Home 2017 ஆகஸ்ட் இதற்குத் தானா?
வியாழன், 02 பிப்ரவரி 2023
இதற்குத் தானா?
Print E-mail

அரசி மாளவிகா தேவியாருக்குக் கோபம் கோபமாக வந்தது மாமன்னரின்மேல். எப்போது பார்த்தாலும் பேசு பேசு என்றால் எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது? என்னதான் பேசுவது? “ஏன் அரசி என் மீது இத்தனைக் கோபம்? நான் என்ன உன்னை இலக்கியமா பேசச் சொன்னேன்? இலக்கணமா கூறச் சொன்னேன்? கவிதையா கேட்டேன்? சாதாரணமாகப் பேசு என்றுதானே சொன்னேன்! பேச உனக்கு என்ன தடை?” சமாதானமாகப் பார்த்தார் மாமன்னர்.

“போதுமே! எத்தனை நேரந்தான் பேசுவது? வாயே வலிக்கிறது பேசிப் பேசி. நான் தெரியாமல்தான் கேட்கிறேன். பேசு பேசு என்று பதினான்கு மணி நேரமும் இதையே பேசிக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு மட்டும் வாயே வலிக்கவில்லையா? சொல்லுங்கள்” என்று கேட்ட அரசியைப் பார்த்து மாமன்னர் இடி இடி என்று சிரித்தார். “ஒரு நாளைக்குத் தவறாமல் நான் பத்து மணி நேரம் தூங்குவதை இப்படிச் சந்தடி சாக்கிலே கூறாவிட்டால் உனக்குத் தூக்கமே வராதே” என்றவர். “ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் வாய் வலிக்கும் என்று பார்த்தால் முடியுமா?” என்றார். அரசிக்கு மாமன்னர் கூறியது சிரிப்பாக இருந்தது. அப்படியென்ன இவர் வெட்டி முறிக்கத் தீர்மானித்து விட்டார் என்று.
அதை அப்படியே புரிந்துகொண்ட மாமன்னர், “பரவாயில்லை அரசி! நீ என்னைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். எனக்குக் கவலையே இல்லை. ஆனாலும் நீ பேச வேண்டும். நான் அதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பேசு பேசு” என்றார். அரசி உச்சிக் குளிர்ந்து போனாள்.

“என் பேச்சு உங்களுக்கு அத்தனைத் தேனா? நான் பேசுவதை எல்லாம் காது கொடுத்துக் கேட்பீர்களா?” என்றாள் அரசி. “இதென்ன கேள்வி? கேட்கத்தானே கேட்கிறேன். பேசு அரசி பேசு பேசு” என்று அவள் பேச அவர் சாமரம் வீசினார்.

“மாமன்னர் எனக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை. அந்தக் கீனாநாட்டுக் கித்தினா அரசி எந்தப் புடவை கட்டினாலும் அள்ளிக்கொண்டு போகிறது அவள் அழகு. அவளைப் போல நானும் வேளைக்கொன்று பொழுதுக்கொன்று கட்ட வேண்டும். ஜம் ஜம் நாட்டு ஜமுனா ராணியைப் போல நானும் நவரத்தினங்களால் இழைத்த நகைகளை அடிக்கடி மாற்றி மாற்றிப் போட்டு அழகு பார்க்க வேண்டும்” என்று அரசி தன் ஆசைகளை எல்லாம் அடுக்கிக்கொண்டே போனாள்.

மாமன்னர் தலையைத் தலையை ஆட்டி ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டிருந்தார். அரசிக்குக் கோபத்தால் முகம் சிவந்தது. வர்தா புயலைப் போலச் சீறினாள். விர்ரென்று எழுந்து விருட்டென்று அந்தப்புரம் அடைந்தாள். அப்போது அமைச்சர் அங்கு வர அவரை உட்கார வைத்துப் பேசச் சொன்னார் அரசர். அமைச்சருக்கு எதுவும் புரியவில்லை. அரசருக்குப் பொழுது போகவில்லையென்றால் ரம்பம் போட நான்தான் கிடைத்தேனா என்று தனக்குள் முணுமுணுத்தார். அப்போது பார்த்து தளபதி வந்தார். அவரையும் உட்கார வைத்துப் “பேசுங்கள்” என்றார் மன்னர். மகிழ்ச்சியால் சரிந்துபோனார் தளபதி. நான் பேச வந்ததை எப்படியோ புரிந்துகொண்டு பேசு பேசு என்று தென்றலாய் வீசுகிறாரே என்று மனதிற்குள் துள்ளித் துள்ளிக் குதித்தார்.

