நன்றி சொல்லப் பழகுவாய்
Print

உன்னால் முடியும் செயலை
நீயே செய்தல் நனிநன்று;

உதவி நாடின் பிறரிடத்தில்
உருப்படி யாய்அது நடவாதே!

உதவி கேட்டு வருவோர்க்கு
உழைப்பை நல்கத் தவறாதே;

சேவை செய்யும் போதினிலே
சேர்த்த பொருளை இழக்காதே!

அளவில் சிறிதே ஆனாலும்
அடைந்த உதவி பெரிதாகும்;

மனதால் அவர்க்கு நன்றியினை
வழங்க நீயும் தவறாதே!

உன்னால் முடியும் உதவியினை
உண்மை யாகச் செய்திடுவாய்;

உதட்ட ளவில் செய்வதாய்
உறுதி எதுவும் மொழியாதே!

சிரித்த முகமே பொலிவாகும்;
சிறந்த நட்பைப் பெறலாகும்;

அறிந்த பேர்களை இழக்காமல்
அணைத்துப் போதல் சுகமாகும்!

Share