ஒளி இழந்த சூரியன்!
Print


- உமையவன்

கோடை விடுமுறை விட்டதிலிருந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த பொடுசுகளுக்கு ஒரே அமர்க்களம்தான்.

மதிய வெய்யில் வெளுத்து வாங்க அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தாள் சுகந்தி.

“இந்த வெய்யில்ல என்ன விளையாட்டு? வா வீட்டுக்குப் போகலாம்’’ என்றாள் சுகந்தியின் அம்மா.

“இப்பத்தான் ஸ்கூல் லீவு விட்டாங்க. நல்லா விளையாடலாம்னு பார்த்தா, இந்த வெய்யிலால என்னால விளையாடவே முடியலை’’ என வருத்தப்பட்டாள் சுகந்தி.

“கவலைப்படாதே சுகந்தி, நாளைக்கு நாம விளையாடலாம்’’ என்றாள் நிவேதா.

“எனக்கு இன்னைக்கே விளையாடணும். ஆமா! இந்த சூரியனோட ஒளியை நம்மால தடுக்க முடியாதா? அப்படித் தடுத்தா நாம நல்லா விளையாடலாமே’’ என்று முடித்தாள் சுகந்தி.

“சூரியனின் ஒளியையெல்லாம் தடுக்க முடியாது. இரவுலதான் அதன் ஒளி குறையும். அதுவரைக்கும் நம்மால ஒன்றும் பண்ண முடியாது’’ என்றான், கூட விளையாடிக் கொண்டிருந்த ரமேஷ்.

டக்குன்னு யோசிச்ச நிவேதா, “என்னால சூரியனின் ஒளியைத் தடுக்க முடியும். நா நினைச்சா சூரியனின் ஒளியை என்னால உறிஞ்ச முடியும்’’ என்றாள்.

“உன்னால அதெல்லாம் முடியாது. சும்மா கதை சொல்லாதே’’ என்றனர் மற்ற நண்பர்கள்.

“நா சும்மா ஒன்றும் சொல்லல. நாளைக்கு காலைல எல்லோரும் இதே இடத்துக்கு வாங்க. நான் சூரியனின் ஒளியை உறிஞ்சிக் காட்டுறேன்’’ என்று கூறிவிட்டு புறப்பட்டாள் நிவேதா.

அடுத்த நாள் காலையில் அனைவரும் அதே இடத்தில் ஒன்று கூடினர். நிவேதாவும் அங்கு வந்தாள்.

“என்ன சூரிய ஒளியை உறிஞ்சப் போறேன்னு சொன்னே, ஆனா இன்னமும் வெய்யில் அடிக்குதே’’ என்றான் ரமேஷ்.

“அதுக்குள்ள அவசரப்படாதீங்க’’ என்று கண்களை மூடி ஏதோ முணுமுணுக்க சில நொடிகள் மாத்திரம் சொல்லிட்டு, கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் இரண்டு நிமிடத்துல நான் சூரியனின் ஒளியை உறிஞ்சப் போறேன்’’ என்று கூறி வானத்தைப் பார்த்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் வானத்தையே உற்றுப் பார்த்தனர். உறிஞ்சுவது போல் வாயைக் குவித்தாள்.

நிவேதா சொன்னதைப் போன்று வானத்தில் இருள் சூழ ஆரம்பித்தது. சூரியன் கருப்பாகத் தெரிய ஆரம்பித்தது. அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். சூரியனையும், நிவேதாவையும் மாறி மாறி பார்த்தனர்.

“எப்படி.... நான் சொன்னமாதிரியே சூரியனின் ஒளியை உறிஞ்சி வெயிலை தடுத்துட்டேன் பார்த்தீங்களா?’’ எனப் பெருமிதத்தோடு கூறினாள் நிவேதா.

“ஆமா! நீ சொன்ன மாதிரியே செஞ்சுட்ட, உண்மை தெரியாம நாங்கதான் உன்னைத் தப்பா நினைச்சுட்டோம். பரவாயில்லை, திரும்ப சூரிய ஒளியை விட்டுடு. வெளிச்சம் வேணும்ல’’ என்று கேட்டுக்கொள்ள சிறிது நேரத்தில் மீண்டும் சூரிய ஒளி வந்தது.

