Home 2017 ஜூலை பிஞ்சுகள் பின்பற்ற வேண்டியவை!
செவ்வாய், 24 நவம்பர் 2020
பிஞ்சுகள் பின்பற்ற வேண்டியவை!
Print E-mail

இன்றைய உலகில் குறிப்பாக இந்தியாவில், பிள்ளைக்கு மூன்று வயதானால், அதற்குச் சாப்பிடத் தெரிகிறதோ இல்லையோ, கழிவறை சென்றபின் தன்னை சுத்தம் செய்துகொள்ளத் தெரிகிறதோ இல்லையோ, நர்சரி பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள்.

சேர்க்கப்பட்டது முதல் படிப்பு... படிப்பு.. படிப்பு! இதைத் தவிர வேறு எதையும் பிள்ளைக்கு தெரியச் சொல்வது இல்லை. அதனால் பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, பிஞ்சுகள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில செய்திகளை இங்கே கூற விரும்புகிறோம்.

தண்ணீர் குடிப்பது: உடலின் நலம் உணவால் தீர்மானிக்கப்படுவதுபோல, நீராலும் அமைகிறது. ஒரு செடிக்கு தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் அது வாடுகிறது, தொடர்ந்து தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் காய்ந்து பட்டுப்போகும்.

அப்படித்தான் நம் உடம்பும். உடல் நலத்தோடு இருக்க, ஏன் உயிரோடு இருக்க நீர் அவசியம். காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கோப்பை (Tumbler) நீரை வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

பின் காலை உணவு உண்டபின் ½ கோப்பை நீர் பருக வேண்டும். பின் அரைமணி நேரம் கழித்து  ½ கோப்பை நீர் பருக வேண்டும். அதன் பின் ஒரு மணிக்கு ஒருமுறை ஒரு கோப்பை நீர் பருக வேண்டும். பகல் உணவுக்குப் பின் இதேபோல்.

இரவு படுக்கப் போகும்முன் ஒரு கோப்பை நீர் பருக வேண்டும். ஆக பிஞ்சுகள் ஒரு நாளைக்கு 2 லிட்டர் நீர் குடிக்க வேண்டும்.

சிறுநீர் கழித்தல்: காலையில் மலம் கழிக்கும்போது சிறுநீர் வெளியேறிவிடும். அதன்பின் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை இரவு படுக்கப் போகும்முன் சிறுநீர் கழிக்க வேண்டும். 4 மணி நேரத்திற்கு மேல் சிறு நீரை அடக்கி வைப்பது உடல் நலத்திற்குக் கேடு.

காலை மலம் கழிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவுக்கு முன் மலம் கழிக்க வேண்டும். காலையில் கழிப்பது கட்டாயம். மலம் கழிந்தவுடன் கையை சோப்பால் கழுவ வேண்டும்.

உணவு: அரிசி உணவை அதிகம் எடுத்துக் கொள்ளும் நம்முடைய உணவு முறைக்கேற்ப, காலை 7½ முதல் 8 மணிக்குள் காலை உணவு நிறைய சாப்பிட வேண்டும். மதியம் 12 முதல் 1 மணிக்குள் உணவு உண்ண வேண்டும். இரவு 7½ முதல் 8 மணிக்குள் குறைவாக உண்ண வேண்டும். இரவு உணவு உண்ட பின் 2 மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும்.

உறக்கம்: இரவு 10 மணி முதல் காலை 5½ மணிவரை கட்டாயம் உறங்க வேண்டும். இரவு அதிகநேரம் கண் விழிப்பதும், காலை 5½ மணிக்கு முன் விழித்துப் படிப்பதும் உடல் நலத்திற்குக் கேடு.

உறங்கும்போது தூய்மையான படுக்கையில் காற்றோட்டமான அறையில் வெளிச்சமில்லாமல் இருட்டில் உறங்க வேண்டும்.

தலையணை ¼ அடி உயரத்திற்கு இருந்தால் போதும். அதிக உயரம் கழுத்து வலியை உருவாக்கும். இலவம்பஞ்சு தலையணையில், மெத்தையில் உறங்க வேண்டும்.

