Home 2018 ஆகஸ்ட் எண்ணித் துணிக கருமம் !
வியாழன், 02 பிப்ரவரி 2023
எண்ணித் துணிக கருமம் !
Print E-mail

y19.jpg - 336.46 Kb

“தோழர்களே, இன்னிக்கு சாகச முயற்சிகள் தேவையா? தேவையில்லையான்னு நமக்கு நாமே தேர்தல் வச்சிக்கலாமா?” அன்றாட நடப்பையொட்டி  ஹூவாமை இளைஞர் சபையில் நடக்கும் விவாதம் அன்றைக்கு இப்படித் தான் தொடங்கியது

“எதைச் சொல்றீங்க?!”

”என்ன செய்தி படிக்கலையா?”

“ஆமாமா... “12 மாணவர்களும்! 18 நாட்களுமா?”

“அடடே. முதலில் இனியா இதைப்பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க பார்க்கலாம்.”

“சரி, தாய்லாந்து நாட்டில் வடக்குப் பகுதியிலுள்ள சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் நாங் மலைத்தொடரில்தான் இந்த சம்பவம் நடந்த குகை இருக்கு. அங்கதான் இந்த 12 மாணவர்களும் ஒரு பயிற்சியாளரோட, ஜூன் 23 ஆம் தேதி  சுற்றுலாவுக்கு போயிருக்காங்க. ஏற்கனவே பலமுறை இங்கு பலரும் சென்றுள்ளனர். உள்ளே இரண்டரை கிலோ மீட்டர் தூரம் குகைக்-குள்ளேயே சென்று அங்குள்ள பாறைகளில் அவரவர் பெயர்களை எழுதிவிட்டு வரவேண்டும். இதுதான் பயிற்சியாளர் அவர்களுக்கு கொடுத்த இலக்கு. அவர்களும் அப்படியே செய்தனர். அப்போதுதான் மழை தொடங்கியிருக்கிறது. பயிற்சியாளரோடு சேர்ந்து மொத்தம் 13 பேரும் உள்ளே மாட்டிக்கொள்கின்றனர். பிறகு விசயம் தெரிந்து மீட்புப் படையினர் வந்து அவர்களை கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு மீட்டனர்.”

“சரி, இனியா சொன்னதுல ஏதாவது விடுபட்டுப் போயிருக்கா?”

“ஆமா, நிறைய.....” -என்றான் மதிநிலவன்.

“அதை, நீ சொல்லு.”

“பயிற்சியாளர் பேரை விட்டுட்டாங்க. அவரு பேரு எக்காபோல் சண்டாவோங்! அதுமட்டுமில்லே இதுக்கு ஒரு தலைமைப்பயிற்சியாளர் ஒருத்தர் இருக்காரு. பேரு நோப்பராட்! மாணவர்களுக்குள் குழு மனப்பான்மையை வளர்ப்பதற்காக பயிற்சியாளர் அடிக்கடி இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், இம்முறை இப்படி சிக்கிக்கொண்டார்கள். அவ்வளவுதான்”

“வெரிகுட் மதிநிலவன்! அவ்வளவுதானா?”

“அதாவது, அந்தக் குகை மிகக் குறுகலானது! மேடு பள்ளங்கள் நிறைந்தது! மழை பொழிந்து உள்ளே நிறைந்துகொண்டிருந்த தண்ணீர் அழுக்காக இருந்தது! அதைவிட முக்கியமானது, உள்ளே இருப்பவர் களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது! அதைவிடவும் முக்கியமானது. வெற்றிடங்களில் நீர் நிறைந்து கொண்டே வந்ததால் குகைக்குள்ளிருந்த ஆக்சிஜன் மிகவும் குறைந்துபோனது! இந்த சூழலில்தான் அந்த 13 பேரையும் மீட்க வேண்டியிருந்தது. அதற்கு மீட்புப் படையினர் படாதபாடு பட்டுவிட்டனர்.” -என்று ஓவியா சொன்னாள்.

“சூப்பர்! அந்த 13 பேரையும் எப்படி மீட்டாங்க அப்படிங்கிறதை பகலவன் நீங்க சொல்றீங்களா?

