Home 2018 ஆகஸ்ட் தங்க மங்கை ஹிமாதாஸ்
வியாழன், 02 பிப்ரவரி 2023
தங்க மங்கை ஹிமாதாஸ்
Print E-mail

y9.jpg - 246.71 Kb

12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார்.

உலகம் நம்பவில்லை. இந்தியப் பெண்ணா, அதுவும் இந்தப் பெண்ணா! நம்ப முடியாமல் ஆனால் மைதானத்தில் நடந்துவிட்ட அந்த நிகழ்வை வியப்புடன் பார்த்தது.

தடகளப் போட்டி என்றாலே இந்தியாவுக்கு காததூரம்.

அந்த ஓட்டப் பந்தயத்தில் (400 மீ) முதலாவதாக, அதுவும் ஆஸ்திரேலிய, ருமேனிய, அமெரிக்க பெண்களே முதல் மூன்று இடத்தை பிடிப்பார்கள் என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தபோது, அவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் கவனிக்கப்படாத ஒரு கிராமத்தில் இருந்து வந்த பெண், பின்லாந்தின் டாம்பரே நகரில் நடைபெற்ற பன்னாட்டு தடகள உலக சாம்பியன்ஷிப்பில் 20 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கான 400 மீட்டர் தடகள டிராக் பிரிவில் முதலாவதாக வந்து தங்கம் வெல்கிறார் என்றால் ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்!

ஹிமாதாஸ் இன்று தடகளத்தை நேசிக்கும் எல்லோர் வாயும் ஓயாமல் உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது.

வாருங்கள், நாமும் அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

அஸ்லாம் மாநிலத்தை சேர்ந்த காந்துலிமாரி கிராமத்தில் ரஞ்சித்தாஸ் _ ஜோனாலிதாஸ் இணையருக்கு மகளாகப் பிறந்தவர் ஹிமாதாஸ். 16 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே ஆண் பிள்ளையைப் போன்றே வளர்த்தார். சமூகம் வரையறுத்திருக்கும் பெண் பிள்ளைக்கான எந்த குணமும் இவரிடம் இல்லை. சிறுவயதில் தன்னோடு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை காயம் ஏற்படும் அளவிற்கு அடித்துவிட்டார். அடிவாங்கிய அந்தச் சிறுவனின் குடும்பத்தார் காவல் நிலையத்திற்குச் சென்ற புகார்  கொடுத்துவிட்டனர். விசாரணைக்கு அழைத்து வரச் சொன்ன காவல்துறை அதிகாரி ஹிமாதாஸை கண்டதும் இது ஏதோ சிறுபிள்ளைகள் சண்டை என்பதைத் தெரிந்து-கொண்டு அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

கிராமத்தில் கால்பந்து விளையாடும் இளைஞர்களுடன் சேர்ந்து நானும் விளையாடுவேன் என்று அடம்பிடிப்பார். இதனால் அந்த இளைஞர்களுடன் கட்டிப்புரண்டு சண்டைகூட போட்டிருக்கிறார். அவர் வீட்டிலிருந்து வெளியில் சாலையில் செல்லும்பொழுது, ஏதாவது கார் வந்தால் காரோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடி அந்தக் காரை முந்த முயற்சி செய்வார்.

சிறுமியாக இருக்கும்போதே இவ்வளவு தைரியசாலியாக இருந்த இந்தப் பெண் அந்தக் கிராமத்திலுள்ள பெரியவர்களை மருத்துவமனைக்கு அழைத்தச் செல்வது போன்ற பல உதவிகளைச் செய்திருக்கிறார். இவருவடைய கிராமத்தில் மின்சாரம் நாளொன்றிக்கு 3 அல்லது 4 மணிநேரமே இருக்கும். அங்கு விளையாட்டு மைதானமோ, வேறு எந்த அடிப்படை வசதிகளோ கிடையாது.

இவர் தானாகவே ஓட்டப் பயிற்சி எடுத்துக்கொண்டது எங்கு தெரியுமா? காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்காக கால்நடைகள் அழைத்து வரப்படும் அந்த மேய்ச்சல் நிலத்தில்தான் இவர் ஓடி ஓடிப் பழகினார். இவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் இரத்னேஸ்வர்தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரோடு அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு முகாமில்  பங்கேற்றபோது அங்குவந்த நிபுன்தாஸ் இவருடைய திறமையை நேரே கண்டார். உடனே அவருடைய மனத்தில் ஏதோ ஒரு துல்லியமான கணிப்பு வந்து விழுந்தது.

உடனே இவர் ஹிமாதாஸின் குடும்பத்தினரை கிராமத்தில் சென்று சந்தித்து, “உங்கள் பெண்ணுக்கு சிறந்த எதிர்காலத்தை நான் ஏற்படுத்தித் தருகிறேன். அவருடைய பயிற்சிக்கான எந்தச் செலவையும் நீங்கள் செய்ய வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அவர் கவுகாத்தியில் தங்கிப் பயிற்சி எடுக்க மட்டும் நீங்கள் அனுமதித்தால் போதும்’’ என்று தெரிவித்தார். அவர்கள் சம்மதித்தாலும் கிராமத்தினர் தப்பும் தவறுமாக பேசத் தொடங்கினர். எது பற்றியும் கவலைப்படாமல் ஹிமாதாஸ் ஓட்டப்பயிற்சி எடுக்கத் தொடங்கினார்.

எந்தவித வசதிகளும் உபகரணங்களும் இல்லாத சூழ்நிலையில் 2016ஆம் ஆண்டு இறுதியில் மாநில அளவிலான 100 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன் பின்னர் பாங்காக்கில் நடைபெற்ற போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் அதைத் தொடர்ந்து ஜாகார்த்தாவில் நடைபெற்ற விளையாட்டுச் சோதனைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

அதன் பிறகு தற்போது பின்லாந்தில் நடைபெற்ற உலக வாகையர் (சாம்பியன்ஷிப்) போட்டியில், ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தும் தடகளத்தில் 400 மீ ஓட்டப் பந்தயப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பந்தய இலக்கை இவர் 51.46 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

300 மீ வரை மெதுவாக ஓடிவந்தவர் கடைசி 100 மீட்டரை மின்னல் வேகத்தில் ஓடி இச் சாதனை செய்து நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். வறுமையான குடும்பத்தில், மிகச் சாதாரணமான உணவைச் சாப்பிடும் மனதில் ஒரு வைராக்கியத்தோடு நான் ஏதாவது ஒன்றைச் சாதிப்பேன் என்று பிடிவாதமாக அதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி, இப்போது உலகம் போற்றும் தங்க மங்கையாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

சாதிப்பதற்குப் பணம் தேவையில்லை. வசதிகள் தேவையில்லை. மன உறுதி இருந்தால் போதும் என்பதைக் குறுகிய காலத்தில் மெய்ப்பித்துக் காட்டி நம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார் ஹிமாதாஸ். இவருடைய அடுத்த இலக்கு ஒலிம்பிக். அதிலும் அவர் தங்கம் வென்று சாதித்துக் காட்ட நாம் அனைவரும் வாழ்த்துவோம். நாமும் அவரைப் போன்று முயற்சி செய்வோம். எல்லா போட்டிகளிலும் திறமைகளைக் காட்டி தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்போம்.<.....

Share