நிவேதா திரும்ப, அவள் தோழி சுகந்தி மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

“என்ன சுகந்தி, நீ வீட்டுக்குப் போகலையா?’’ என்று கேட்டாள் நிவேதா.

“சூரியனின் ஒளியை எப்படி உறிஞ்சின. எங்கிட்ட மட்டும் உண்மையைச் சொல்லு’’ என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் சுகந்தி.

“சரி வா... பேசிக்கிட்டே வீட்டுக்குப் போகலாம்’’ என்று இருவரும் நடக்கத் தொடங்கினர்.

“இன்னைக்கு நான் சூரியனோட ஒளியை உறிஞ்சவும் இல்லை; தடுக்கவும் இல்லை’’ என்றாள் நிவேதா.

“அப்புறம்... எப்படி சூரியன் கருப்பாக மாறியது’’ என்று வியப்பு மேலிட முடித்தாள் சுகந்தி.

“உனக்கு விசயமே தெரியாதா? இன்னைக்கு சூரிய கிரகணம்’’.

“சூரிய கிரகணமா? அப்படீன்னா என்ன?’’ என்றாள் சுகந்தி.

“அது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல கோள்கள் வலம் வந்து கொண்டிருக்கும், அப்படி வரும்போது ஒன்றன் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடும். அந்நிகழ்வை கிரகணம்  மறைப்பு என்கிறோம்.’’

“கொஞ்சம் புரிகிறமாதிரி சொல்லு. நீ சொன்னது புரியற மாதிரி இருக்கு. ஆனா புரியலை’’ என்று முடித்தாள் சுகந்தி.

“சரி, புரியும்படியே விளக்கிச் சொல்றேன் கேட்டுக்கோ....’’ என்று தொண்டையைக் கணைத்துக் கொண்டு, “நமது சூரியக் குடும்பம் ஒரு மணல்துகள் போல பால்வெளி மண்டலத்தை 22.5 கோடி ஆண்டுகளில் ஒருமுறை சுற்றி வருகிறது. மேலும்,  புவி தன் துணைக் கோளான நிலவோடு கதிரவனையும், கதிரவன் தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், வால் மீன்கள் எனத் தனது படைசூழ பால்வெளி மண்டலத்தை நொடிக்கு சுமார் 250-_270 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது.’’

“இரு! இரு! எனக்கு தலை சுற்றுது’’ என்றாள் சுகந்தி.

“அதுக்குள்ளேயா... அப்படி சுற்றி வரும்போது புவி, கதிரவன், நிலா இதெல்லாம் எப்போதாவது ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. இப்படி இவை சந்திக்கும்போது ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இதைத்தான் கிரகணம் அல்லது மறைப்பு என்று சொல்லுவாங்க. சூரியகிரகணம், அமாவாசை நாளிலும், சந்திரகிரகணம் முழுநிலவு நாளிலும் உண்டாகும்’’ என்றாள் நிவேதா.

“இன்னைக்கு நடந்தது சூரியகிரகணம். சந்திரனின் நிழலால் சூரியன் மறைக்கப்பட்டது. அந்த வேலையில்தான் நான் சூரியனின் ஒளியை உறிஞ்சுவதாக விளையாட்டாகக் கூறினேன்’’ என்றாள் நிவேதா.

“ஓ! இதுதான் செய்தியா! இந்த விசயம் எனக்கு தெரியாமப் போச்சே; ஆமா அப்ப ஏதோ மந்திரத்தை சொன்னாயே...’’ என்றாள்.

“அதுவா? சும்மா ரைம்ஸ்ச சொன்னேன்’’ என்று சிரித்தபடியே கூறினாள் நிவேதா.

“அப்ப, நான் சந்திரனின் ஒளியை உறிஞ்சப் போறேன். என்ன... சந்திரகிரகணத்து வரைக்கும் காத்திருக்கணும்’’ என்றாள் சுகந்தி.

Share