Home 2018 மார்ச் நம்புங்கள்
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
நம்புங்கள்
Print E-mail

சுயமானம் இழந்திடாமல் வாழுங்கள்

சுதந்திரத்தைச் சொந்தமாகக் கொள்ளுங்கள்

உயர்வான கொள்கையிலே நில்லுங்கள் - இந்த

உலகமுங்கள் கையிலென நம்புங்கள்

 

ஏட்டறிவு போதுமென்று நில்லாதே

அனுபூதி அடைந்துவிட முந்துங்கள்

நாட்டறிவும் நீபெறுதல் வேண்டுமடா - அதில்

நாடுஉன்னை நம்பிடவும் வேண்டுமே!

 

மூளைக்குநல் வேலைவேண்டும் தேடுங்கள்

முப்பொழுதும் நமதென்றுப் பாடுங்கள்

நாளைக்கு என்றெதையும் தள்ளாதீர் - என்றும்

நன்றதனை இன்றேசெய் விடாதீர்கள்!

 

எதற்கிந்தக் கேவலத்தை அடைந்தீர்கள்

எதிர்கால வாழ்வுதனை இழந்தீர்கள்

எதிர்ப்புக்குள் அடைபட்டுக் கிடந்தீர்கள் - வெறும்

எரிகின்ற நெஞ்சுடனே வாழ்ந்தீர்கள்!

 

முன்னேறு வழியதனைத் தேடுங்கள்!

முரண்பாடு இல்லாமல் வாழுங்கள்!

திண்டாடி நிற்பதனை மாற்றுங்கள்! - உங்கள்

திறமைகளைச் செயல்களாலே காட்டுங்கள்!

 

போதுமென்ற மனமென்றும் இருந்திட்டால்

புவியரங்கில் இருக்குதடா இடமொன்று

சாதுவாக எப்பொழுதும் சோர்ந்திருந்தால் - ஒரு

சாதனைக்கு இடமிங்கு இல்லையடா!

 

பெரியாரைப் பின்பற்றி நீநடந்தால்

புரியாத பொருளெல்லாம் புரியுமடா

அறியாமை இருள்நீக்கி வாழுங்கள் - அதில்

அனுகூலம் இருக்குதடா நம்புங்கள்!

 

- கே.வி.ஜெனார்த்தனன், காஞ்சிபுரம்

Share