Home 2018 ஜூலை தென்மேற்குப் பருவக்காற்றின் பயணம்
சனி, 28 நவம்பர் 2020
தென்மேற்குப் பருவக்காற்றின் பயணம்
Print E-mail

சூரியனின் வெப்பம் எப்போதும் போல் கோடைகளில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளை நன்றாக சூடேற்றும். அப்படி சூடேற்றுவது மிகத் தேவையான ஒன்று. இந்தக் கோடையின் முடிவில் ஒரு செய்தியை நாம் படிக்கிறோமல்லவா??

அதுதான் தென்மேற்கு பருவக்காற்று

கோடையில் புவியைச் சூடேற்றிய சூரியனின் வெப்பம் கடல் நீரை ஆவியாக்குகிறது. அந்த நீராவி மெல்ல மெல்ல குளிர்ந்து, அதிக வெப்பம் நிறைந்த பகுதிகளை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. மிக அதிக அளவில் இந்த நீராவி மேகங்களாக மாறி நகரும் போது ஏற்கனவே  இந்தியப் பெருங்கடலில் ஆங்காங்கே ஆவியாகிக் கொண்டு இருக்கும் நீராவியும் இத்துடன் சேர்ந்து அது வேகம் பிடிக்க ஆரம்பிக்கிறது. கடல் பகுதியில் மேகங்களுக்குக் குளுமை கிடைப்பதால் வெப்பம் மிகுந்த தரைப்பகுதியை நோக்கி மிகவும் வேகமாக பயணிக்கிறது.

எடுத்துக்காட்டாக, இந்தியாவின் தென் முனையில் நீண்ட தொலைவில் அண்டார்டிகா கண்டம் இருக்கிறது. அதாவது தென்துருவம். இந்த இடைப்பட்ட பெருத்த இடைவெளியில் வேறு எந்த நிலப்பரப்பும் இல்லை. ஆகையால், வெப்பமான நிலப்பரப்பை நோக்கி வேகமாக நகரும். நமது இந்தியா நோக்கி நகரும் மேகக் கூட்டங்களுக்கு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்று  பருவநிலை குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

தென்மேற்குப் பருவக்காற்று நம் நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவக் காற்று ஆகும். சரி, ‘இந்தப் பருவக்காற்று’ அதாவது நீராவியைக் கொண்ட மேகங்கள் ஏன் இந்தியாவை நோக்கி வரவேண்டும்? அரேபியா, அல்லது வங்காள விரிகுடா நாடுகளை நோக்கிச் செல்லலாம் அல்லவா? என்ற கேள்வி எழும்புகிறதா? அதற்கான விடை இதோ.

சில நாட்களாக நம் நாளிதழ்களில் வட இந்திய மாநிலங்களில் கடுமையான புழுதிப்புயல் _ உத்திரப்பிரதேசத்தில் 64 பேர் பலி, டில்லியில் 11 பேர் பலி, அரியானாவில் பலத்த சேதம், ராஜஸ்தானில் 40 பேர் பலி என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஏன்? மத்திய இந்தியாவில் கடுமையான கோடை நிலவுவதால், ஒரு வெற்றிடம் நிலவுகிறது. இந்த வெற்றிடத்தில் சுழல் காற்றுகள் சாதாரணமாக வீசும். நம் கிராமங்களில் குப்பைக் கூளங்களை சுழற்றிக் கொண்டு சின்னச் சின்ன சூறாவளிகள் தோன்றுமல்லவா, அது போல் பெரிய அளவில் தோன்றுவதுதான் இந்தப் புழுதிப்புயல்கள். இந்தப் புழுதிப்புயல்கள் காற்றில் இருக்கும் மீதமுள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொண்டு விடுகின்றன.

