Home 2018 ஏப்ரல் காரணமின்றி ஏற்காதீர்கள்
திங்கள், 26 செப்டம்பர் 2022
காரணமின்றி ஏற்காதீர்கள்
Print E-mail

மேலேழு கீழேழு உலகம் உண்டா?

- சிகரம்

நாம் வாழுகின்ற இந்தப் பூமிக்கு மேல், ஏழு உலகங்கள் இருக்கின்றன என்ற கருத்து பல நூறு ஆண்டுகளாக பரப்பப்பட்டு வருகிறது.

பூமியைத் தோண்டிக் கொண்டே சென்றால் கீழே ஏழு உலகங்கள் உள்ளதாகவும், அவையே பாதாள உலகம் என்று கூறுப்படுகிறது. இது முதன்மையான மூடநம்பிக்கையாகும்.

பூமியைத் தோண்டிக் கொண்டே சென்றால் என்ன வரும்? ஒரு பந்தை துளைத்துக் கொண்டே சென்றால் என்ன வரும்? அடுத்த புறம் வரும்.

அதே போல் பூமி என்பது ஓர் உருண்டை. அதைத் துளைத்துக் கொண்டே சென்றால் பூமியின் அடுத்தபுறத்தில் உள்ள வேறு ஒரு நாடு வரும்!

எனவே, பாதாள லோகங்கள் என்பது எவ்வளவு மூடநம்பிக்கை என்பது விளங்கும்.

அதேபோல் பூமிக்கு மேல் சென்று கொண்டிருந்தால் உலகம் எதுவும் இல்லை. பூமியைப் போல கிரகங்கள் (கோள்கள்) சுற்றிக் கொண்டிருக்கும். அவை எண்ணற்றவை; ஏராளமானவை.

இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிரபஞ்சத்தில்  மேல் கீழ் என்று சொல்வதே தவறு. காரணம், வெட்ட வெளிப்பரப்பில் ஆயிரக் கணக்கான பந்துகளை கயிறு இல்லாமல் மிதக்க விட்டால் எப்படியோ அப்படி அண்டவெளியில் (வெட்டவெளியில்) ஆயிரக்கணக்கான கோள்கள் (கிரகங்கள்) மிதந்து கொண்டுள்ளன. இதில் மேல் என்பதும் கீழ் என்பதும் எதுவும் இல்லை.

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வோர் ஈர்ப்பு விசையில் கட்டுண்டு சுற்றி வருகின்றன என்பதே உண்மை!

ஒரு காலத்தில் இமய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள பரப்பே உலகம் என்று நம் மக்கள் நம்பினர்.

அதனால்தான், பார்வதியின் திருமணம் இமய மலையில் நடந்தபோது, அதைக் காண அதிக மக்கள் அங்குச் சென்றதால் பூமியின் வடபாகம் சாய்ந்துவிட்டது என்று அகத்தியரைத் தென்பாகத்திற்குச் சென்று பாரத்தை ஈடுகட்டச் செய்ததாகப் புராணம் எழுதினர்.

அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் கற்பிக்கப்பட்ட கற்பனையே மேலேழு உலகம் கீழேழு உலகம். இதில் எந்த உண்மையும் இல்லை என்பது மட்டுமல்ல; தவறும் ஆகும்.

=====================

இடக் கையால் கொடுப்பது தவறா?


இடக் கையால் கொடுப்பதும் பெறுவதும் தவறு என்ற எண்ணம் பெரும்பாலும் காணப்படுகிறது. இது முற்றிலும் தவறாகும்.

எந்தவொரு பொருளைக் கொடுத்தாலும் பெற்றாலும் வலக் கையால்தான் செய்ய வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. இடக் கையால் கொடுப்பதோ பெறுவதோ மதிப்பற்ற செயலாகக் கருதப்படுகிறது. மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாக சிலர் எண்ணுவதும் உண்டு. நம் வீடுகளிலும் பள்ளிகளிலும் கூட வலக் கையால் கொடு; வாங்கு என்று சொல்லிக் கொடுப்பதைக் கேட்டிருப்போம். வலது உறுப்பு உயர்வானது; மதிக்கத்தக்கது. இடது உறுப்பு தாழ்வானது என்ற அடிப்படையில் இந்த எண்ணம் உருவானது.

மனிதனில் ஜாதி பிரித்ததுபோல் நம் உறுப்புகளிலும் ஏற்றத் தாழ்வை வைத்து விட்டார்கள்.

இடக் கை, வழக்கமாக மலம் கழித்த பின் தூய்மை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, அக் கையால் சாப்பிடக் கூடாது என்பது வழக்கத்தில் வந்தது.

அதன் விளைவுதான் இடக் கை தாழ்ந்தது; வலக் கை உயர்ந்தது என்ற எண்ணம்.

கைக்குக் கிடைத்த உயர்வும் தாழ்வும் பின்னர் காலுக்கு மாறியது. வலது கால் உயர்வானது என்ற எண்ணம் ஏற்பட்டு, வலது காலை எடுத்து வைத்து வா! என்று சொல்லும் நிலை ஏற்பட்டது.

நமது உறுப்புகளில் எந்த உறுப்பும் தாழ்வல்ல. மாறாக எல்லாம் பயனுள்ளவை. இடக் கால் இல்லையென்றால் அவர் நிலை என்னாகும்? இப்படி எண்ணிப் பார்த்தால், எந்த உறுப்பையும் தாழ்வாக எண்ணும் எண்ணம் நமக்கு வரவே வராது.

மலம் அலம்பும்போது இரு கைகளாலும் மாறி மாறி அலம்புவதற்குப் பதில் ஒரே கையால் அலம்பினால் நல்லது என்ற நோக்கில் ஒரு கையை உண்ணவும் ஒரு கையை மலம் அலம்பவும் பயன்படுத்தினர். இது சுகாதாரக் கண்ணோட்டத்தில் எழுந்தது.

இதை அறியாது ஒரு கையைத் தாழ்வாகவும் இன்னொரு கையை உயர்வாகவும், மதிப்பதற்குரியதாகவும் கருதுவது அறியாமையின் அடையாளமாகும்.

அதேபோல் பந்தியில் உண்ணும்போது எதிரில் இருப்பவர் பின்புறம் நமக்குத் தெரிய உட்கார்ந்தால் அதை மதிப்பற்றதாக எண்ணுவதும் தவறாகும். மலம் கழிக்கும் உறுப்பையே மட்டமாக எண்ணும் மடமையின் வெளிப்பாடு இது.

முன்பக்கமும் கழிவு வெளியேற்றும் உறுப்பு உள்ளதை இவர்கள் மறந்து போகிறார்கள்.

மலமும் கழிவுதான், சிறுநீரும் கழிவுதான். இதில் முன்பக்கம் என்ன? பின்பக்கம் என்ன?

கழிவுகள் தூய்மை செய்யப்பட்ட பின் எல்லா உறுப்பும் ஒன்றுதான்.<

அலம்புதல் - கழுவுதல்; தூய்மை செய்தல்

Share