Home 2018 ஜனவரி சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி
திங்கள், 26 செப்டம்பர் 2022
சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி
Print E-mail


உடுமலைப்பேட்டை மாணவரின் கண்டுபிடிப்பு!

உடுமலைப்பேட்டையைச் சார்ந்த மாணவர் சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி சிந்திப்பதற்கும், சாதிப்பதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்!

பெற்றோரின் ஊக்குவிப்பும், தோழமையும்...

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, சின்னவீரன்பட்டி, ஆறுமுகம் நகர், திருவள்ளுவர் சிலை அருகில் வசிக்கும் கருணாநிதி, மங்கையற்கரசி ஆகியோரின் ஒரே மகன் திருவருள்செல்வன் ஆவார்.

இவர் உடுமலை ஆர்.கே.ஆர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கருணாநிதி ஐ.டி.ஐ முடித்தவர். எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வருகிறார், தாயார் மங்கையற்கரசி எம்.எஸ்.சி., பி.எட்., எம்.பிஃல் முடித்தவர். தன் மகன் பயிலும் தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது தன் மகனின் படிப்பு மற்றும் எதிர்காலம் கருதியும் குறிப்பாக தன்னுடைய மகனின் அறிவியல் எண்ணங்கள் பல வண்ணங்களாகி அவை மானுட சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற லட்சிய நோக்கத்தில் தான் செய்து வந்த ஆசிரியர் பணியை விட்டுவிட்டு தன் மகனை கவனித்து பராமரிப்பதிலும், அவரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவதிலும், தோழமையோடு உதவி புரிவதிலும் தன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மகனின் எண்ணத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டனர் பெற்றோர்கள்!

"பெரியார் பிஞ்சு" சார்பாக திருவருள்செல்வனின் கண்டுபிடிப்பு குறித்து அவரது தந்தை கருணாநிதி,  தாயார் மங்கையற்கரசி ஆகியோரோடு உரையாடினோம். “எங்கள் இருவரில் ஒருவர் மின் நுட்பத்தையும், மற்றொருவர் அறிவியல்  நுட்பத்தையும் பயின்ற படிப்பு ரீதியாகப் பெற்றிருக்கிறோம், ஆனால் எங்கள் மகனுக்கு கண்டுபிடிப்பு தொடர்பாக நாங்கள் என்றுமே ஆலோசனை வழங்கியதில்லை, மாறாக எங்கள் மகனிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றோம்! நம் மகன் படிப்பின் மீது ஈர்ப்பில்லாமல் கண்டுபிடிப்பு மீது கவனத்தை செலுத்துகின்றானே! என்ற கவலை எங்களுக்கு இருந்தது. ஆனால் அவன் படிப்பை கவனிக்காதது போல் இருந்தாலும் குறிப்பிடுகிற அளவுக்கு மதிப்பெண்கள் பெற்றுவருவதால் எங்களுக்குக் கவலை நீங்கியுள்ளது. எங்கள் மகன் விவசாயத்துறை தொடர்பான உயர்கல்வி பெற்று அதில் சாதனை செய்யவேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால் மகனின் மனநிலைக்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டோம். குறைந்த நாள், குறைந்த நீர், அதிக மகசூல் என விவசாயம் தொடர்பாகவும், சுற்றுப்புறம் மாசுபடுவதை தடுப்பது குறித்தும் எங்கள் மகன் கண்டறிந்துள்ள கண்டுபிடிப்புகளை மனித சமூகம் நுகர்ந்து பயன் பெறும் வகையிலும், எங்களது மகனிடம் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புத் திறமைகளை வெளிக்கொணர்ந்து அதை சமூகத்திற்கு பயன்படும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்திட முன்வரவேண்டும் என்று தெரிவித்தனர்.

இஸ்ரோவிலும், நாசாவிலும் கால் பதிப்பேன்!!

உடுமலை இளம் விஞ்ஞானி கருணாநிதி திருவருள்செல்வனின் துடிப்புமிக்க பேட்டி!!

“இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் வாகனப் பயன்பாடுகளும், தொழிற்சாலைகளும் மிகுந்து அவற்றிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டைஆக்சைடு, சல்ஃபர் டையாக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றால் சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து வருவதால் இதை தடுக்க எண்ணிய என்னுடைய சிந்தனை தான் "சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி" என்ற கண்டுபிடிப்பாக உருவாகியுள்ளது! இயந்திரத்தின் மூலம் எரிபொருளின் (FUEL)
உதவியுடன்  நுகர்வுப் பயன்பாடு நிகழும் போதோ அல்லது நுகர்வுப் பயன்பாட்டுக்கான பொருள் உற்பத்தி செய்யப்படும் போதோ புகை உருவாகி அது புகைபோக்கியின் வழியாகப் பயணித்து அந்தப் புகை வெளியே வந்து சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்கிறது. புகை உருவாக்கப்பட்டு அது புகைபோக்கியின் வழியாக  (Dust product from machinery travel to silencer via) பயணிக்கும் பாதையில் உள்ள காலியிடத்தில் என்னுடைய கண்டுபிடிப்பான வடிகட்டி (யீவீறீtமீக்ஷீ) பொருத்தப்படுகிறது. இந்த வடிகட்டியின் ஒரு புறம் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்ஃபர் டைஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் உருவிலுள்ள புகை உள்ளே நுழைந்து வடிகட்டப்பட்டு மறுபுறம் வெளியேறும் போது ஆக்ஸிசனாக  உருமாற்றப்பட்டு  புகைபோக் கியிலிருந்து   வெளியேறுகிறது. எனது கண்டு பிடிப்பின் மூலம் பொருத்தப்பட்ட வடிகட்டியில் தலை சிறந்த சுத்திகரிப்பு தாவரமான "சோற்றுக்கற்றாழை" (ALOE VERA), , சுத்திகரிப்புத் தாவரமான வெளிநாட்டு வகை "சிலந்தி ஆளைச் செடி" (SPIDER PLANT),, மற்றும் "எத்தனால்" கலவைகள் அடங்கிய புகை சுத்திகரிப்பு பகுதி உள்ளது. இது புகை மாசுவை ஆக்ஸிஜனாக மாற்றுகிறது. புகையை ஆக்ஸிஜனாக மாற்றும்போது வடிகட்டியில் வெப்பம் அதிகரிக்காமல் உரிய அளவில் பராமரிக்கப்படும் பொருட்டு அதிக வெப்பத்தைத் தடுக்க மிகச் சிறிய அளவிலான காற்றாடி (MINI FAN) பொருத்தப்படுகிறது. இதைச் செயல்  விளக்கமாகவும் உரை விளக்கமாகவும் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நடுவர்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டியுள்ளேன். திருப்பூரில் நடைபெற்ற 25ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று எனது கண்டுபிடிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளேன். விரைவில் அய்தராபாத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் எனது கண்டுபிடிப்பு இடம்பெறவுள்ளது.

என் கண்டுபிடிப்புகளுக்கு என் ஆசிரியப் பெருமக்களும், பெற்றோரும் உறுதுணையாக இருந்து ஊக்கமளித்து வருகிறார்கள்.

தமிழக அரசின் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பலஎர் என்னை வாழ்த்தி, எனது கண்டுபிடிப்பு தொடர்பான வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற பேருதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மானுட சமுதாயத்திற்கு என்னுடைய கண்டுபிடிப்புகளை அர்ப்பணிப்பேன். வான்வெளி பொறியியல்  (AERO SPACE ENGINEERING) அல்லது வான்வெளி இயற்பியல் (ASTRO PHYSICS) பயின்று இஸ்ரோவிலும், நாசாவிலும் கால் பதித்து கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதே எனது எதிர்கால லட்சியம்!!” என்று திருவருள்செல்வன் அவரது கருத்துக்களை நம்மிடையை பகிர்ந்து கொண்டார்.

வெகுமக்கள் சமூகம் தூய காற்றின்றி நோய்வாய்ப்பட்ட சமூகமாக மாறி வரும் சூழ்நிலைகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தவிர்க்க உடுமலை இளம் விஞ்ஞானியின் சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி வழிகாட்டுகிறது. விவசாய உற்பத்தி பெருக நீர் மேலாண்மை என்ற கண்டுபிடிப்பின் மூலம் குறைந்த நீர், குறைந்த காலம், அதிக விளைச்சல் என்ற நிலையையும், பகலில் தாவரங்கள் தன் வளர்ச்சிக்கு ஒளிச்சேர்க்கை (STORCH)
செய்வதைப் போல் இரவிலும் தாவரங்களுக்கு மென்மையான ஒளியைத் தருவதன் மூலம் தாவரங்கள் விரைவாக வளர்ச்சி பெற்று கூடுதல் விளைச்சலை குறைந்த காலத்தில் ஈட்டித் தரும் என்ற நிலையையும் தனது கண்டுபிடிப்பின் மூலம் உருவாக்கியுள்ளார் இந்த இளம் விஞ்ஞானி!! மானுட சமூகம் எளிமையான முறையில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பலவகையான கண்டுபிடிப்புகளையும் இந்த இளம் விஞ்ஞானி உருவாக்கி வைத்துள்ளார். "சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்" என்ற முதுமொழிக்கேற்ப உடுமலை இளம் விஞ்ஞானி க.திருவருள் செல்வனை ஊக்குவிக்க முன் வருவது மத்திய, மாநில அரசுகளின் கண் முன்னே உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாகும்!!!!

- "சுக்குட்டி" ச.மணிகண்டன்

Share