இதனால் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் அதிக அளவு வெப்பமடைகின்றன.  இயற்கையாகவே பூமி சமன்படுத்தும் திறனை அடைந்துள்ளது.  ஆகவே, மத்திய இந்தியாவின் வெப்பத்தை ஈடு செய்ய ஈரப்பதம் அதாவது நீராவி கலந்த  காற்று  இந்தியப் பெருங்கடலின் தென் மேற்குப் பக்கத்திலிருந்து வேகமாக மத்திய இந்தியாவை நோக்கிப் பயணமாகிறது. இந்தக் காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வழியாக பயணிக்கும்போது அங்கு ஏற்கனவே மரங்கள் அடர்ந்த குளிர்ச்சியான சூழலில் மழைப்பொழிவைத் தருகிறது. இது அப்படியே நின்றுவிடாது, அதனுடைய பயணம் வெப்பமான வடக்கு நோக்கியல்லவா? அதனால் மேற்குத் தொடர்ச்சி பகுதிகளைக் கடந்து சாத்பூரா மலைப்பகுதிகளின் இடைவெளி வழியாக செல்லும் போது திடீரென்று விந்திய சாத்பூரா மலைத்தொடர்களின் துவக்கத்தில் ஒரு புனல் போன்ற நுழைவு கிடைப்பதால் அதிலிருந்து பரந்த வட இந்திய சமவெளிப்பகுதியில் நுழைகிறது. இப்படி நுழைந்த மேகக்கூட்டங்கள்  இமயமலைகளில் முட்டி, மேலெழுந்து, வட இந்தியாவின் முக்கால் பாகங்களில் மழை மேகங்களை குவிக்கிறது. இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழுகின்றன. பிறகு வட இந்தியா முழுவதும் மழையாகப் பெய்கிறது.

எப்போதும் ஜூன் முதல் நாள், அதாவது கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளியைத் திறக்கும்போது இந்தப் பருவ மழையும் தன்னுடைய வருகையை பதிவு செய்யும். நமக்கு அருகில் உள்ள கேரளத்தின் முனையில் துவங்கும் இப்பருவ மழை, படிப்படியாக முன்னேறி கடலோரக் கர்நாடகாவில் ஜூன் முதல் வாரத்திலும் மும்பை மற்றும் கொங்கண் கடற்கரைப் பகுதிகளில் ஜூன் இரண்டாம் வாரத்திலும் தன் பொழிவைத் துவங்கும். தலைநகர் டில்லியில் ஜூலை முதல் வாரத்திலும், கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் இரண்டாம் வாரத்திலும் தென் மேற்குப் பருவமழை துவங்குகின்றது.

இந்த மழைக்காலத்தில் இந்தியாவில் சில பகுதிகள் 10,000  மில்லி மீட்டர் வரை மழைநீர் பெறுகின்றன.

இந்தப் பருவப் பெயர்ச்சிக் காற்றினை அவை வீசும் பகுதிகளைக் கொண்டு அரபிக்கடல் கிளை என்றும் வங்காள விரிகுடாக் கிளை என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.

அரபிக்கடல் கிளை மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்கி கேரளாவிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் வழிநடத்தப்பட்டு கருநாடகம், கொங்கண் மற்றும் குஜராத் வரை கடலோரப் பகுதிகளுக்கு மழை தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் உள்ள நிலப்பகுதிகள் மலைப் பகுதிகளில் தடுக்கப்படுவதால் அவ்வளவு மழை பெறுவதில்லை. அதாவது தமிழகம், ஆந்திரா, மத்திய கர்நாடகா போன்றவை. இவை ‘மழை மறைவுப் பகுதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

வங்காள விரிகுடாக் கிளை வங்காள விரிகுடாவிலிருந்து வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்விக்கிறது. இக்காற்றினால் கிழக்கு இமயமலையிலுள்ள மேகாலயாவில் சிரபுஞ்சி என்னுமிடத்திலிருந்து 16 கி.மீ மேற்கிலுள்ள மௌசின்ரம் (விணீஷ்sஹ்ஸீக்ஷீணீனீ) என்னுமிடத்தில் உலகிலேயே மிகக் கூடுதலாக மழைபெறும் இடம் உள்ளது. இமயமலையினால் காற்று மேற்கு நோக்கி திசை திருப்பப்பட்டு கங்கைச் சமவெளி முழுவதும் மழை தருகிறது.

இந்த மழையினால் நமது நாட்டின்  பெரும்பகுதிகள்  பயனடைகின்றன. இப்பருவ மழை துவங்க சிறிது கால தாமதமானாலும், அது  விவசாயத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். மழை மறைவுப் பகுதிகளிலும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் ஆறுகளால் நீர் வரப்பெற்று விவசாயம் பெருகுகிறது. அடேயப்பா, இந்தத் தென்மேற்குப் பருவக் காற்றுதான் எங்கெங்கெல்லாம் சென்று தன் வேலையைக் காட்டுகிறது!<

Share