். தான் மட்டும் நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது திடீரென கதிரவன் குனிந்தபடி உள்ளே நுழைந்ததைக் கண்டதாகவும், யாரும் இல்லாததால் இதுதான் சமயம் என கதவை மூடிவிட்டு புத்தகம்போல் பேசியதாகவும் விளக்கிச் சொன்னார் ஆசிரியர் மாறன். ‘’சார்! வகுப்புல நீங்க சொன்னதை கவனிக்கல தப்புதான். ஆனா இப்ப புத்தகமாவே வந்து புரிய வச்சுட்டிங்க. எனக்கு வாசிக்கிற பழக்கம் இதுவரைக்கும் இல்லாமத்தான் இருந்துது. இனி தொடர்ந்து வாசிப்பேன். அறிவை வளத்துக்குறேன் சார்’’ என்றபடி ஆசிரியரை பற்றிப் பிடித்துக் கொண்டான் மாறன். ஆசிரியர் நெகிழ்ந்து மகிழ்ந்தார். பிஞ்சுகளே நீங்க? - மு.கலைவாணன்
|