“ஆமாம் அரசே! தங்களிடம் பேசத்தான் வந்தேன். நீங்களே முன்வந்து என்னைப் பேசச் சொல்லி உற்சாகப்படுத்துவது எனக்கு மிகவும் உத்வேகத்தை அளிக்கின்றது மன்னா! நமது குதிரைப்படையில் போதுமான குதிரைகள் இல்லை. யானைப் படையிலும் பற்றாக்குறை. காலாட் படையிலும் இழுபறி. நிலைமை இப்படியே போனால் திடீரென்று போர் என்று மூண்டுவிட்டால் நிலைமை மோசமாகி விடும். தாங்கள் ஒப்புதல் அளித்தால் அனைத்தையும் விரிவாக்கம் செய்து விடுகிறேன். அப்படியே எல்லாவற்றையும் நிர்வாகம் செய்ய என் அண்ணன் மகன், அக்கா மகன், சித்தப்பா மகன் என்று பலர் மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு சும்மாத்தான் கிடக்கிறார்கள். அவர்களைப் பணியமர்த்திக் கொள்கிறேன். இப்போது மற்ற பல காரியங்களுக்காக பொருளாதாரம் தேவைப்படுகிறது. தாங்கள் உத்தரவிட்டால் கஜானாவில் இருந்து பெற்றுக்கொள்வேன். எவ்வளவு வாங்கிக் கொள்ளட்டும்?” என்று தளபதி கேட்க மன்னர் “மூவாயிரத்து மூன்று.. மூவாயிரத்து நான்கு” என்று சொல்லிக்கொண்டே போக தளபதியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் “போதும் போதும் இவ்வளவு போதும்” என்று விடைபெற்றார்.

மாமன்னர் மீண்டும் அமைச்சரைப் பார்த்தார். அமைச்சரோ, தளபதியார் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன என்று கேட்பதற்கு முன்பே இத்தனைக் கேட்டுவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டானே அந்தச் சாமர்த்தியம் எனக்கேன் இல்லை என்று தன்னையே இடித்துக்கொண்டார். மாமன்னர் மீண்டும் பேசுங்கள் என்று கைஜாடை  செய்தார்.

“நன்றி மாமன்னா! நன்றி! எனது பதினோறாவது மாப்பிள்ளைக்குச் சரியான வேலை இல்லை. பத்தாவது மகளுக்கு இது தலைப் பிரசவம். எனது பன்னிரெண்டாவது தர்மப் பத்தினிக்கு எப்போது பார்த்தாலும் தலைப்பாரம். எட்டாவது மருமகளுக்கு வளைகாப்பு. செலவுக்கு மேல் செலவு. ஊதியம் போதவில்லை. உயர்த்திக் கொடுத்தால் தேவலாம். உடனடிக் கைச்செலவுக்குத் தாங்கள் உத்தரவிட்டால் கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்கிறேன். எவ்வளவு வாங்கிக் கொள்ளட்டும்?” என்று கேட்டார். மாமன்னர் “மூவாயிரத்து நூறு... மூவாயிரத்து இருநூறு” என்று சொல்ல, “போதும் மாமன்னா போதும்” என்று அமைச்சர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

அன்று முழுவதும் மாமன்னர் பார்ப்பவர்களிடம் எல்லாம் பேசச் சொன்னார். பக்கத்து நாட்டிலிருந்து ஒற்றன் ஒருவன் ஓலையுடன் வந்தான். அவனையும் உட்கார வைத்துப் “பேசு” என்றார். அவனோ கெக்கே பிக்கே என்று உளறிக் கொட்டினான் பயத்தினால். மன்னரோ அவனைப் பேசு பேசு என்று உற்சாகப்படுத்தினார்.  அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. மன்னர் சொன்னார். “ஒற்றரே! வீணாக பயப்பட வேண்டாம். மனதில் பட்டதைப் பேசலாம். என்னைப் பாராட்ட வார்த்தைகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்டபடி உன்னால் முடிந்த மட்டும் திட்டவாவது செய்” என்றார். இத்தனைத் தூரம் மன்னர் இறங்கிவர தான் மட்டும் எப்படி ஏறாமல் இருப்பது? என்று நினைத்து ஒவ்வொரு வார்த்தையாக ஏறினான் அந்த ஒற்றணும்.

