Home 2017 அக்டோபர் வாழையின் வாய்மொழி
வெள்ளி, 23 ஏப்ரல் 2021
வாழையின் வாய்மொழி
Print E-mail

பேசாதன பேசினால் - 13

வாழையின் வாய்மொழி

- மு.கலைவாணன்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் சுட்டிப் பெண் இனியா வீட்டில் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தாள். அழைப்பு மணியோசை “குக்கூ’’ எனக் கூவியது. “இனியா யார் வந்திருக்காங்க பாரு'' என்று சமையல் அறையில் இருந்து அம்மாவின் குரல் வந்தது.

விரைந்து சென்று வாசல் கதவைத் திறந்தாள் இனியா... மணி மாமா மும்பையிலிருந்து வந்திருக்கார். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் “அம்மா மணி மாமா வந்திருக்காங்க'' என ஓங்கிக் குரல் கொடுத்தாள்.

“அடடே! வாடா மணி! வர்றேன்னு ஒரு போன் கூட பண்ணாம திடீர்னு வந்து நிக்கிறே'' என்றார் அம்மா தமிழரசி.

“நான் வேலை செய்யிற அய்ந்து நட்சத்திர ஓட்டல்லே புது கட்டடம் கட்டி பழைய கட்டடத்தோட சேக்குறாங்க.. அதனாலே ஒரு வாரம் லீவு கிடைச்சுது. உங்களைப் பாக்கணும் போல இருந்தது. உடனே புறப்பட்டு வந்துட்டேன்’’ என்றார் மணி மாமா.

தன் தம்பியைக் கண்ட மகிழ்ச்சியில், “சரி சரி... உள்ளே வா பையைக் கழட்டி வை. இனியா அப்பா அவர் நண்பரை பார்க்கப் போயிருக்காரு இப்ப வந்திடுவாரு. நீ அதுக்குள்ள குளி. எல்லாரும் சாப்பிடுவோம்’’ என்றார் அம்மா.

தான் கையில் கொண்டு வந்த பையை இனியாவிடம் நீட்டி, “இந்தா இனியா இது உனக்கு சாப்பிட'' என்றார் மணி மாமா.

பையைப் பிரித்துப் பார்த்த இனியா, “அய்யய்யே வாழைப்பழம் ஊவ்வே எனக்குப் பிடிக்காதுப்பா’’ என்றபடி பையை மேசை மீது வைத்துவிட்டுப் போய்விட்டாள்.

அம்மா தமிழரசி மணியைப் பார்த்து “இப்படித்தான்டா பழம், காய்கறி எதையும்              சாப்பிட மாட்டேங்குறா.’’

“நீ! கேட்டரிங் படிச்சிட்டு ஓட்டல்ல விதவிதமா சமைச்சு பலபேரை சாப்பிட வச்சு அசத்துறியே, இனியாவை வாழைப்பழம் சாப்பிட வையேன் பாப்போம்'' என்றார் தமிழரசி.

“சரி.. சரி... கொஞ்ச நேரத்திலே வந்து இனியாவை வாழைப்பழம் சாப்பிட வைக்கிறேன்'' என்றபடி குளிச்கச் சென்றார் மணி.

சற்று நேரத்தில் மேசை மீது தட்டில் வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களில்       சிலவற்றை தன் கையிலிருந்த கத்தியைக் கொண்டு சிற்பம் செதுக்குவது போல் தோலைச் செதுக்கி மனித முகம் போல் மாற்றிக் காட்டினார் மணி மாமா.

அதை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா. “இவங்கதான் வாழைப்பழத் தோழர்கள். இவங்க தன்னோட பலம் என்ன? தான் எப்படி மனித உடலின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கோம்னு எடுத்துச் சொல்லப் போறாங்க?’’

“அது எப்படி மாமா? வாழைப்பழம்பேசும்?’’ என அறிவுப் பூர்வமான கேள்வியைக் கேட்டாள் இனியா.

“வாழைப்பழம் பேசாது. ஆனா... உடலுக்கு எப்படி நன்மை வருதுன்னு அது                  சொன்னா என்ன சொல்லும்னு கற்பனை செய்து பாக்கணும். இதை அப்படியே உத்துபாரு இனியா’’ என்றார் மணி மாமா.

மாமா சொன்னபடியே வாழைப்பழ முகங்களை பார்த்துக்கொண்டே இருந்தாள் இனியா.

முதல் பழம்: “முக்கனிகள்னு சொல்லப்படுற மா, பலா, வாழையில கடைசியா இருக்கிற நாங்க எல்லா காலத்திலும் கிடைக்கக்கூடிய மலிவு விலையுள்ள மகத்தான ஆற்றல் கொண்டவர்கள்.  பல்வேறு உயிர் சத்துக்களும் கனிமங்களும் பொட்டாஷியமும் எங்களுக்குள்ள இருக்கு. சுண்ணாம்புச் சத்து அதிகமா இருக்கிறதாலே பல நோய்களை எதிர்க்கும் ஆற்றல் எங்களுக்கு உண்டு.

ப்ரக்டோஸ், க்ளுக்கோஸ், சக்ரோஸ் ஆகிய மூன்று வித சர்க்கரைகள் எங்களிடம் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக ஆபூர்வம். உடலுக்கு அவசியத் தேவையான நார்ச்சத்து, புரதச் சத்து போன்ற முக்கியமான சத்துக்களும் எங்ககிட்ட இருக்கு.’’

