சக்கரைப்பாண்டி அண்ணனும் மெளலி சாரும்
Print

எதையோ கடிக்கப்போய்தான் அந்த நாளேட்டினை பார்த்தார் மௌலி. மௌலி ஓர் அழகான குட்டி எலி. நாளேட்டில் பார்த்தது எலிகளின் ஒளிப்படத்தை தான். அரைப் பக்கத்திற்கு அந்த ஒளிப்படம் இருந்தது.

தானும் இப்படி அழகாக ஒளிப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை கிளம்பியது. தன் சக எலிகளிடம் கேட்டார். ஆனால், யாருக்கும் எப்படி ஒளிப்படம் எடுப்பது எனத் தெரியவில்லை. கடைசியாக மௌலிக்கு வழிகாட்டியது ஒரு பூனையார்.

பிரதான சாலையை பத்திரமாக பாதாள சாக்கடை வழியாக கடந்து கடைகள் இருக்கும் வீதியை அடைந்தார் மௌலி. கேமராவின் ஒளிப்படம் தாங்கிய கடைதான் ஒளிப்படம் எடுக்கும் கடை எனப் பூனையார் சொல்லி அனுப்பி இருந்தார். ஆள் நடமாட்டம் குறைந்து இருந்தபோது உள்ளே நுழைந்தார் மௌலி.

சக்கரைப்பாண்டி ஒளிப்பட நிலையத்தின் முதலாளி, புகைப்படக் கலைஞர், தொழிலாளி எல்லாமே சக்கரைப்பாண்டிதான். ஆள் நடமாட்டம் இப்போது மட்டும் அல்ல எப்போதும் இருக்காது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நபர்களே வருவார்கள்.

இல்லை இல்லை வந்துகொண்டு இருந்தார்கள். பக்கத்துக் கடையில் தேநீர் சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து பொறுமையாக தேநீர் குடித்துக்கொண்டிருந்தார். விரைவாக குடித்துவிட்டால் பிறகு என்ன செய்வது என யோசித்தபடியே சுமார் அரை மணி நேரம் அந்த சின்ன டம்ப்ளரில் கால்வாசி இருக்கும் தேநீரை ஒவ்வொரு சொட்டாக குடித்துக்கொண்டிருந்தார். மௌலியார் மெல்ல அவர் முன்னர் இருந்த மேஜை மீது ஏறினார்.

“சக்கரைப்பாண்டி அண்ணே! என்னை ஒரு ஒளிப்படம் எடுத்து தாங்க’’ என்றார் மௌலி. எங்கிருந்து சத்தம் வருகின்றது என முதலில் சக்கரைப்பாண்டிக்கு தெரியவில்லை. சரி இனி இவரை நாம் சக்கரை என்று அழைப்போம். தன் மேஜையில் ஓர் எலி இருப்பதை அப்போதுதான் கவனித்தார். ஓர் உருட்டு கட்டையால் அடித்துவிடலாமா என்று யோசித்தார்.

கண்ணாடி மேஜை உடைந்துவிடும் அதற்கு செலவாகும், வேகமாக அடிக்கும்போது எலி நகர்ந்தாலும் நகரும் என்று யோசித்தார். ஒளிப்படமே எடுக்க ஆளில்லை, சரி! “தன் திறமையைக் காட்ட எலியை நன்றாக ஒளிப்படம் எடுக்கலாம்’’ என்று நினைத்தார் சக்கரை.

உள்ளே இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். அறை இருட்டாக இருந்தது. விளக்குகளைப் போட்டதும் அறை பிரகாசமானது.

“மௌலியாரே ஒளிப்படத்தின் பின்னணியில் என்ன நிறம் வேண்டும்? அல்லது காட்டில் இருப்பதைப் போல பின்னணி வைக்கட்டுமா?’’

“வெள்ளை நிறம் போதும் சக்கரை அண்ணே’’

வெள்ளை நிற ஸ்கிரீனை பின்னால் அமைத்தார். ஒரு ஸ்டூல் போட்டு அதன் மீது அமரச் செய்தார். இரண்டு பக்கமும் போக்கஸ் விளக்குகள் அடித்தது. கேமராவிற்குள் தன் கண்ணை நுழைத்து போக்கஸ் செய்தார்.

மௌலியை காணவில்லை. அந்த உயரத்திற்கு மௌலி தெரியவே இல்லை. ஆமாம் மௌலி குட்டியாகத் தானே இருக்கும். அதனால் இன்னொரு ஸ்டூலை அந்த ஸ்டூல் மீது போட்டார். ஆம் இப்போது லென்ஸ் வழியாக மௌலி தெரிந்தார். சரி, க்ளிக் செய்யலாம் என்றபோது,

“மௌலி சார்! என்ன போட்டோ வேண்டும்? முகம் மட்டும் போதுமா அல்லது முழுப்படம் வேண்டுமா?

அடடே இதை யோசிக்கவே இல்லையே. சில நொடிகள் யோசித்த மௌலி “ரெண்டு முகம், ரெண்டு முழுப்படம்.’’ க்ளிக் செய்ய விரல் அருகே சென்றது.

