பிஞ்சுகளை வருத்தும் பிழையான எண்ணங்கள்!
Print

 

குழந்தைகள் பருவம் புதிது புதிதாய் பலவற்றையும் தெரிந்துகொள்ளும் பருவம். அவர்கள் பிறந்த வீடு, பள்ளி, தெரு, சமுதாயம் என்று பல்வேறு சூழல்களில் வெவ்வேறு அனுபவங்களையும், செய்திகளையும் பெறுகின்றனர். அவற்றுள் எது சரி, எது தப்பு என்று புரியாமல், பிழையான கருத்துக்களைக் கூட எண்ணி வருந்துவது உண்டு! சிலவற்றை எண்ணித் தாழ்வு மனப்பான்மை கொள்வதுண்டு!

1. பிறப்பால் வரும் தாழ்வு எண்ணங்கள்:

(அ) ஏழ்மை:

பிறந்த குடும்பம் ஏழ்மையானதாய் இருப்பின், வசதியான குடும்பத்துப் பிள்ளையைவிட தான் தாழ்ந்தவன் என்று தன்னுள் ஓர் எண்ணத்தை சிறுவர்கள் வலுவாக வளர்த்துக் கொள்கின்றனர்.

(ஆ) ஜாதி:

தாழ்த்தப்பட்டோர் என்று ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளால் உயர்ந்த ஜாதி எனப்படும் குடும்பத்தில் பிறந்தோரைவிடத் தாழ்ந்தவர்களா நாம் என்று எண்ணும் வகையில் சமூகம் நிர்ப்பந்திக்கிறது. இதனால் தாழ்வு மனப்பான்மை அவர்களை வாட்டுகிறது. இதற்கு சமூகம் பெரும் அழுத்தம் தருகிறது. தங்களை உயர் ஜாதியினர் என்று  அழைத்துக் கொள்ளும் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு ஆதிக்க எண்ணம் திணிக்கப்படுகிறது.

(இ) நிறத்தால்:

கருப்பாக உள்ள பிள்ளைகள் சிவப்பாக உள்ள பிள்ளைகளைவிடத் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தைப் பெறுகின்றனர்.

(ஈ) உருவத்தால்:

அழகு குறைவு என்று சொல்லப்படும் பிள்ளைகள் அழகான பிள்ளைகளைவிடத் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவதோடு வருந்தவும் செய்கின்றனர்.

(உ) மாற்றுத்திறன்:

கண், காது, வாய், உறுப்பு மாற்றுத் திறனாளியாகப் பிறக்கின்ற பிள்ளைகள் மிகவும் தாழ்வு மனப்பான்மை கொள்வதோடு, தங்களால் உயர்வாக வர முடியுமா? சாதிக்க முடியுமா என்று கவலை கொள்கின்றனர்.

பிஞ்சுகளின் இந்தக் கவலைகள் சரியானதா?

தாழ்வு மனப்பான்மை தகப்பீர்!


பிறப்பால் ஏற்படும் இவற்றிற்கு பிள்ளைகள் எந்த வகையிலும் காரணமானவர்கள் அல்லர். தாங்கள் காரணமாகாத எதற்கும் அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல. இவற்றில் பிள்ளைகள் செய்த தவறு, குற்றம் ஏதும் இல்லை. எதற்கு தாங்கள் காரணமில்லையோ, அதற்கு வருந்துவதை முதலில் பிள்ளைகள் விட வேண்டும்.
பணக்காரர் வீட்டில் பிறப்பதோ ஏழை வீட்டில் பிறப்பதோ, அனாதையாய் வளர்வதோ இயற்கையாய், சூழலால் சமுதாய அமைப்பால் வருவது. எனவே, அதை எண்ணி வருந்துவதற்கு மாறாய் அந்நிலையை மாற்ற முயல்வதே சாதனையாகும்.

இன்றைய பணக்காரன் நாளை ஏழை ஆவான். இன்றைய ஏழை நாளை பணக்காரன் ஆவான். இது அவரவர் உழைப்பு, முயற்சி, திறமை, நுட்பம், விழிப்பு போன்றவற்றைப் பொறுத்தது.

பணக்கார வீட்டுப் பிள்ளை விலை உயர்ந்த உணவுகள் சாப்பிடுகிறார்கள். நமக்கு வசதியில்லையே என்று ஏங்க வேண்டாம். விலை உயர்ந்த உணவுகள் உடலுக்குக் கேடானவை. விலை மலிவான பழம், காய், கீரை, கேழ்வரகு, கம்பு, இளநீர், வெள்ளரி போன்றவையே உயர்ந்தவை. உடலுக்கு நலம் தருபவை.
ஜாதியை எண்ணி தாழ்வு மனப்பான்மை கொள்வது அறியாமை! அது நம்மீது மோசடியாகத் திணிக்கப்பட்டது. எனவே அதை எண்ணித் தாழ்வு மனம் கொள்ளக் கூடாது.

ஜாதி என்பது இயற்கை அல்ல. அது செயற்கையாய்த் திணிக்கப்பட்டது.