“சரி... அதாவது, இந்த தகவல் வந்தபிறகு அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலிருந்து 50 சிறந்த நீச்சல் வீரர்களும், தாய்லாந்திலிருந்தே 40 சிறந்த நீச்சல் வீரர்களும் பங்கேற்று அவர்களை மீட்டாங்க. முதல்ல, மாணவர்கள் இருந்த இடத்தை அனுமானம் செய்து மலை மேலிருந்து துளையிட்டு மீட்கலாமா என்று ஆய்வு செஞ்சாங்க. ஆனால், அது தாமதமாகும் என்றறிந்து அதை கைவிட்டனர். பின்னர் ஆக்சிஜன் சிலிண்டருடன் நீச்சலடித்தவாறே உள்ளே சென்றனர்.  கடுமையான குளிர்! 30 ஆம் தேதிதான், மழை சற்றுக் குறைந்தது. 9 நாட்களுக்குப்பிறகுதான் ஜான் பானர்தென், ரிச்சர்டு டேனியல் என்கின்ற பிரிட்டன் நீச்சல் வீரர்கள் மாணவர்களை நேரில் கண்டு, அவர்கள் உயிருடன் இருப்பதை வெளியுலகிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு அவ்விருவரும் வெளியில் வந்து உள்ளே இருக்கும் நிலைமைகளை விளக்கி, பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.”

“அருமை! அருமை! உள்ளே அவர்களின் நிலை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?”

“ஆ... ஆமாம்! அதுதான் இருக்கிறதிலேயே மிகவும் சுவாரசியமானது. அதாவது, பயிற்சியாளரான எக்காபோல் சண்டாவோங்கை பெற்றோர்களும், மற்றவர்களும் முதலில் திட்டித்தீர்த்தார்கள். பிறகு மெல்ல மெல்ல அவரைப்பற்றி தெரிந்து கொண்டதும் அவர்களது கருத்து மாறியது. குகைக்குள்ளே  தங்களுக்கு உதவிகள் வந்து சேருகிற வரையில், உடலில் இருக்கும் சக்தியை எப்படி சேமிப்பது? அங்கிருக்கும் தண்ணீரை எப்படி உபயோகப்-படுத்துவது? தன்னுடைய உணவை பகிர்ந்தளித்தது? தியானம் செய்யச்சொன்னது? இப்படிச் செய்து அவர் 18 நாட்களும் மாணவர்களை பராமரித்தால்தான் 18 நாட்களுக்குப் பிறகும் அவர்கள் அனைவரும் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்” என்று தன்னிச்சையாக கடகடவென்று வார்த்தைகளை கொட்டித்தீர்த்தான் சிகரன்.

“அப்படிப்போடு... மீதியை நான் சொல்கிறேன்.”

“அதாவது... அந்தப் பயிற்சியாளருக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரேயொரு பாட்டியைத்தவிர யாருமில்லை. ஆகவே எல்லோரையும் உறவினர் போலவே எண்ணிப் பழகி வந்திருக்கிறார். அதனால்தான் குகையினுள் சிக்கிக்கொண்ட மாணவர்களை நன்றாக பராமரித்துக் காப்பாற்றிக் கொடுத்தார். ஆனாலும் அவருடைய சறுக்கலினால் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது.”

அனைவரும், “உயிரிழப்பா?!” என்றனர்.

“ஆமாம். இதில் ஈடுபட்ட 90 வீரர்களில் ஒருவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து போயிருக்கிறார். ஓர் உயிர் என்றாலும் அது உயிர்தானே?”

இனியா, “நிச்சயமாக... நீங்க பேசும் போது அவருடைய சறுக்கலினால்னு சொன்னீங்களே! எதை சறுக்கல்னு சொல்றீங்க?”

“எக்காபோல் சண்டாவோங் மிகச்சிறந்த பயிற்சியாளர்! மிகச்சிறந்த மனிதாபிமானி! ஆனால்  ‘எண்ணித் துணிக கருமம்’ அப்படிங்கறதை கடைபிடிக்கலையே!”

அனைவரும், “புரியலையே!?” என்றனர்.

“அந்தப் பயிற்சியாளர் தாய்லாந்துல ஜூலை மாதம் மழைக்காலமுன்னு தெரிஞ்சுக்காம உள்ளே போனது தப்புதானே?”

“அடடே... ஆமாம்”

“அனுபவம்தான் பாடம். அதையும் நாம் மறக்கக்கூடாது. சரி, இப்போ சொல்லுங்க. சாகச முயற்சி தேவையா? தேவையில்லையா?”

“தேவைதான். ஆனால் தகுந்த எச்சரிக்கை தேவை.”

”நாம விவாதித்தது இரண்டு தலைப்புகள் குறித்து தான். ஆனால் சாத்தியமான ஒரு விடை வந்திருக்கிறது. இதுதான் கருத்துப் பரிமாற்றலின் வெற்றி!!”<

 

Share