இரண்டாம் பழம் : “வாழைப்பழமான நாங்க 70க்கும் மேற்பட்ட வகைளில் இந்த மண்ணில் விளையிறோம். ஒவ்வொரு வகை பழத்துக்கும் ஒவ்வொரு சிறப்புப் பலனும், குணமும் உண்டு. உதாரணத்துக்கு ரஸ்த்தாளி சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலம் கொடுக்கும். மொந்தன் பழம் சோகையை நீக்கும். பேயன் வாழை குடற் புண்ணைத் தீர்க்கும். இப்படி மனித உடலுக்கு, வளர்ச்சிக்கு உதவியா இருக்கிறோம்.’’

மூன்றாம் பழம் : “சரும நோய் நிவாரணியான நாங்க... எல்லாத்தையும் எளிதிலே ஜீரணமாக்கும் ஆற்றல் உள்ளவங்க. பித்தத்தை நீக்கி, உடலுக்கு வலு சேர்ப்போம். உடல் எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டவங்க.

இரத்த ஓட்டத்தை விருத்தி செய்வோம். மலச்சிக்கல் இருந்தா போக்கிடுவோம். ஒழுங்கற்ற மாதவிலக்கு இருந்தா வாழைப்பழமான எங்களை சாப்பிட்டாபோதும், ஒழுங்கு ஏற்படும். குடலில் புண் இருந்தா ஆற்றும் தன்மை எங்களுக்கு உண்டு. உடல் சோர்வை நீக்கி, சுறுசுறுப்பை உண்டாக்குவோம். ட்ரைப்டோபன், செரடோனின் ஆகிய ரசாயனச் சத்துக்கள் வாழைப்பழமான எங்ககிட்ட இருக்கிறதுதான் இதுக்குக் காரணம்.

இரத்த அழுத்தம், பக்க வாதங்கள் வராமல் தடுக்க நாங்க உதவி இருக்கிறோம். வாழைப்பழமான எங்ககிட்ட சர்க்கரை அளவு குறைவு. பொட்டாஷியம் சத்து அதிகம். அதனாலே இரத்த அழுத்தத்தை அறவே தடுக்க முடியும். எங்ககிட்ட ‘வைட்டமின் பி’ இருக்கு; இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குறது இதுதான். எங்ககிட்ட ‘ஆன்டாசிட்' ரசாயனம் இருக்குறதாலே சாப்பாடு சாப்பிட்ட பிறகு சிலருக்கு ஏற்படுற நெஞ்செரிச்சலை சுலபமா போக்கிட முடியும். இரத்தத்திலே ஹீமோகுளோபின் சத்து இல்லாமல் போறதாலேதான் இரத்தச் சோகை ஏற்படுது. எங்ககிட்ட இரும்புச்சத்து இருக்கிறதாலே எங்களைச் சாப்பிட்டாலே போதும். இரத்தச் சோகையை விரட்டிடலாம்’’ என்றது.

நான்காம் பழம் : “காலை உணவிலேயே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா மூளைக்கு                                  சுறுசுறுப்பு தரும். மதிய உணவு, மாலை நொறுக்குத்தீனி, இரவு உணவு எடுத்துக்கும் போதெல்லாம் வாழைப்பழமான எங்களைச் சாப்பிட்டாலே போதும், மூளைக்கு பலம் கூடி ஆற்றல் திறன் அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம் நீங்கும். வறட்டு இருமல் போக்கும்.

இப்படிப்பட்ட வாழைப் பழமான எங்களை எப்பவும் ஒதுக்காதிங்க.

100 கிராம் வாழைப் பழத்துலே 61.4% நீர்ச்சத்து, 36.4.% மாவுச்சத்து. 1.3% புரோட்டின், 0.04% இரும்புச்சத்து, 0.08 மில்லிகிராம் மைகிரிபிளேவின், 7 மில்லிகிராம் ‘வைட்டமின் சி', 0.05 மில்லிகிராம் தயமின், 0.5 மில்லிகிராம் நியாசின் இப்படி உடல் நலத்துக்கான சத்துக்கள் இருக்கு. இதைப் போயி வேண்டான்னு சொல்றது ரொம்ப ரொம்ப தப்பு!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இந்த மக்கள் அறிவு விடுதலை பெறணும்னு பாடுபடுற ஒரு சுயமரியாதைக்காரரைப் போல இருக்கிற வாழைப்பழமான எங்களை ஒதுக்குனா... மருந்து மாத்திரைக்கு அதிக செலவும், உடல் நலக் குறைவுந்தான் ஏற்படும். நாங்க சொல்றதை சொல்லிட்டோம். வாழைப் பழமான எங்களை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க விருப்பம்’’ என வாழைப்பழங்கள் பேசுவதுபால் பேசி முடித்தார் மணி மாமா.

முக உருவங்களோடு மணி மாமா பேசுவதையும் பொருத்திப் பார்த்த சுட்டிப் பெண் இனியா அதை வாழைப்பழத்தின் வாய் மொழியாகவே ஏற்று சிந்திக்கத் தொடங்கினாள்.

“இனி எப்போதும் வாழைப்பழத்தை தவிர்க்க மாட்டேன். தொடர்ந்து சாப்பிட்டு உடல் நலம் காப்பேன்.’’ என அம்மா அப்பாவிடமும் மணி மாமாவிடமும் உறுதி கூறினாள் இனியா. பிஞ்சுகளே நீங்க எப்படி?

Share