கடும் வெய்யிலில் செல்லாதீர்: கோடையில் கடும் வெய்யிலில் செல்லும்போது “சன் ஸ்ட்ரோக்’’ ஏற்பட்டு உயிரிழக்கவும் நேரிடும். எனவே, கடும் வெய்யலில் விளையாடுவதோ, வெளியில் செல்வதோ கூடாது. கட்டாயம் செல்ல நேர்ந்தால் தலைக்கு தொப்பியணிந்தோ அல்லது குடை நிழலிலோ செல்லவும்.

நகம் வெட்டுதல்: வாரம் ஒரு முறையாவது நக வெட்டியால் நகம் வெட்ட வேண்டும். நகத்தில் அழுக்கு சேர்ந்தால் அது நோய் வரக் காரணமாகும்.

உள்ளாடை: பனியன், ஜட்டி உள்ளாடைகளை அன்றாடம் துவைத்து அணிய வேண்டும். 6 மாதத்திற்குமேல் உள்ளாடையை புதிதாக மாற்ற வேண்டும் கிழியாமல் இருந்தாலும்.

பல் துலக்குதல்: காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்னும் பல் துலக்க வேண்டும். மென்மையான பல் துலக்கியால் (Tooth brush),  பல்லில் மேலும் கீழும் நகர்த்தி துடைக்க வேண்டும். நீண்ட நேரம் தேய்த்தால் பல் எனாமல் தேய்ந்து பல் கூச்சம் ஏற்படும். செங்கல் பொடி, சாம்பல் போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது. ஆலம் விழுது, கருவேல், வேம்பு குச்சியால் விளக்குவது நல்லது. அதிகக் குளிர்ச்சியான அல்லது அதிக சூடான பொருள் பல்லில் படாமல் பாதுகாக்க வேண்டும்.

தலைக்கு எண்ணெய்: குளிப்பதற்கு லு மணிக்கு முன் தலைக்கு எண்ணை தடவி குளிக்க வேண்டும். குளித்து துவட்டிய பின் எண்ணெய் தடவ வேண்டாம். அது அழுக்கு சேர காரணமாகிறது.

விளையாடுதல்: மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஓடியாடி விளையாட வேண்டும்.

விலக்க வேண்டியவை: மைதாவால் செய்த பொருட்கள், பரோட்டா, அய்ஸ்கிரீம், குளிர்பானங்கள், போதைப் பொருட்கள்.

தெருவில் திறந்தபடி விற்கும் எந்த உணவுப் பொருளையும் சாப்பிடக் கூடாது.

கீரை, பழம், இளநீர், தர்பூசணி, வெள்ளரி தவறாது  நாள்தோறும் சாப்பிடுங்கள்.

வெந்தயம்: இரவு நீரில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள். இது பிற்காலத்தில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் வராமல் தடுக்கும்.

கண்: அதிக வெளிச்சமுள்ள தொலைக்காட்சி, கணினி, செல் போன்றவற்றை அதிக நேரம் பார்க்காதீர்கள். அவசியத்தோடு பாருங்கள். மங்கலான ஒளியிலும், அதிக வெளிச்சத்திலும் படிக்க வேண்டாம்.

காது: காதில் கண்டதை விட்டு சுத்தம் செய்யக் கூடாது. பஞ்சு பொருத்தப்பட்ட Budsகொண்டு, காதில் அதிகம் நுழைக்காமல் முன் பகுதியில் சுத்தம் செய்தால் போதும்.

செருப்பு: காலில் செருப்பு அணியாமல் வெளியில் செல்லக் கூடாது. வெளியில் உள்ள அசுத்தங்கள் காலின் வழியே கை, வாய் என்று பரவி. நோய் வரும்.

கழிவறைக்குள் கட்டாயம் செருப்பு அணிந்து செல்லுங்கள்.

எச்சில் துப்பக் கூடாது: கண்ட இடத்தில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் கூடாது. அதற்கென உரிய இடத்தில் வெளியேற்ற வேண்டும்.

பள்ளியில் ஆசிரியர்களோ, வீட்டில் பெற்றோரோ சொல்லாமல் போனாலும், இவற்றைப் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்தி தவறாது பின்பற்றி வாழ்கை நலமாக்கிக் கொள்ளுங்கள்!

- சிகரம்

Share