அறுபது ஆண்டுகளுக்கு முன், தாழ்த்தப்பட்டோர் என்று நம்மைத் தொடக்கூட மாட்டார்கள். நம்மவர்கள் படிக்க முடியாது. அப்படிப்பட்ட காலத்திலே அம்பேத்கர், அயோத்திதாசர் போன்றோர் படித்து உயர்ந்தனர். அப்படிப்பட்ட இழிநிலைகள், அடக்குமுறைகள் எல்லாம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் முயற்சியால் நீக்கப்பட்டு, இப்போது எல்லோரும் சேர்ந்து பழகும் நிலையுள்ளது. அப்படியிருக்க இன்றைய பிள்ளைகள் ஜாதியால் தாழ்வு கொள்ளாமல், நாமும் மனிதர், நாமும் எல்லோரைப் போலவே. நம்மாலும் உயர, சாதிக்க, ஆள முடியும் என்று உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும்.
தகுதி, திறமை, அறிவு பிறப்பால் வருவதில்லை என்பதற்கு இதோ உங்களுக்கு ஓர் உண்மை உதாரணம்.

கலைமணி என்ற பெண், தாய் தந்தை இல்லாதவர். அவரை திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம் வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தது. அந்த கலைமணியின் மகள் யாழினி. அண்மையில் நடந்த +2 தேர்வில் 4 பாடங்களில் 200க்கு 200 பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண்கள் 1190 (4, 5-ஆம் பக்கங்களில் படித்திருப்பீர்கள்).

தாய் தந்தையே இல்லாது கைவிடப்பட்ட பிஞ்சுக் குழந்தை தொண்டு இல்லத்தில் வளர்ந்து, அது பெற்ற பிள்ளை இவ்வளவு அறிவுத் திறத்தோடு இருக்கிறது என்றால் பிறப்பின் அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொள்வது தவறு அல்லவா?

எனவே, இதுபோன்ற தாழ்வு மனப்பான்மையை அகற்றி தன்னம்பிக்கையோடு முயன்று குழந்தைகள் முன்னேற வேண்டும்.

கறுப்பாய் இருப்பது தாழ்வு இல்லை. அறிவியல் ஆய்வுப்படி கறுப்பு நிற உடல்தான் நலமானது, வலுவானது. நோய் எதிர்க்கும் ஆற்றல் உடையது.

உடல் அழகு என்பது ஒருவனுக்குத் தகுதியல்ல. அவனது அறிவும், ஆற்றலுமே தகுதியானவை. சாக்ரட்டீஸ், அண்ணா போன்றோர் அழகின் இலக்கணமாக சிலர் சொல்வதுபோல் உயரம், நிறம் போன்றவற்றால் உயர்வு பெறவில்லை. அறிவால்தான் உயர்ந்தனர்.

மாற்றுத்திறனாளி என்பதற்காக வருந்துவதோ, தாழ்வாய் எண்ணுவதோ அறியாமை. எல்லா உறுப்புகளையும் இழந்தவர்கள் உலகில் நிறைய சாதனை புரிந்துள்ளனர். அதனால்தான் ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் என்கிறோம். மாற்றுத் திறனாளியான மாரியப்பன்  என்ற ஏழை மாணவன் ஒலிம்பிக் பதக்கம் வென்றதை பிஞ்சுகள் நெஞ்சில் கொள்ள வேண்டும்.

பணக்காரன், ஏழை, உயர்ஜாதியான், கீழ்ஜாதியான் என்ற வேற்றுமை வரக்கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை அணியச் சொல்கிறார்கள். ஒன்றாக உண்ணச் சொல்கிறார்கள். ஒன்றாக அமரச் சொல்கிறார்கள். எனவே, தாழ்வு மனப்பான்மையை அகற்றி சாதிக்க உறுதி கொள்ள வேண்டும். என்னால் முடியும்; நானும் உயர்ந்தவன்தான் என்ற எண்ணத்தை உறுதியாய்க் கொள்ள வேண்டும்.

நாம் உருவாக்கிக் கொள்ளும் தாழ்வு எண்ணங்கள்:

சூழலால்:

நாம் கிராமத்தில் வாழ்கிறோம். மாடி வீடு இல்லையே என்ற தாழ்வு எண்ணம் கொள்கின்றனர்.

ஒப்பீடு:

தன்னோடு படிக்கும் மாணவன் அதிக மதிப்பெண் பெறுகிறானே! நமக்கு அறிவு, திறமை குறைவு என்று எண்ணுவதும் பிழை ஆகும். அறியாமையுமாகும்.
முயற்சி செய்தால், உழைத்தால் படித்தவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டறிந்தால் நாமும் அதிக மதிப்பெண் பெறலாம் என்று தன்னம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். முயற்சி செய்தால் உயர் மதிப்பெண் பெறலாம்.

அதேபோல் தேர்வில் தோல்வியடைந்தவுடன் நம்மால் படிக்க முடியாது. படிப்பு நமக்கு வராது என்று தாழ்வு மனப்பான்மையுடன், நம்பிக்கை இழப்பது கூடாது. தோல்வியடைந்த பலர் வாழ்வில் எத்தனையோ சாதனைகளைப் புரிந்துள்ளனர். எனவே, தோல்வியைக் கண்டு துவளாமல், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றிபெற வேண்டும். உயர் கல்வியைப் பயிலவேண்டும்.

எனவே, பிஞ்சுகள் நாம் தாழ்ந்தவர் அல்ல. நம்மாலும் எல்லாம் முடியும், நமக்கு எல்லா உரிமையும் உண்டு என்ற உண்மைகளைப் புரிந்து முயன்று, முன்னேறி உயர்நிலை எட்ட வேண்டும். சமுதாயத்திற்கு உழைக்க வேண்டும்!

- சிகரம்

Share