Home 2017 செப்டம்பர் பாட்டி சுட்ட வடையும் ஏமாந்த நரியும்
சனி, 19 செப்டம்பர் 2020
பாட்டி சுட்ட வடையும் ஏமாந்த நரியும்
Print E-mail- தம்பி அழ.பிரபு

நரிக்கூட்டத் தலைவன் நரி, தமது பாரம்பரியத்தைக் கெடுத்த நரியை வசைபாடிக்-கொண்டு இருந்தது. தங்கள் உணவுக் கலாச்சாரத்தையே மாற்றும்படியான செய்கையை செய்த நரியினை அதன் அம்மா நரி, அப்பா நரி, தம்பி நரி, பக்கத்து வீட்டு நரி, எதிர்த்த வீட்டு நரி, ஒத்தக்கால் நரி என எல்லோரும் திட்டித் தீர்த்தனர்.

எல்லாம் அந்த வடையால் வந்தது.

“பசிக்கிற வயித்துக்கு எதைத் தின்னா என்ன? மனசுக்குப் பிடிச்சத சாப்பிடக்கூடாதா? யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுருக்கலாம், அந்த மந்திரி நரிப்பயல்தான் வாய்க்குள் வடையை திணிக்கிற கணம் கையும் களவுமாகப் பிடித்து தலைவரிடம் மாட்டி கொடுத்துவிட்டான்”  என நினைத்து அழுதது நரி.

“பாவம் அந்த காக்கையாவது நிம்மதியா சாப்பிட்டுருக்கும். அதையும் சாப்பிட விடாம பாட்டு பாடு, குத்தாட்டம் ஆடுன்னு ஏமாத்தி கஷ்டபட்டு வடைய லவட்டிகிட்டு வந்தா இவங்க ரொம்பதான் நாட்டாமை பண்றாங்க” எனப் புலம்பியது நரி.

“சரி! நாம் போய் அந்த காக்காகிட்ட மன்னிப்பு கேட்போம்” னு முடிவு பண்ணி காக்கையைப் போய் பாத்துச்சு நரி. சோகமா இருந்த காக்காவிடம் போய் மன்னிப்புக் கேட்ட நரிகிட்ட காக்கையும் வடையை - - தான் பாட்டியிடம் இருந்த ஒத்த வடையை திருடுனதா சொல்லுச்சு.

இரண்டு பேரும் சேர்ந்து பாட்டியிடம் மன்னிப்புக் கேட்க பாட்டி வீட்டிற்கு போனார்கள்..

பாட்டியின் வீட்டருகே சென்றபோது பாட்டி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தது கேட்டது.

பாட்டி ஒரு வடையினை எடுத்து எலி பிடிக்கும் பொறிக்குள் புகுத்திக் கொண்டிருந்தாள்.

“ஏன் பாட்டி இன்னிக்கு வேற வடையை வைக்கிற’’ எனக் கேட்டான் பாட்டியின் பேரன்.

“காலையிலே எலிப்பொறிக்குள் வைக்க வச்சிருந்த பருப்பு வடையை ஒரு காக்கா தூக்கிகிட்டுப் போயிருச்சுடா பேரா.. அதான் உளுந்த வடையை பொறிக்குள்ளாற வைக்கிறேன்” என்று பாட்டி தன் பேரனிடம் புலம்பியது கேட்டது.

“ஆகா! எலியைப் பிடிக்க வச்சிருந்த விஷ வடையைதானே நாம் திருடினோம், அதைப் போயி நரி நீயும் அபகரிச்சு தின்னப்போனியே!” னு வருத்தப்பட்டது காக்கை.

“நல்ல வேளை மந்திரி நரி மட்டும் வரலைன்னா? நான் அந்த வடையை தின்னு செத்துப் போயிருப்பேன்” என காக்காவிடம் அழுதது நரி.

“அது சரி அந்த வடை எங்கே?” என கேட்டது காக்கை.

“அதை அப்பவே நான் எறும்பு புத்துக்குள்ளே தூக்கிப் போட்டுட்டேனே” என்றது நரி.

“வா! நாம் போய் எறும்புகளை காப்பாத்துவோம்” என்று காக்கையும் நரியும் விரைந்தன எறும்பு புற்றை நோக்கி.

அங்கே எறும்புகள் தங்கள் புற்றை தண்ணீரையும் சோப்பையும் கொண்டு நன்றாக கழுவிக் கொண்டிருந்தன.

காக்கை மெதுவாகச் சென்று ஒரு எறும்பிடம் பேச்சு கொடுத்தது. “எறும்பண்ணே! என்ன விஷேசம்.? எல்லோரும் சேர்ந்து உங்க வீட்ட சுத்தப்படுத்திகிட்டு இருக்கீங்க..”

“எவனோ ஒரு களவாணிப்பயல் ஊசிப்போன வடையை எங்க வீட்டுக்குள்ள போட்டுட்டு போயிட்டான். அதை சாப்பிட்டு என் தாத்தா கட்டெறும்புக்கு வயித்தால போயிருச்சு. அதான் மிச்சமிருக்கிற வடையை தூக்கிகிட்டு போயி குப்பைத் தொட்டியில போட்டுட்டு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்துறோம்” என விளக்கம் சொன்னது எறும்பு.

நரி முகத்தை மறைத்துக்கொண்டு, வாயை உம்மென வைத்துக் கொண்டு காக்கையை முறைத்தது.

பிறகு இருவரும் தனித்தனியே தம் வீட்டுக்குச் சென்றனர்.

கதை சொல்லும் நீதிகள்

1.     அடுத்தவர் வீட்டு முன்னால் நம் உணவுப் பண்டங்களை போடக்கூடாது.

2.     எந்தப் பொருளையும் திருடக்கூடாது; ஏமாற்றி அபகரிக்கக் கூடாது; அதனால் நமக்குப் பயன் விளையாது.

3. ரயில் நிலையங்களில், பொது இடங்களில் கேட்பாரற்று இருக்கும் பொருள்களை எடுக்காதீர்கள், வெடிகுண்டாக இருக்கலாம் என்று அறிவிப்பு செய்யப்படுகிறதே... அதுவும் இப்படித்தான். <

Share