தந்தை பெரியாரின் கதை - 7
Print

பெரியாரின் மன உறுதி

பெரியார் நிறைய பதவிகளில் இருந்தார். இதன் காரணமாக நிறைய நண்பர்கள் ஏற்பட்டனர். அவர்களில் பலர் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள்.

பெரியார் வீட்டுக்கு அரசாங்க அதிகாரிகள் வருவார்கள். அவர்களுக்கு விருந்து வைக்க வேண்டும். விருந்தில் மதுபானம் கொடுக்க வேண்டும். அதனால் பெரியார் வீட்டில் மதுபாட்டில்கள் இருக்கும்.

விருந்தின்போது பெரியார் தன் கையால் அதிகாரிகளுக்கு மது ஊற்றிக்கொடுப்பார். அவர்கள் நிறையக் குடிப்பார்கள். பெரியாரை குடிக்கும்படி வற்புறுத்துவார்கள். பெரியார் வேண்டாம் என்று மறுப்பார். பெரியாரை பலவந்தப்படுத்தி வாயில் ஊற்றுவார்கள். பெரியார் துப்பிவிடுவார்.

இரவு முழுவதும் விருந்தினர்களுடன் இருந்து விட்டு காலை ஆறு மணிக்கு வீடு திரும்புவார் பெரியார்.

பெரியாரும் மதுபானம் குடித்திருப்பார் என்று நாகம்மையாருக்குச் சந்தேகம் ஏற்படும். பெரியார் அருகில் சென்று ‘குடித்தீர்களா? இல்லையா? வாயை ஊதிக் காட்டுங்கள்’ என்று கேட்பார்.

பெரியார் குடிக்கவில்லை என்று கூறுவார்.

நாகம்மை நம்பமாட்டார்.

‘நம்பவில்லையென்றால் போ, வாயை மட்டும் ஊதிக் காட்ட முடியாது’ என்று பெரியார் பிகு செய்வார்.

நாகம்மை பலவந்தமாக பெரியாரின் வாயை முகர்ந்து பார்த்து திருப்தியடைவார்.

சூழ்நிலையை வெல்லும் மனஉறுதி கொண்டவராக நம் பெரியார் திகழ்ந்தார்.

--------------

பெரியாரின் தியாகம்

பெரியாருக்கு வயது 40.

பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காந்தியடிகள் திட்டங்களான ஒத்துழையாமை, மத ஒழிப்பு, கதர் விற்பனை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார்.

ஒத்துழையாமை என்பது வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்கு இந்தியர் உதவக்கூடாது என்பதாகும். அதனால் பெரியார், தான் வகித்த எல்லா பதவிகளையும் உதறித் தள்ளினார். ராவ்பகதூர் என்ற கவுரவப் பட்டத்தை பெரியாருக்குக் கொடுக்க அரசாங்கம் முன்வந்தது. பெரியார் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ஒத்துழையாமை இயக்கம் நடந்த காலத்தில் யாரும் நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடாது.

பெரியாருக்கு ஒரு வழக்கு இருந்தது. அதை நடத்தினால் ரூ.28,-000/_ கிடைக்கும். பெரியார் அத்தொகையைப் பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு போகக்கூடாது என்று முடிவு செய்துவிட்டார்.

இதையறிந்த அவருடைய நண்பர் சேலம் விஜயராகவாச்சாரியார் பெரியாரிடம் ஓடோடி வந்தார். “நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள். பணம் கிடைக்காமல் போய்விடும்’’ என்று பதறினார்.

பெரியார் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

“சரி, நீங்கள் போக வேண்டாம். பத்திரத்தில் கையெழுத்து மட்டும் போடுங்கள், மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். கிடைக்கும் பணத்தை நன்கொடையாகக் கொடுத்துவிடுங்கள்’’ என்றார் விஜயராகவாச்சாரியார்.

“நான் போவதும் ஒன்றுதான், கையெழுத்துப் போடுவதும் ஒன்றுதான். நீதிமன்றத்தை புறக்கணியுங்கள் என்று மக்களுக்குச் சொல்லிவிட்டு நாம் மட்டும் போகலாமா? என்னால் அதை ஏற்க முடியாது” என்று பெரியார் உறுதியாகச் சொல்லிவிட்டார்.

பெரியார் தியாகத்தை நாடு புகழ்ந்தது.

Share