சுயமரியாதை கொள்!
Print

சுயமரி யாதை இல்லாச்
சுயநலக் கோழை யாகப்
பயத்துடன் வாழ்வ தெல்லாம்
பகுத்தறி வல்ல தம்பி!

கயமையைக் கண்டால் அங்கே
கலங்கியே ஒடுங்கி டாமல்
உயரிய கொள்கைக் காக
உயிரையும் ஈதல் வேண்டும்!

தமிழனாய்ப் பிறந்தோர்க் கெல்லாம்
தனித்துவ மானம் உண்டு;
அமிழ்தையே தந்திட் டாலும்
அவமரி யாதை தாங்கான்;

இமிழ்கடல் அலைகள் போல
இழிவுகள் வந்துற் றக்கால்
தமிழனின் தன்மா னம்தான்
தடைகளை உடைத்து வெல்லும்!

உயிரினில் ஆசை வைத்து
உனதுதன் மானம் தன்னை
வயிற்றினை வளர்ப்ப தற்காய்
வாழ்வினில் ஒதுக்கி டாதே!

உயிரினும் மேலாம் என்றும்
உன்சுய மரியா தையே;
பயின்றிடும் மாணாக் கர்க்கும்
பகர்ந்தவர் பெரியார் அன்றோ?<

Share