Home 2018 பிப்ரவரி ”மெரினா பீச்’ உருவான கதை
புதன், 21 அக்டோபர் 2020
”மெரினா பீச்’ உருவான கதை
Print E-mail

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ‘மெரினா’வில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் மாணவர்களாலும் இளைஞர்களாலும் பொதுமக்களின் பேராதரவோடு மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இந்திய ஊடகங்களிலும் உலக ஊடகங்களிலும் இவ்வறப் போராட்டம் “மெரினா புரட்சி’’ என்று பெருமைப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் தீவிரமாய்ப் பங்கேற்றுப் போராடியதைப் போல் மெரினா போராட்டமும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று இறுதியில் வெற்றியும் பெற்றது. “மெரினாப் புரட்சி’’ நடந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் மெரினா பற்றியும், அதன் வரலாறு பற்றியும் அறிந்துகொள்வோம் வாருங்கள் பிஞ்சுகளே!

தற்போது “மெரினா பீச்” இருக்கும் இடத்தில் ஆரம்பத்தில் கடற்கரை எதுவும் இல்லை. இன்றைய தமிழ்நாடு சட்டமன்றம் இயங்கும் “செயின்ட் ஜார்ஜ் கோட்டை” கட்டும்போது வங்கக் கடல் மிக அருகில் இருந்திருக்கிறது. சில சமயங்களில் அலைகள் கோட்டைச் சுவரை மோதும். சென்னையில் 1875இல் முதன்முலாக துறைமுகம் கட்ட ஆரம்பித்தபோது கடலைத் தடுத்து தென்பக்கமாக சுவர் எழுப்பி உள்ளனர்.

பொதுவாக, வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளில் இருந்து வரும் மணல் சுழற்சியால் தென்பக்கமாகச் செல்லும். அப்படி வரும் மணல் மட்டும் எட்டாயிரம் கியூபிக் மீட்டர்!

துறைமுகத்துக்காக இந்த மணல் தடுக்கப்பட, ஒரே ஆண்டில் 40 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு குவிந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கடல் பின்னுக்குச் சென்று மணல் மட்டும் சேர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு வருடமும் 40 சதுர கிலோ மீட்டர் மணல் அதிகரிக்க, பீச் நீளமாகியிருக்கிறது.

1881இல் மதராஸ் மாகாண கவர்னராக இருந்த மவுண்ட் ஸ்டுவர்ட்  என்பின்ஸ்டன் கிராண்ட்டஃப் துறைமுகம் தாண்டி மணல் சேர்வதை பார்த்துள்ளார். “ஏழரை மைல் நீளத்துக்கு ஒரு கடற்கரை. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. ஏன் இதில் உலவும் சாலை அமைக்கக் கூடாது?’’ என்று கேள்வி அவர் மனதில் உதிக்க, உடனே உருவாகியிருக்கிறது பாதை. ஒரு காலத்தில் பெசன்ட் நகரின் எலியட்ஸ் பீச் வரை இந்தப் பாதை இருந்துள்ளது.

இத்தாலியில் பால்மரோ கடற்கரை மிக பிரபலம். அதற்கு ‘மெரினா’ என்று பெயர். அந்த ஞாபகத்தில் கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட்தான் 1884இல் ‘மெட்ராஸ் மெரினா’ என பெயர் வைத்தார். இத்தாலி மொழியில் மெரினா என்றால் கடல் சார்ந்தது என்று பொருள். இதிலிருந்து வந்த வார்த்தைதான் மெரினா.

குறிப்புகள்:

¨           சென்னைத் துறைமுகம் கட்டப்படுவதற்கு முன்பு, தற்பொழுது ‘மெரினா’ கடற்கரை இருக்கும் பகுதி வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்தது.

¨           ஆங்கில அரசு மயிலாப்பூரையும், கிண்டியையும் ‘மெரினா’ வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி வேலைகளைத் தொடங்கும் நிலையில் அதனை எதிர்த்து மாபெரும் மக்கள் போராட்டம் நடக்கவே ஆங்கில அரசு அத்திட்டத்தைக் கைவிட்டது.

¨           இக்கடற்கரையை ஒட்டி புகழ் பெற்றோரின் நினைவிடங்கள். உருவச் சிலைகள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், கலங்கரை விளக்கம் போன்றவை அமைந்துள்ளதால் சென்னை நகரின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது.

¨           சென்னை நகரின் நுரையீரல் என்று ‘மெரினா’ அழைக்கப்படுகிறது.

¨           உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை 13 கிலோ மீட்டர் (8.2 மைல்).

¨           ‘மெரினா’ அதிகபட்ச அகலம் 437 மீட்டர்

(1,434 அடி)

¨           ‘மெரினா பீச்’_இன் நிர்வாக அதிகாரம் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

¨           ‘மெரினா பீச்’ நெடுகிலும் வடக்கு தெற்காக ஆறு(6) வழிச் சாலையாக காமராஜர் சாலை செல்கிறது.

¨           இந்தியாவின் பெரிய ஓட்டமான “சென்னை மாரத்தான்’’ இங்கு நடைபெறுகிறது.

¨           பொங்கல் திருநாளில் உறவினர்களோடு சேர்ந்து உணவுப் பொருள்களுடன் மக்கள் மெரினாவில் ஒன்று கூடுகின்றனர்.

¨           சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போன்ற விழாக் காலங்களில் அரசுத் துறைகளின் அணிவகுப்பு இங்கு நடைபெறுகிறது.

¨           முன்பு மெரினாவில் ஏரளமான அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்கள் மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.

¨           2017இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்திற்குப் பிறகு இங்கு அனுமதியின்றி போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.<

Share