Home 2017 டிசம்பர் பேசாதன பேசினால் - 14
செவ்வாய், 27 அக்டோபர் 2020
பேசாதன பேசினால் - 14
Print E-mail


பனைக்கு இல்லை இணை

- மு.கலைவாணன்

பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தான் ஏழாம் வகுப்பு படிக்கும் பகலவன்.

ஊரிலிருந்து வந்திருந்த அவன் தாத்தா, வாசலிலேயே நின்று அவனை வரவேற்றார்.

தாத்தாவைப் பகலவனுக்கு ரொம்பப் பிடிக்கும். திடீரென தாத்தா ஊரிலிருந்து வந்தது அவனுக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும் தந்தது.

தோளில் சுமந்து வந்த புத்தகப் பையைக் கழட்டி வைத்துவிட்டு தாத்தாவைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

“தாத்தா! எப்ப வந்தீங்க?” மிரட்டலாகக் கேட்டான் பகலவன்.

“இப்பதான்... கொஞ்ச நேரந்தான் ஆச்சு!” என்றார் தாத்தா.

“தாத்தா! நீங்க ஊர்லயிருந்து வர்றதா போன் பண்ணியிருந்தா நான் இன்னைக்கு பள்ளிக்கூடம் போகாமல் வீட்டுலேயே இருந்திருப்பேனே” என்றான் பகலவன்.

“நான் வர்றது முன்கூட்டியே தெரிஞ்சா... நீ பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு தெரிஞ்சுதான் சொல்லாமக் கொள்ளாம திடீர்னு வந்தேன்” என்றார் தாத்தா.

“தாத்தா! நேத்து எங்க பள்ளிக் கூடத்திலே ஆறாம் வகுப்பிலேயிருந்து எட்டாம் வகுப்பு வரைக்கும் படிக்கிற பசங்களுக்கு ஓவியப் போட்டி நடத்துனாங்க. அதுலே நான் கலந்துக்கிட்டேன். எனக்குதான் முதல் பரிசு கிடைச்சுது. அடுத்தவாரம் பரிசு தருவாங்க தாத்தா” என்று சொன்னான் பகலவன்.

“அடடே! முதல் பரிசு தர்ற அளவுக்கு அப்படி என்ன படம் வரைஞ்சே?’’ எனக் கேட்டார் தாத்தா.

“இயற்கைக்காட்சி எதை வேணுன்னாலும் வரையலாம்னு சொன்னாங்க. நான் போன தடவை லீவுல ஊருக்கு வந்தபோது ஏரிக்கரை மேலே நிறைய பனைமரம் பாத்தோமே... அதைத்தான் வரைஞ்சேன். எல்லாருமே பாராட்டுனாங்க தாத்தா” என்றான் பகலவன்.

பேரப்பிள்ளை ஊரில் பார்த்த பனை மரங்களை வரைந்து முதல் பரிசுக்குத் தேர்வானதை நினைத்து தாத்தாவின் மனம் மகிழ்ந்தாலும்... கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரில் இருக்கும் அம்மன் கோயில் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட பணம் போதவில்லை என்று கோயில் நிலத்தில் இருந்த சில இளம் பனை மரங்களை ஊரார் சிலர் வெட்டி விற்பனை செய்ததை நினைத்து மனம் வருந்தினார் தாத்தா. அவருக்கே தெரியாமல் அவர் கண்கள் கலங்கின.

அதைப் பார்த்த பகலவன், “என்ன தாத்தா... நான் முதல் பரிசு வாங்குனதை நினைச்சு ஆனந்தக் கண்ணீரா?” என்றான்.

“இல்லப்பா! ஊருல... கோயில் திருவிழாவுக்கு பணம் போதலேன்னு கோயில் நிலத்துல இருந்த பனை மரத்தை வெட்டி வித்துட்டாங்க. அதை நினைச்சேன்... கண்ணு கலங்கிடுச்சு.”

