இயற்கையின் கொடையே நிரந்தரம்!
Print

அன்பு நண்பனே அருகில்வா - உனக்கு
அறிவியல் புதுமைகள் சில சொல்வேன்!
எங்கும் நிறைந்த கதிர்ஒளியை - நாம்
இயக்க சக்தியாய் மாற்றிடலாம்!

வீட்டுக் கூரையில் சூரியத்தகடுகள் - நாம்
வேண்டும் அளவிலே அமைத்திட்டால்
சூரிய ஒளியை மின்சக்தியாக்கி - நம்
சொந்த மின்கலனில் சேர்த்திடலாம்!

பகலிலும் இரவிலும் மின்விளக்கு - நமக்கு
பகலவன் தருவான் இலவசமாய்!
பாடும் வானொலி தொலைக்காட்சி - மற்றும்
பயனுறு மின்விசிறி இயக்கிடலாம்!

கேணியில் உள்ள நீரினை இறைக்கவும் - நமக்கு
கதிரவன் சக்தி தந்திடுவான்!
மின்வெட்டு பயமே இனி வேண்டாம் - இனி
இரவும் பகலும் ஒன்றேதான்!

கோடையில் குளிர்ச்சி பெற்றிடலாம் - இனி
சூரிய ஒளிதரும் மின்சாரத்தால்!
குளிர்காலத்திலும் ‘சுடுநீர்’ பெற்றிடலாம் - நாம்
சூரியனின் வெப்ப சக்தியினால்!

எத்தனை எத்தனை ஆற்றல்கள் - நம்
இயற்கையின் கொடையில் அற்புதங்கள்!
ஆதவனைப்போல் அனுதினம் உதவிட - நாம்
அனைரும் எடுப்போம் ஒருசபதம்!

- வேடந்தாங்கல் சுகுணன்

Share