“சக்கரை அண்ணே, இந்த மேக்கப், பவுடர் எல்லாம் எனக்கு போட மாட்டீங்களா?’’ என்றார் மௌலி. சக்கரை உள்ளே இருந்து சின்ன கண்ணாடியையும் மேக்கப் பெட்டியையும் எடுத்து வந்து அழகு படுத்தினார். எல்லாம் சரியானதும் மீண்டும் க்ளிக் செய்ய விரல் அருகே சென்றது.

“சக்கரை அண்ணே, இங்க மூன்று முடி கீழே தொங்குது. அதனை தூக்கி வாரி விடுங்களேன்’’ என்றார். சக்கரை சீப்பு ஒன்றினைக் கொண்டு வாரிவிட்டார். க்ளிக் செய்ய விரல் அருகே சென்றது.

“சக்கரை அண்ணே, நேரா முகத்தை எடுத்தா கொஞ்சம் அசிங்கமா இருப்பேன். இப்படி பக்கவாட்டில் திரும்பி உங்களை பார்க்கிறேன். அது நல்லா இருக்குமா?’’ என்றார் மௌலி. ஸ்டூலினை திருப்பி பக்கவாட்டில் போட்டார். க்ளின் செய்ய விரல் அருகே சென்றது.

“சக்கரை அண்ணே, இப்ப தான் கவனிச்சேன், வெள்ளை நிறம் பின்னாடி இருக்கு. நான் கருப்பு நிறம், ரொம்ப கருப்பா தெரிவேன் இல்லையா? வேற ஏதாச்சும் நிறம் மாத்தினா அழகா இருக்கும் இல்லையா?’’ என்றார் மௌலி. பின்னணி ஸ்கீரினை மாற்றினார் சக்கரை. க்ளிக் செய்ய விரல் அருகே சென்றது. அழுத்தினார்! அழுத்தினார்!. ஆனால் க்ளிக் வேலை செய்யவில்லை.

எப்போது கடைசியாக போட்டோ எடுத்தோம் என யோசித்தார். ஆச்சு ஒரு வாரம். கேமரா பேட்டரியை கழற்றி மீண்டும் சரி செய்தார். தரையை நோக்கி க்ளிக் செய்தார் வேலை செய்தது. மீண்டும் மௌலியை போக்கஸ் செய்தார்.

“சக்கரை அண்ணே, மேக்கப் சரியா இருக்கா?’’

“மௌலி சார், எல்லாம் சரியா இருக்கு’’

“சக்கரை அண்ணே, சீக்கிரம் அண்ணே, பொந்தில் சாப்பாடு எல்லாம் கெட்டுப்போகப்போது’’

க்ளிக் செய்ய விரல் அருகே சென்றது. க்ளிக் என்ற சத்தம் வந்தபோது டமார் என்று ஒரு சத்தமும் வந்து. அறை கும்மிருட்டு ஆனது. கடை வாசலில் ஒரு குரல்

“சக்கரை, டிரான்ஸ்பார்மர் வெடிச்சிடுச்சு, மூனு நாளைக்கு மின்சாரம் வராதாம்.’’ மௌலிக்கு இடி விழுந்தது போல இருந்தது. “அய்யகோ.’’ தலையைத் தொங்கப்போட்டு கடையை விட்டு வெளியே சென்றார்.

“மௌலி சார், மௌலி சார்...’’

சக்கரையும் கடையை மூடிவிட்டு ஊருக்கு கிளம்பினார்.

இரண்டு வாரம் கழித்து மீண்டும் ஒளிப்படம் எடுக்கலாம் என்று வந்த மௌலிக்கு அதிர்ச்சி. சக்கரைப்பாண்டி ஒளிப்பட நிலையத்திற்கு மேலே பிரம்மாண்டமாக ஒரு ஒளிப்படம். அதில் இருந்தது மௌலியே தான். மின்சாரம் துண்டிக்க இருந்த ஒரு நொடிக்கு முன்னாடியே போட்டோ விழுந்து இருந்தது.

ஒரு வாரம் கழித்து வந்த சக்கரைக்கே அப்போது தான் தெரிந்தது. அட்டகாசமாக இருந்ததால் பெரிய படமாக போட்டுவிட்டார். பேனராக கடைக்கு வெளியே வைத்தார். அதனைப் பார்த்த மக்கள், அட சக்கரை ஓர் எலியையே இப்படி அழகாக எடுக்கிறார்.

நம்மை இன்னும் அழகாக எடுப்பார், என படம் எடுக்க கூட்டம் அலைமோதியது. வரிசையில் மக்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். சந்தின் வழியாக உள்ளே சென்று மேஜை மீது ஏறி,

“சக்கரை அண்ணே...’’ குரலைக் கேட்டதும் சக்கரைப்பாண்டிக்கு சந்தோஷம் பொங்கியது.

“மௌலி சார்...’’ என்று கைகூப்பி வணங்கினார்.

-விழியன்


Share