“தாத்தா! நீங்க சாமியே கும்பிட மாட்டிங்களே அப்புறம் ஏன் கோயிலைப் பத்தி கவலைப்படுறிங்க?” என்றான் பகலவன்.

“ஒண்ணுமில்லாத சாமியையோ, கோயிலையோ நினைச்சு வருந்தலேப்பா! பலன் தரக்கூடிய நல்ல மரத்தை மூடநம்பிக்கைக்காக, வீணான செலவுக்காக, வெட்டிட்டாங்களேன்னு வருத்தமாப் போச்சு...”

“பனை மரந்தானே தாத்தா... என்னமோ பண மரமே சாஞ்சிட்ட மாதிரி கவலைப்படுறிங்க.”

“நீ வரைஞ்ச பனைமரம் இருக்கே! அது உண்மையிலேயே பலவகையிலே பலன் தரக்கூடிய பயன்மரம். நீ சொன்னதுபோலே பண மரம்தான்” என்றார் தாத்தா.

“இங்கே பாருங்க! நான் வரைஞ்ச படத்தை” என்று, தான் வரைந்த ஓவியத்தை தாத்தாவிடம் காட்டினான்.

அதை வாங்கிப் பார்த்த தாத்தா, “ஆகா! ரொம்ப நல்லாயிருக்கு” என்று அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“தாத்தா... என்ன அதையே பாக்குறிங்க... அப்படி என்ன சொல்லுது அது” என்று வியப்போடு கேட்டான் பகலவன்.

“அது என்ன சொல்லுது தெரியுமா?

“நான்தான் பனை... எனக்கு இல்லை இணை. நான் ஏழைகளின் துணை. அப்படின்னு சொல்லுது” என்றார் தாத்தா... ஆ... என வாயைத் திறந்தபடி நின்றான் பகலவன்.

பனைமரம் பேச்சைத் தொடர்ந்தது. இல்லை இல்லை... தாத்தாதான் தொடர்ந்தார். ஆனால், தான் வரைந்த ஓவியத்தில் உள்ள பனைமரமே பேசுவதுபோல் தோன்றியது பகலவனுக்கு.

“என்னை பனைமரம்... பனைமரம்னு எல்லாரும் சொன்னாலும்... நான் மரமில்லே... புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். இதை சில நூறு ஆண்டுகளுக்கு முன்னாடி தாவரவியல் அறிஞர்கள் கண்டுபிடிச்சு சொன்னாலும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னாடியே தமிழுக்கு இலக்கணம் வகுத்த நம்ம தொல்காப்பியர் பனையான என்னை புல் வகைன்னு தெளிவா சொல்லி வச்சிருக்காரு.

பனையிலே ஆண்பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை இப்படி 34 வகை பனைகள் இருக்கு. இது ஒவ்வொன்றும் பேருக்கு ஏத்தமாதிரி பயன்தரக்கூடியது.

நுனி முதல் அடிவரை உள்ள எல்லா பகுதியும் பயன்தரக்கூடிய பொருள்கள் செய்ய உதவும். என்னிலிருந்து உருவாகக்கூடிய நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனைப்பால் எல்லாமே உடலுக்கு வலிமை தரக்கூடிய குளிர்ச்சியான உணவுப் பொருள்கள்.

இன்னைக்கு எழுதனும்னா... காகிதம், தட்டச்சு இயந்திரம், கணினி, பேனா, பென்சில்னு எத்தனையோ இருக்கு. ஆனா, அந்தக் காலத்திலே என்னோட ஓலையெ பதப்படுத்திதான் தமிழ் இலக்கியங்களை எழுத்தாணி வச்சு எழுதுனாங்க. அதைத்தான் சுவடிகள்னு சொன்னாங்க. அதனாலேதான் தொல்காப்பியம், திருக்குறள், சங்கத் தமிழான புறநானூறு, அகநானூறு போன்ற பல நூல்கள் கிடைச்சுது. அதையெல்லாம் பாதுகாத்துத் தந்த பெருமையிலே, எனக்கும் பங்கு உண்டு.

