Home 2017 ஆகஸ்ட் நடுவர் எலி எங்கே?
வியாழன், 02 பிப்ரவரி 2023
நடுவர் எலி எங்கே?
Print E-mail

 

நமக்கெல்லாம் கண்கட்டி வித்தை காண்பித்து விட்டு வீட்டைச் சுற்றிச்சுற்றி ஓடிவரும் சுண்டெலிகளைப் பார்த்திருப்பீர்கள். செல்லமான தத்துப் பிள்ளைகளைப் போல வீட்டில் வளரும் வெள்ளெலிகளைப் பார்த்ததுண்டா? இல்லையா? சீக்கிரமே கிளம்பி வாருங்கள். மண்ணூர் கிராமத்துக்குப் புறப்பட்டுப் போவோம்.

அதோ! கிராமத்து எல்லை. அருகில் ஒரு வயதான ஆலமரம் நூற்றுக்கணக்கான விழுதுகள் விட்டு நின்றிருக்கிறதே. அதன் பின்புறம் உருவில் சிறிய ஒரு மண் குடிசை தெரிகிறதா? அது, முத்தன் என்ற குயவருக்குச் சொந்தமான வீடு. குயவர் என்றால் மண்பாண்டப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்பவர் என்று பொருள்.

களிமண் கலவையை, சுழலும் சக்கரத்தில் பிசைந்து வைத்து உள்ளங்கையால் உருட்டிச் செய்த மண்பானை பூந்தொட்டி, ஜாடி, மண்தட்டு என திண்ணையில் அடுக்கி வைத்திருப்பதைப் பாருங்களேன். அவை தவிர, அலங்கார பொம்மை, விளையாட்டுப் பொம்மை மற்றும் சின்னச் சின்னப் பறவை பொம்மைகள் எனப் பலவித மட்பொருட்கள் தயாரித்து வைத்திருக்கிறார். அவைகளுக்கு, அழகழகாய் சாயம் பூசி சரியான உயிர் கொடுத்திருக்கிறார்.

அடிக்கடி அவர் சாக்குப்பைகள் நிறைய மண்-பாண்டப் பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்வார். முறையாக அவைகளை அடுக்கிவைத்து விற்பனை செய்வார். வியாபாரத்தில் கிடைக்கிற பணத்தை வைத்து நிம்மதியாக வாழ்கிறார்.

முத்தன், தனது குடிசையில் வெள்ளெலிகள் வளர்க்கிறார். வேளாவேளை, எலிகள் வயிற்றுப்  பசியாற வேர்க்கடலை, விதைகள் மற்றும் பசும்பால் போன்றவை தருவார். அதனால், அந்த எலிகள் பாசத்தோடு அவருடன் பழகிவந்தன. அவரின் வளர்ப்புப் பிள்ளைகளைப் போலவே அவை வாழ்ந்தன.

குடிசைக்கு இடப்பக்கம், எலிகள் விளையாட ஒரு மைதானம் உள்ளது. கட்டமாக பாத்தி கட்டி, அதில் ஆற்று மணலைப் பரப்பி வைத்திருந்தார் முத்தன்.

அது கால்பந்தாட்ட மைதானம். அதன் எதிரெதிர் கரைகளில் இரண்டு களிமண் கோல்போஸ்ட்கள் உள்ளன. சிறிய களிமண் உருண்டைதான் கால்பந்து. வெள்ளெலிகள் அதை, மூக்கால் நெம்பி நெம்பி விளையாடி கோல் அடிப்பதுண்டு. கோலடித்த எலி, முன்னங்கால்களை தூக்கியெழுந்து நின்று உற்சாகத்தில் மார்பை தட்டிக் கொள்வது வழக்கம்.

அங்கொரு களிமண் வழுக்குமரம் உள்ளது. அதில் கால்பந்தாட்ட நடுவர் ஏறி உட்காருவார். நடுவரும் ஒரு வெள்ளெலியே. ஆனால், செல்லப் பிராணிகளிடமிருந்த ஒற்றுமையை சீர்குலைக்க நினைத்தது ஒரு பொறாமை பிடித்த பருந்து.

