வாடிகன் | |||
|
அறிமுகம்: வாடிகன் சிட்டி இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய நாடாகும். மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்). மொத்த மக்கள் தொகை 826 ஆகும். பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் இதுவே உலகின் மிகச் சிறிய நாடு. உலகின் கத்தோலிக்க கிறித்துவத்தின் தலைமை மையமாக வாடிகன் நகரம் திகழ்கிறது. வாடிகன் நாட்டின் அரசியல் தலைவர், மதத் தலைவர் மற்றும் அதிபர் திருத்தந்தை (போப்) ஆவார். வாடிகன் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ இல்லமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை (Palazzo Apostolico) என அழைக்கப்படுகிறது. வரலாறு: வாடிகன் என்ற பெயர் இப்பகுதியில் உள்ள வாடிகானஸ் என்கிற ஒரு குன்றின் பெயர். அதிலிருந்து எடுக்கப்பட்டதே இப்பெயர். வாடிகன் என்பதன் பொருள் தோட்டம் என்பதாகும். கிறித்துவ மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே வாடிகன் நகர் உள்ளது. வாடிகன் 1929 வரை இத்தாலியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. வாடிகன் என்ற பெயர் ரோமன் குடியரசின் காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருக்கிறது. கி.பி.ஒன்றாம் நூற்றாண்டில் இப்பகுதியில் தோட்டங்கள், மாளிகைகள் போன்றவை கட்டப்பட்டன. கி.பி.40இல் பேரரசன் நீரோ இங்கு கேளிக்கை கூடத்தை அமைத்தார். கி.பி.64இல் ரோமில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட பிறகு, இப்பகுதி பல கிறித்துவர்களின் பலியிடும் இடமாக மாறியது.
பொருளாதாரம்: இந்நாட்டின் நாணயமாக யூரோ புழக்கத்தில் உள்ளது. வாடிகன் வங்கி என்று அழைக்கப்படும் அய்.ஓ.ஆர் வங்கி உலகளாவிய நிதி நடவடிக்கைகளை நடத்துகிறது. வாடிகன் நகரின் முக்கிய வருமானம் - அருங்காட்சியகங்கள், அலுவலகங்கள், நாணயங்கள், பதக்கங்கள், அஞ்சல் தலைகள், மற்றும் சுற்றுலா, பரிசு பொருள் விற்பனை மூலமாக வருகிறது. மற்ற எந்த வணிகமும் இந்நாட்டில் இல்லை. அதிகப்படியான வருமானம் கத்தோலிக்க பக்தர்களிடமிருந்து கிடைக்கும் நிதியாகும். குற்றம்: வாடிகன் நகரில் அதிகமாகப் பதிவாகும் குற்றங்கள் வழிப்பறி மற்றும் திருட்டு ஆகும். முக்கியமாக இவை தேவாலயப் பகுதியில் சுற்றுலாவுக்கு வருபவர்களிடம் நடக்கிறது. வாடிகன் நகரில் சிறை அமைப்பு ஏதும் இல்லாததால் குற்றம் புரிவோர் இத்தாலி நாட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அரசு முறை: ஆட்சி மொழிகள் இலத்தின், இத்தாலிய மொழி, பிரெஞ்சு, மற்றும் ஜெர்மன் மொழி. சமயச் சார்புடைய முடியாட்சி நடைபெறுகிறது. அரசாங்கம் மற்றும் அதிகாரத் தலைவராக திருத்தத்தை (போப்) உள்ளார். வாடிகனை இத்தாலியிலிருந்து பிரிப்பது ஒரு வெள்ளைக்கோடு மட்டுமே. அய்.நா.சபையில் வாடிகன் உறுப்பு நாடு அல்ல. என்றாலும், அதற்கு அங்கு நிரந்தர பார்வையாளர் அந்தஸ்து உண்டு. இராணுவம் இல்லாத நாடு. ஆயினும் பாதுகாப்பு பலமாக உள்ள நாடு. பாதுகாப்பு: இத்தாலியிலிருந்து வாடிகனுக்கு நுழைய எந்த பாஸ்போர்ட்டும் தேவையில்லை. வாடிகன் நாட்டு நுழைவு வாயில்களை பாதுகாக்கும் உரிமை சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த சிலருக்குத்தான் உண்டு. 1506ஆம் ஆண்டிலிருந்தே போப்பை பாதுகாக்கும் பொறுப்பு இவர்கள் பரம்பரைக்கு வந்து சேர்ந்தது. போப்பைப் பாதுகாப்பதே இவர்கள் கடமை. இந்தப் பாதுகாப்புக் காவலாளிகள் சிவப்பு, மஞ்சள், மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் சீருடை அணிந்து இறகு சொருகப்பட்ட தொப்பியுடனும் ஈட்டியுடனும் நிற்பார்கள். மேலும் சில தகவல்கள்: மத குருமார்கள் கருஞ்சிவப்பு ஆடையை அணிந்து இருப்பார்கள். வாடிகனிலிருந்து இத்தாலியில் உள்ள டைபர் நதிக்கரையில் உள்ள ஒரு பகுதியையும் இணைக்கும் விதமாக அரை மைல் தூரம் ஒரு சுரங்கப்பாதை உண்டு. உலகின் மிகப் பெரிய தேவாலயம் வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் ஆகும். இந்த ஆலயத்தின் முன்னால் 1 இலட்சம் மக்கள் கூடுவதற்கேற்ற மிகப் பெரிய முற்றம் ஒன்று உள்ளது. இந்த ஆலய பால்கனியிலிருந்து பார்த்தால் நாட்டின் அனைத்து பகுதிகளையும் பார்க்கலாம். வாடிகன் ஓவியக் கலையின் தாயகமாக விளங்குகிறது. வாடிகன் தோட்டம் (பூங்கா) 23 எக்டேர் (57 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. வாடிகன் மலை 60 மீட்டர் (200) அடி உயரத்தில் உள்ளது. வாடிகன் வானொலி, வாடிகன் தொலைக்காட்சி போன்றவையும் உள்ளன. வாடிகனில் அஞ்சல்துறை மிக சுறுசுறுப்பாக இயங்குகிறது. வாடிகன் சாம்பியன் கோப்பை கால்பந்து போட்டி இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. மத குருமார்கள் திருமணம் செய்யத் தடை இருப்பதால் இங்கு பெண்கள் வாழ்வதில்லை. சாலை வசதி, ரயில் போக்குவரத்து நல்ல நிலையில் உள்ள நாடு. விமான நிலையம் வாடிகனில் இல்லை. வாடிகன் எல்லா பொருட்களையும், மற்ற நாடுகலிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது.
|