Home 2017 மே கொளுத்தும் கோடை; குழந்தைகள் செய்ய வேண்டியவை
ஞாயிறு, 04 ஜூன் 2023
கொளுத்தும் கோடை; குழந்தைகள் செய்ய வேண்டியவை
Print E-mail

கோடை வெப்பம் குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, இவ்வாண்டு வெய்யிலின் கடுமை மிகவும் கொடுமையாக, இருக்கும் என்பதால், கூடுதல் கவனம் வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப நடந்தால், கோடையைப் பயனுள்ளதாயும், மகிழ்வுள்ளதாயும், பாதுகாப்பானதாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை:

வெந்தயம்: காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிடுங்கள். இப்பழக்கத்தை வாழ்நாள் முழுவதும் பின்பற்றலாம். வெந்தயம் இன்றைய உலகின் இருபெரும் நோய்களான சர்க்கரை, இரத்த அழுத்தம் இரண்டும் வராமல் தடுக்கும். உடலுக்குக் குளிர்ச்சியும், வலிமையும் நார்ச்சத்தும் தரும்.

காலை உணவு: கம்பு, கேழ்வரகுக் கூழை மோரில்  கரைத்து, வெங்காயம் அரிந்துபோட்டு, வேண்டுமளவு குடியுங்கள்.

அல்லது இரவு சோற்றில் வெங்காயம் வெட்டிப் போட்டு நீர் ஊற்றிவைத்து அதை காலையில் அப்படியே சேர்த்து சாப்பிட்டு அந்த நீரைப் பருகுங்கள். வழக்கமான இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியைவிட இவை கோடைக்கு மிக உகந்தது.

பகல் உணவு: வெய்யிலில் செல்வதைத் தவிர்த்து மரத்து நிழலில் விளையாடுங்கள். ஏ.சி. அறையில் இருப்பதைவிட மரத்து நிழலும், இயற்கைக் காற்றுமே உடல்நலத்திற்கு ஏற்றது. வெய்யிலில் சென்றால் தொப்பி அல்லது குடையுடன் செல்லுங்கள்.

தர்ப்பூசணி, மாதுளை, வாழைப்பழம், தேன் கலந்த சோற்றுக் கற்றாழை இவற்றைச் சாப்பிடுங்கள். காரம் அதிகம் இல்லாமல் சாம்பார், இரசம், மோர் சோறு சாப்பிடுங்கள். மணத்தக்காளி கீரை வாரம் மூன்று நாள் மதிய உணவின்போது சாப்பிடுங்கள். முருங்கைக் கீரை, முருங்கைக்காய் நலம் தரும். வெள்ளரி, இளநீர், நுங்கு கிடைத்தால் சாப்பிடுங்கள்.

மாலைச் சிற்றுணவு: பைத்தம்பருப்பில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம் அல்லது சுண்டல் அல்லது வாழைப்பூ அடை சாப்பிடுங்கள்.

விளையாட்டு: மாலை 5 மணிமுதல் 6.30 மணிவரை நன்றாக ஓடியாடி விளையாடுங்கள்.

இரவு: 1 மணி நேரம் தொலைக்காட்சி, 1 மணி நேரம் வீட்டிலுள்ளவர்களுடன் பேசுதல், அதன்பின் 1 மணி நேரம் விருப்பமானதைப் படித்துவிட்டு உறங்குங்கள்.

தண்ணீர்: நாள்தோறும் 2 லிட்டருக்குக் குறையாமல் நாள் முழுவதும் தண்ணீர் குடியுங்கள். குளிர்ந்த நீரில் குளியுங்கள். வெய்யிலில் சென்றுவந்து உடனே குளிர்ந்த நீரில் குளித்தல், குளிர்நீர் அருந்துதல் கூடாது. வியர்வை அடங்கி, உடல் சூடு குறைந்த பின் குளிக்க வேண்டும். அய்ஸ் பயன்படுத்தாதீர்கள். மண்பானை நீர் குளிர்ச்சியாய்க் குடிப்பது நலம் தரும். நீருடன் மோர் கலந்து கருவேப்பிலை இஞ்சி, கொத்துமல்லி இலை கலந்து பருகுவது உடல்நலம் காக்கும்.

செய்யக் கூடாதவை: காலை 8 மணிக்கு மேல் மாலை 4.30 மணிக்கு முன் வெய்யிலில் செல்லாதீர்கள், விளையாடாதீர்கள்.

¨           காரமான உணவுகளை, புளி அதிகம் சேர்த்த பண்டங்களை உண்ணாதீர்கள்.

¨           எண்ணெயில் பொறித்த உணவுகள் அதிகம் வேண்டாம்.

¨           கோழிக்கறி சாப்பிட வேண்டாம்.

¨           பாக்கெட் உணவுகள் வேண்டாம்.

¨           செயற்கைக் குளிர்பானங்கள் சாப்பிடவே கூடாது.

வெய்யிலில் சுற்றுலா வேண்டாம்:

வெய்யில் கடுமையாக உள்ள பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம்.

¨           புதிய இடங்களில் தனியே செல்லாதீர்கள். பெரியவர்களுடன் செல்லுங்கள். குறிப்பாக நீர்நிலைகளில் குளிக்க பெரியவர்களுடன் செல்லுங்கள்.

வெய்யிலும் அம்மையும்:

வெய்யில் காலத்தில் அம்மை நோய் வரும். வந்தாலும், வரும்முன் தடுக்கவும் வேப்பிலை-களுடன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, மூன்றில் ஒரு பாகம் தண்ணீர் சுண்ட கொதிக்க வைத்து, ஆறிய பின், வாரம் மூன்று முறை ரு டம்ளர் அந்தச் சாற்றைப் பருகுங்கள். அம்மை வந்தால் அம்மை தீரும் வரை நாள்தோறும் இரண்டு முறை சாப்பிடுங்கள். இதைப் பருகினால் அம்மை நோய் வராமல் தடுக்கும்.

வெய்யிலும் டைபாய்டும்: வெய்யில் காலத்தில் டைபாய்டு தொற்று ஏற்படும். எனவே, தூய்மையான உணவை வீட்டிலே சாப்பிடுங்கள். கண்ட இடத்தில் தண்ணீர் குடிக்காதீர்கள், உணவு உண்ணாதீர்கள். குடிநீர், உணவு தூய்மையாய் இருத்தால் டைபாய்டைத் தவிர்க்கலாம். உணவைச் சமைப்போர், பரிமாறுவோர் நகத்தில் அழுக்கு சேராமல், சோப்பால் தூய்மை செய்ய வேண்டும். நக அழுக்கின் வழி டையாய்டு பரவும்.

பொது அறிவை வளருங்கள்: பொது அறிவு வளர்க்கும் புத்தகங்கள், பயிற்சிகள் சிறந்தது. கோடை விடுப்பில் பள்ளிப் பாடங்களுக்கான சிறப்பு வகுப்பு என்று பாடம் படிப்பதிலே மூழ்காமல், கோடை விடுமுறையை மகிழ்வாகக் கழியுங்கள். உடலுக்கும் மனதுக்கும் இதம் சேர்த்தால், வரும்  கல்வியாண்டில் சுறுசுறுப்பாகப் படிக்க அது உதவும்.

- சிகரம்

Share