என் ஓலைகள்தான் ஏழைகள் வீட்டு கூரையா இருக்கு. என்னோட ஓலைகளைக் கொண்டு விசிறி, கூடை, பலவித கைவினைப் பொருள்கள் தயாரிச்சு விற்பனை செய்யிறாங்க. 30 மீட்டர் உயரத்திற்கு நெளிவு சுளிவு இல்லாமல் நீண்டு வளர்றதாலே 15 ஆண்டுகளுக்கு மேலே வளர்ந்த என்னை வெட்டி வீடு கட்ட, சாரம் கட்ட பல வேலைகளுக்குப் பயன்படுத்துறாங்க. மனிதர்களைவிட அதிக நாள் அதாவது 130 ஆண்டு வரை வாழக்கூடிய என்னை முழுமையான வாழ்வு வாழ யாரும் விட்டு வைக்கிறதில்லை.” என்று சலித்துக் கொண்டு மேலும் தொடர்ந்தது.

என்னோட பாளையில் சீவி சுண்ணாம்பு தடவி எடுத்தா பதநீரு, சுண்ணாம்பு தடவாமெ எடுத்தா கள்ளு. பதநீரு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சத்தான பானம். இந்த பதநீரிலிருந்துதான் கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, மிட்டாய்னு... உருவாக்குறாங்க.

கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஒரு ஆண்டுல 150 லிட்டர் பதநீர், ஒரு கிலோ தும்பு 1லு கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் இதையெல்லாம் தருதுன்னு சொல்றாங்க.

விவசாயம், கைத்தறிக்கு அடுத்ததா பெரிய வேலை வாய்ப்பைக் கொண்டதா பனைத் தொழில்தான் இருக்குன்னு சொல்றாங்க.

என்னை யாரும் பயிரிட்டு வளர்க்கிறதில்லே... ஆனாலும், மக்கள் விரும்பி ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காம விட்டாலும்... மக்களின் இழிவை நீக்கி வளம் சேர்க்க நினைக்கிற இயக்கம் மாதிரி மனித குலத்துக்கு நான் உதவியாதான் இருக்கிறேன்...

இப்பவெல்லாம் அதிக மழை பெய்து ஏரிகளெல்லாம் தண்ணி நிரம்பி வழியும்போது கரை உடைஞ்சு போகுது. அப்படி உடையாம, கரைகளில் மண் அரிப்பு நேராம இருக்கணும்கிற பொதுநல நோக்கத்தோடதான் அன்னைக்கு ஏரிக்கரைகளிலெ ஆற்றங்கரைகளில் என்னை நட்டு வச்சாங்க. ஆனா, சில சுயநல மனிதர்கள் என்னை எங்கே விட்டு வச்சாங்க. ஏமாந்த நேரத்திலே வெட்டி வித்தாங்க. அதனால ஏரிக் கரைகள் உடைஞ்சு ஊருக்குள்ள வெள்ளம் வந்து பலபேரு செத்தாங்க.

என்னோட வேர்கள் மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும்கிற உண்மையை புரிஞ்சுக்காத மனிதர்களை என்னனு சொல்றது?

என்மேலே ஏறி இறங்கி வேலை செய்யிற தொழிலாளிகளையே ஜாதியாலே பாகுபடுத்தி இழிவுபடுத்தன மனிதர்கள்தானே நீங்க... உங்களைப் பாத்தா கோவம்தான் வருது. ஆனாலும், நான் உங்க நன்மைக்காகத்தான் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.”

தாத்தா இப்படி பனையைப் பற்றிய பெருமைகளைச் சொல்லக் கேட்ட பகலவன் தாத்தாவின் கண்ணீரைத் துடைத்தபடி கட்டிப் பிடித்துக் கொண்டு, “தாத்தா யார் எதிர்த்தாலும், ஆதரிச்சாலும் கவலைப்படாத கருப்புப் பனைக்கு இணையா எதுவுமே இல்லை தாத்தா”

குழந்தைகளே நீங்க என்ன நினைக்கிறீங்க?

Share