“சபாஷ்! சபாஷ் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பது... ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தொன்று” என்று மகாராஜாவும் ஏறிக்கொண்டே போனார். ஒற்றனுக்கு ஒன்றும் புரியவில்லை. மகாராஜாவுக்கு ஏதோ மரைகிரை கழன்று போயிருக்க வேண்டும் என்று சட்டென்று எழுந்து ஒரே ஓட்டமாக ஓடினான். அடுத்த ஒரு வாரம் முழுக்க இதே கதைதான். மக்களை எல்லாம் அழைத்து ஒவ்வொருவராகப் பேசச் சொன்னார். அவர்கள் அனைவரும் ஒரு முடிவான முடிவுக்கு வந்துவிட்டனர். சற்றேறக்குறைய அந்த ஒற்றனின் முடிவையே அது ஒத்திருந்தது. அதேநேரத்தில் மகாராஜாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். மறுநாள் அரசவை கூடியது. ஒரு வாரகாலத்திற்கும் மேலாக எல்லோரையும் பேச வைத்த மாமன்னர் அன்று யாரையும் பேசவிடாமல் தான்மட்டுமே மடைதிறந்த வெள்ளம்போல் பேசினார்.

மன்னர் எப்போதுமே ஒரு தகவல் பிரியர். நேற்று ஒரு தகவல். இன்று ஒரு தகவல். நாளை ஒரு தகவல் என்று பலப்பலப் புதிய தகவல்களைக் கேட்டறிவார். அந்த விதத்தில் சில நாள்களுக்கு முன்பாக ஒரு தகவல் அவருடைய காதிலே வந்து விழுந்தது. தகவல் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது கிடையாது. விசாரிக்க வேண்டியதை விசாரிப்பார். ஆய்வு செய்ய வேண்டியதை ஆய்வு செய்வார். ஆராயாமல் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவே மாட்டார். அந்தப் புதிய தகவல் இதுதான்: “ஒரு மனிதன் ஒரு நாளைக்குத் தோராயமாக மூவாயிரம் சொற்கள் பேசுவதாகவும் ஒரு நாளைக்கு மூன்றே முக்கால் மணி நேரத்தைப் பேசுவதற்காகச் செலவிடுவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன” _ இதனைச் சோதித்துப் பார்க்கவே அரசி _ அமைச்சர் _ தளபதி _ ஒற்றன் மற்றும் நாட்டு மக்கள் இவர்களையெல்லாம் பேசவைத்து எண்ணிப் பார்த்தது.

மாமன்னர் திடீரென்று ஒரு அதிரடியான முடிவை அறிவித்தார். “என் இனிய மக்களே! சாதாரணமாகவே ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூவாயிரம் சொற்கள் பேசுகிறான் என்றால், தற்பெருமை பேசுவதிலும் சுயதம்பட்டம் அடிப்பதிலும் புரளி கிளப்புவதிலும் அவன் இன்னும் கூடுதலாகவே பேசுவான் இல்லையா! மூன்றே முக்கால் மணி நேரம் என்பது இன்னும் கூடலாம் இல்லையா! நேரம் பொன் போன்றது. பேச்சைக் குறைத்து உழைப்பைப் பெருக்க வேண்டும். நாட்டை உயர்த்த வேண்டும். இது அரச கட்டளை.

“விளையாட்டை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்வது வேறு; எல்லோரும் அவரவர் தொழிலையே விளையாட்டாகக் கருதி விரும்பி உழைக்க வேண்டும்” என்றார்.

அமைச்சரும், தளபதியும் ஆடிப் போனார்கள். மாமன்னர் தங்களிடம் சொன்னதெல்லாம் வெறும் சொற்களின் எண்ணிக்கைதானா வராகன்(பணம்) இல்லையா என்று!

Share