ஒரு நாள் சாயங்காலம், எலிகள் கால்பந்து விளையாடத் தயாராயின. அவைகளுக்குள், இரு அணிகள் சரியாக பிரிக்கப்பட்டன. வழக்கமாக நடுவர் பொறுப்பேற்கும் ஒரு வெள்ளெலி, வழுக்கு மரமேறி உட்கார்ந்தது. அது, ‘கீச்.. கீச்.. கீச்’ சென மூணுமுறை விசிலடித்ததும் கால்பந்தாட்டம் தொடங்கியது.

சற்று நேரம் கழித்து, வானத்தில் வட்டமிட்டுப் பறந்த பருந்தை, விளையாட்டு ஆர்வத்தில் எந்தவொரு எலியும் கவனிக்கவில்லை. பருந்து, ஒரு குட்டி விமானம்போலத் தெரிந்தது.

வழுக்கு மரத்தில் உட்கார்ந்திருந்த நடுவரைக் குறிவைத்தது. கீழே இறங்கிப் பறந்து வந்த பருந்து, நடுவர் எலியைக் கவ்விப் பிடிப்பதற்குள் எலி தப்பித்தது. வழுக்கு மரத்தில் சறுக்கி ஓடிப்போனது. பருந்துக்குப் பயந்து, மற்ற எலிகளும் கலைந்து ஓடின. ஏமாந்த பருந்து, இருப்பிடத்திற்குத் திரும்பியது.

நடுவர் எலியின் முதுகில், கழுகின் கால்விரல் நகம் பதித்த காயங்கள் தெரிந்தன. காய்ச்சல் வந்தது. அழுதபடியே அது, பொந்துள் நுழைந்து படுத்துக்கொண்டது.

அதிர்ச்சியில் நடுங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த மற்றொரு எலி, முத்தனிடம் போய் நடந்த கதையைச் சொன்னது. அவர், நடுவர் எலியை அழைத்து சமாதானப்படுத்தினார்.

“சரிடா செல்லம். அந்தப் பருந்துக்கொரு முடிவு கட்டுவோம்” என்ற குயவர், யோசிக்க ஆரம்பித்தார். நீண்டநேர சிந்தனைக்குப் பிறகு அவர் ஒரு திட்டம் தீட்டினார்.

மறுநாள், எலிகளை அழைத்து கால்பந்தாட்டம் விளையாடச் சொன்னார். அன்று, நடுவர் எலிக்கு ஒய்வு தரப்பட்டது. ஆனால், வேறொரு வெள்ளெலியை நடுவராக அமர்த்தினார். அது, வழுக்கு மரத்தில் உட்கார்ந்திருந்தது.

அதை, மற்ற எலிகள் பார்த்து வியந்தன. வழுக்கு மரத்தில் புதிதாக உட்கார்ந்திருந்த நடுவரை, பிற எலிகள் வணக்கம் சொல்லி வரவேற்றன. அன்றைய ஆட்டம் தொடங்கியது.

மறுபடியும் அந்தப் பருந்து, வானத்தில் பறந்தபடி வெள்ளெலிகள் விளையாடுவதை நோட்டம் விட்டது. இந்த முறையும் நடுவர் எலியைத்தான் குறிவைத்தது. ஆகாயத்திலிருந்து வேகமாக கீழிறங்கி, கண்ணை மூடித் திறப்பதற்குள் நடுவர் எலியை கவ்விக்கொண்டு பறந்தது.

மற்ற எலிகள் பதறி ஓடின. முத்தனிடம் போய் அழுது புலம்பின. எலிகளுக்கு ஆறுதல் சொன்ன முத்தன் சிரித்தார்.

“குழந்தைங்களே! நீங்க யாரும் இனி பயப்பட வேண்டாம். இனி அந்தப் பருந்து, நீங்க இருக்கிற இடத்துப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காது” என்றார்.

ஆமாம்! அது களிமண்ணால் செய்த எலி. அதற்கு வெள்ளை நிற சாயம் பூசி, விளையாட்டு நடுவராக வழுக்கு மரத்தில் ஏற்றி வைத்திருந்தார் முத்தன்.

களிமண் எலியின் கதையைக் கேட்ட வெள்ளெலிகள் கைதட்டிச் சிரித்தன. முத்தனைச் சுற்றி வந்து நன்றி சொல்லிக் கொண்டாடின. ஏமாந்து போன பருந்து, எலிகள் என்றால் இனி களிமண் என நினைத்துக்கொள்ளும்தானே!

Share